தமிழ்த் திரைப்படங்களுக்கு தாலாட்டுப் பாடல்கள் ஒன்றும் புதிதல்ல. தாலாட்டுப் பாடல்களை விடுங்கள்.
பிறக்காத பிள்ளைகளுக்கும் கூட பாடல் எழுதிய பெருமை தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு உண்டு.
‘அழகு ரதம் பொறக்கும் அது அசைஞ்சி அசைஞ்சி நடக்கும்’ (கற்பூரம்)’ ‘பிள்ளைக் கனி அமுது ஒன்று பிறந்திட வேண்டும், அதை அள்ளி கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேண்டும்’ (பிள்ளைக் கனியமுது), பூப்போல பூப்போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும்’ (நானும் ஒரு பெண்) போன்ற இந்த வகையறா பாடல்களும் கூட தமிழில் ஏராளம்.
(மேலே கண்ட மூன்று பாடல்களை எழுதியவர்கள் முறையே மாயவநாதன், அ.மருதகாசி, கவியரசு கண்ணதாசன்) தாலாட்டுப் பாடல்களைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.
தாலாட்டுப் பாடல்கள், தளிர்களைக் கொஞ்சும் பாடல்களில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களுக்கு இடையே ஒரு பலத்த போட்டாபோட்டியே நடந்திருக்கிறது.
அந்த வரிசையில் ‘பூமாலை நீயே புழுதிமண் மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்’ என்ற பாடல் பராசக்தி (1952) படத்தில் இடம்பெற்ற பாடல்.
பாடலை எழுதியவர் உடுமலை நாராயண கவி அல்லது கலைஞர் மு.கருணாநிதியாக இருக்க வேண்டும்.
‘சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் அழகே ஆராரோ’ என சிலிர்க்க வைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். படம்: பதிபக்தி (1958)
‘வாராயோ வாராயோ, தென்றல் நீயே, வந்து, எந்தன் சேயே, கண்ணுறங்க வீசாயோ’ என்று எங்கள் செல்வி (1960) படத்தில் எழுதியவர் அ.மருதகாசி.
‘நீதான் செல்வம் நீதான அமுதம் நீதான் எந்தன் உலகம்’ என்று பொம்மை (1964) படத்தில் ஆராரோ பாடியவர் வித்வான் வே.லட்சுமணனாக இருக்க வேண்டும்.
‘அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா’ என எழுதியவர் காவியக் கவிஞர் வாலி. படம்: கற்பகம்.
‘பூமரத்து நிழலுமுண்டு பொன்னி நதி காற்றுமுண்டு, காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ’ என எழுதியவர் கவியரசு கண்ணதாசன். படம்: குழந்தை உள்ளம்.
‘வெள்ளிநிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய’ என வேட்டைக்காரன் பட தாலாட்டுப் பாடலை எழுதியவரும் அவர்தான்.
ஆனால் கவியரசரின் தாலாட்டுப் பாடல்களில் பாசமலர் படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் தலைசிறந்த பாடல்.
கவியரசரின் மிகச்சிறந்த கலைப்படைப்பு (மாஸ்டர் பீஸ்) என்றுகூட இந்தப் பாடலைச் சொல்லலாம்.
எண்ணற்ற பாடல்களை எழுதிக் குவித்த கவியரசு கண்ணதாசன் இறுதியில், ‘கண்ணே கலைமானே, கன்னி மயிலென கண்டேன் உனை நானே’ என ஒரு தாலாட்டுப் பாடலையே தனது கடைசி பாடலாக்கி துயில் கொண்டது வியக்கத்தக்கது.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.