1982-ம் ஆண்டு வெளியான ‘காதல் ஓவியம்’ திரைப்படம் எதிர்பார்த்த வணிக வெற்றியை ருசிக்காவிட்டாலும் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டது.
ராதா ஓரளவு அறிமுகமான முகம் என்றாலும், படத்தின் பார்வையற்ற நாயகனாக நடித்திருந்த கண்ணன் (இயற்பெயர் சுனில் கிருபளானி) முதல் படத்திலேயே யாருடா இந்த புதுப்பையன்! இவ்வளவு தத்ரூபமா நடிச்சிருக்கானே என்று கவனிக்க வைத்தவர்.
“வெள்ளிச் சலங்கைகள்” பாடல் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சரியாக நாற்பது ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் வெளியான ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தில் கூலான சர்வதேச அரசியல் லாபியிஸ்ட் வில்லன் அப்யங்கர் சுவாமி எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பல படங்கள் நடித்த முந்தைய தலைமுறை நடிகர் நடிகையர் மறுபிரவேசம் செய்வது சினிமாவில் சகஜமானதுதான் என்ற போதிலும், இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு எவரேனும் கம் பேக் கொடுத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
அதுவும் இரண்டே இரண்டு படங்கள் செய்து நடிப்பிலிருந்தே முழுமையாக விலகிய எவரும் இப்படி மீண்டும் வந்ததாய் நினைவில்லை. அப்யங்கர் கதாபாத்திரத்தை சொந்தக் குரலில் பேசியே நடித்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அவரது ஆங்கில உச்சரிப்பு ஒரு சர்வதேச லாபியிஸ்ட் எனும் பாத்திரத்தின் நம்பகத் தன்மையை நிச்சயம் கூட்டுகிறது. அலட்டல் இல்லாத, மிகையற்ற நடிப்புடன் கவனம் ஈர்க்கிறார் கண்ணன்.
அவருக்கு மீண்டும் நல்ல கதாப்பாத்திரங்கள் அமைய வாழ்த்துகள்.
– வருணன் ஜோ