Take a fresh look at your lifestyle.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘புதிய முகம்’ தந்த படம்!

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வெளியானது ‘ரோஜா’. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகமே ‘இளையராஜா யுகம்’ என்று இயங்கி வந்ததை புரட்டிப் போட்டது அந்த திரைப்படம். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அவர் தந்த இசை ‘புதுசா இருக்கே இது ஒலிக்கிற விதம்’ என்று ரசிகர்கள் கவனத்தைத் திசை திருப்பியது.

அதன்பிறகு, ரஹ்மான் இசையில் புதிதாக எந்தப் படமும் வரவில்லை. மாதங்கள் கடந்தன. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து வந்தது ‘புதிய முகம்’ திரைப்படம். 1993-ம் ஆண்டு மே 28-ம் தேதியன்று அது வெளியானது.

அந்த ஆண்டு ஜென்டில்மேன் படத்திற்கு இசையமைத்தார். பாலகிருஷ்ணா, விஜயசாந்தியின் ‘நிப்பு ராவா’ தெலுங்கு படத்திற்குப் பின்னணி இசை அமைத்தார். தீபாவளியன்று அவரது இசையில் ‘கிழக்கு சீமையிலே’, ‘உழவன்’, ‘திருடா திருடா’ படங்கள் வெளியாகின. அவற்றின் பாடல்களும் பின்னணி இசையும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

இடைவெளிக்குப் பிறகு..!

வழக்கத்திற்கு மாறான கதை சொல்லலுடன், ‘இது கமர்ஷியல் சினிமாவில் வேறு வகை’ என்று சொன்னது ‘ரோஜா’. போதாக்குறைக்கு ‘மணிரத்னம் இப்படித்தான் படம் எடுப்பார்’ என்ற முத்திரையை ஏற்கனவே அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, அஞ்சலி போன்ற படங்கள் உருவாக்கி வைத்திருந்தன. அதனால், ரஹ்மானின் இசை தனித்துவமானதாக இருந்தது அப்படத்தின் வெற்றிக்குத் துணை நின்றது.

அதன்பிறகு மணிரத்னத்துடன் ‘திருடா திருடா’வில் இணைந்தாலும், அப்படம் வெளியாக ரஹ்மான் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் காத்திருக்க நேர்ந்தது.

உடனடியாக இரண்டொரு மாதங்களில் எந்த வெற்றியையும் கொடுக்க இயலாத சூழலை எதிர்கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதனால் ரசிகர்கள் உணர்ந்த இடைவெளியை நிரப்பும் வகையில் வெளியானது ‘புதிய முகம்’.

இதுவும் கிட்டத்தட்ட ரோஜாவைப் போலான, கமர்ஷியல் சினிமாவில் வேறொரு வகையான கதை சொல்லலைக் கொண்ட திரைப்படம். ‘டெலிபோட்டோ பிலிம்ஸ்’ நிறுவனம் வழியே தொலைக்காட்சித் தொடர்களில் தனக்கு வாய்ப்புகள் தந்த சுரேஷ் மேனன் உடன் ரஹ்மான் இணைந்த படம் இது.

சுரேஷ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம் ‘புதிய முகம்’. இதில் வினீத் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிளாஸ்டிக் சர்ஜரி எனும் மருத்துவ சிகிச்சையை மையமாகக் கொண்ட ‘க்ரைம் த்ரில்லர் ட்ராமா’ ஆக இதனை ஆக்கியிருந்தார் சுரேஷ் மேனன்.

அந்த ‘ட்ராமா’ ரசிகர்களுக்குப் போரடித்துவிடாமல் பார்த்துக் கொள்கிற பணியைக் கவனித்துக் கொண்டார் ரஹ்மான். அதற்கேற்ப முத்தான பாடல்களை வைரமுத்துவுடன் இணைந்து தந்தார்.

இனிக்கும் மெல்லிசை!

‘ரோஜா’வுக்கு இணையான அதிர்வுகளை உண்டுபண்ணும் வகையில் ‘புதிய முகம்’ பாடல்கள் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அது பொய்யாக்கவில்லை.

சுஜாதா பாடிய ‘நேற்று இல்லாத மாற்றம்’ மற்றும் பி.சுசீலாவின் ‘கண்ணுக்கு மை அழகு’ பாடல்கள் சட்டென்று ரசிகர்களைப் பற்றிக் கொண்டன. ‘கண்ணுக்கு மை அழகு’ பாடல் உன்னி மேனன் குரலிலும் ஒலித்தது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடன் அனுபமா பாடிய ‘ஜூலை மாதம் வந்தால்’ பாடல் இளமையின் குதூகலத்தைக் கேட்பவருக்குள் உண்டுபண்ணியது. இன்றும் கூட ‘நாஸ்டால்ஜியா’வை தொட விரும்பும் 90’ஸ் கிட்ஸ்கள் இப்பாடலை ஒலிக்கச் செய்து, அதன் பின்னே பாடினால் சில நினைவுகளைப் பெறலாம்.

இது போக ‘இதுதான் வாழ்க்கை என்பதா’ மெலடி மெட்டும் இதில் உண்டு. இப்பாடல்கள் ‘இது ஒரு மெல்லிசை சரம்’ என்ற உணர்வை உண்டாக்கின.

அதிலிருந்து வேறுபட்டு, கடலோரத்தில் நடக்கிற ஒரு இரவு விருந்தில் கலந்துகொண்ட உணர்வை தந்தது ‘சம்போ சம்போ’ பாடல். சின்ன சின்ன ஆசை பாடிய மின்மினியை இப்பாடலில் மால்குடி சுபா உடன் இணைத்துப் பாட வைத்திருந்தார் ரஹ்மான்.

இந்த ‘காம்பினேஷன்கள்’ அனைத்துமே அந்த காலகட்டத்தில் புதிதாக இருந்தது. கேட்டதுமே ரசிகர்களைக் கொண்டாட வைத்தது.

‘ஆஹா.. ஓஹோ..’ என்று புகழத்தக்க ஸ்கிரிப்டாக ‘புதிய முகம்’ இல்லாவிட்டாலும், ‘ஓகே.. ஒரு தடவை பார்க்கலாம்’ என்று சொல்ல வைக்கிற வகையில் இருந்தது அப்படம். அதற்குத் துணையாக நின்ற ரஹ்மான் தனக்கென புதிய முகத்தை உருவாக்கினார்.

ஒரு மெலிதான கோடு போன்ற கதையைக் கொண்டிருந்தாலும், இன்னும் பல பாத்திரங்களோடு சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம் எனும் வகையில் இருந்தது ‘புதிய முகம்’. படத்தொகுப்பாளர் முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் ஆர்.டி.சேகர் உட்பட இதில் பணியாற்றிய பலர் திரையுலகத்தில் அப்போது புதுமுகங்கள் தான்.

இதில் ரேவதி, சுரேஷ்மேனன், வினீத், கஸ்தூரி, ரவிச்சந்திரன், ராதாரவி, நாசர், சின்னி ஜெயந்த், ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இயக்குனர் கே.எஸ்.அதியமான் இதில் வசனங்களை எழுதினார். இணை இயக்குனராகப் பணியாற்றினார்.

இந்த படத்தில் உண்டான நட்பின் காரணமாக, ‘தொட்டாசிணுங்கி’, தலைமுறை ஆகிய படங்களில் ரேவதியை நாயகியாக நடிக்க வைத்தார் அதியமான்.

‘புதிய முகம்’ படத்திற்குப் பிறகு, அரவிந்த் சாமியை நாயகனாகக் கொண்டு ‘பாசமலர்கள்’ தந்தார் சுரேஷ் மேனன். அதுவும் கூட, வழக்கத்திற்கு மாறான ‘ரொமான்ஸ் ட்ராமா’வாகவே இருந்தது. ஆனால், புதிய முகம் போல அப்படம் பெரிய கவனிப்பைப் பெறவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களைக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிக்கிறவர்கள் பலர் நம்மைச் சுற்றி இருக்கின்றனர். அந்த நெடுங்கால ரசிகர்கள் பலரிடம், ‘ஆரம்பகாலத்தில் ரஹ்மான் தந்த பாடல்களின் இனிமை ஈடு செய்ய முடியாதது’ என்ற எண்ணம் உண்டு. சமூகவலைதளங்களில் அதனை அவ்வப்போது காண முடியும்.

அப்படிப்பட்ட ரசிகர்களின் பேவரைட் ஆக இன்றும் இருக்கின்றன ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘ஜூலை மாதம் வந்தால்’ பாடல்கள். அதனைத் தந்த வகையில் நம் நினைவலைகளைத் தொடுகிறது ‘புதிய முகம்’ திரைப்படம்!

  • மாபா

#ரோஜா #ஏஆர்ரஹ்மான் #இளையராஜா #ஜென்டில்மேன் #கிழக்குசீமையிலே #உழவன் #திருடாதிருடா #மணிரத்னம் #அக்னிநட்சத்திரம் #நாயகன் #தளபதி #அஞ்சலி #புதியமுகம் #சுரேஷ்மேனன் #வைரமுத்து #எஸ்பிபாலசுப்பிரமணியம் #roja #arrahman #நேற்றுஇல்லாதமாற்றம் #ஜூலைமாதம்வந்தால் #nettruilathamaatram #julymaathamvanthal #agninachathram #manirathnam #spb #puthiyamugam