எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது.
நீதிமன்றங்களுக்குச் சென்று சில எழுத்தாளர்கள், நிவாரணம் பெற்ற சம்பவங்களும் உண்டு.
இப்படிப்பட்ட ‘களவுத் தொழிற்சாலை’யில் பஞ்சு அருணாசலம் போன்ற அபூர்வ மனிதர்களும், தொழில் செய்து விட்டுப்போயிருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்.
இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கம் கொண்ட பஞ்சு அருணாசலம் சினிமாவில் பல தளங்களில் இயங்கியவர்.
கவிஞர், கதாசிரியர், தயாரிப்பாளர், சினிமா பத்திரிகை ஆசிரியர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
அவரே ஒரு அற்புதமான எழுத்தாளர் என்ற போதிலும், திறன்மிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை நல்ல விலை கொடுத்து வாங்கிப் படமாக தயாரித்துள்ளார்.

தினமணி கதிரில் சுஜாதா எழுதிய குறுநாவல் ‘காயத்ரி’. அதன் கதை இதுதான்:
பெண்களை ஏமாற்றி கல்யானம் செய்து, அவர்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ (நீலப்படம்) எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஒரு கும்பல். அவர்களிடம் மாட்டிக் கொண்ட பெண்ணை, துப்பறியும் நிபுணர் கணேஷ் மீட்கிறார். இது ’ஒன் லைன்’.
வெளியான நேரத்தில் சர்ச்சையை உண்டாக்கிய கதை. பலர் சுஜாதாவின் தலையில் குட்டினர்.
’இப்படியெல்லாம் நீங்கள் எழுதலாமா?’ என அவருக்கு நெருக்கமானவர்கள் கோபித்து கொண்டார்கள்.
தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்பதால், அந்தக் கதையை படமாக்க விரும்பினார் பஞ்சு. சுஜாதாவிடம் பேசினார். உடனடியாக கதையின் ரைட்சை எழுதிக் கொடுத்தார் சுஜாதா.
காயத்ரி எனும் பெயரிலேயே அந்த படம் தயாரிக்கப்பட்டது. பெண்களை ஏமாற்றும் பேர்வழியாக ரஜினியும், துப்பறியும் நிபுணராக ஜெய்சங்கரும் நடித்தனர்.
காயத்ரி கதையை மேலோட்டமாக மேய்ந்திருந்த சினிமாக்காரர்கள் சிலர், ’பஞ்சு ‘ப்ளூ ஃபிலிம்’ எடுக்கிறார்’ என கொளுத்தி போட்டனர். அதுவே படத்துக்கு விளம்பரமாக அமைந்து, காயத்ரியை வெற்றி பெற வைத்தது.
ரஜினிக்கு முதல் வெள்ளிவிழாப் படமாக அமைந்த ப்ரியாவும் சுஜாதாவின் கதைதான். குமுதத்தில் அவர் எழுதிய கதை. இந்தக் கதையையும் சுஜாதாவிடம் பேசி, ‘ரைட்ஸ்’ வாங்கி பஞ்சுவே சினிமாவாகத் தயாரித்தார்.
இது முழுக்க முழுக்க சிங்கப்பூரில் நடைபெறும் கதை. தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவான படம். ரஜினி, ஸ்ரீதேவி, அம்பரீஷ் பிரதான வேடத்தில் நடித்தனர்.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் இளையராஜா பின்னி எடுத்திருப்பார். படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
ஆனால், தனது கதை படமாக்கப்பட்ட விதம் சுஜாதாவுக்கு பிடிக்கவில்லை. திரைக்கதை எழுதிய பஞ்சு, தனது இஷ்டத்துக்கு நகைச்சுவை, சென்டிமென்ட், டூய்ட் என நிறைய ‘எக்ஸ்டிரா’ அம்சங்களை கலந்திருந்தார்.

இதனால் வருத்தமடைந்த சுஜாதா, இதனை பருவ இதழ் ஒன்றில் எழுத்திலேயே பதிவு செய்தார்
’சினிமாவுக்கு ஏன் கதை கொடுத்தீங்கன்னு என்னை சிலர் கேட்கிறாங்க. எனது கதையை இப்படி கெடுத்துட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு. என்ன செய்வது? அவங்க விலை கொடுத்து வாங்கினாங்க. இஷ்டத்துக்கு எடுத்துட்டாங்க’’ என அங்கலாய்த்திருந்தார், சுஜாதா.
இதன் பின்னர், சுஜாதாவிடம் இருந்து சினிமாவுக்கு, பஞ்சு அருணாசலம் கதை ஏதும் வாங்கவில்லை.
பின்னாட்களில் ஷங்கர், மணிரத்னம் ஆகியோருடன் சுஜாதா இணைவதற்கு, பஞ்சு அருணாசலமே, பிள்ளையார் சுழி போட்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
ரஜினிகாந்தை புதிய பரிமாணத்தில் காட்டிய ’புவனா ஒரு கேள்விக்குறி’ மகரிஷியின் கதை. இதற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் பஞ்சு.
இந்தப் படத்தில் முதலில் சிவகுமார் கதாநாயகனாகவும், ரஜினி வில்லனாகவும் நடிக்க இருந்தனர். இந்தப் படம் உருவான கால கட்டத்தில் ரஜினி, வில்லனாகத்தான் நடித்துக் கொண்டிருந்தார்.
திரைக்கதை எழுதி முடித்த பஞ்சுவுக்கு திடீரென ஒரு யோசனை. சிவகுமாரை வில்லனாகவும், ரஜினியை நாயகனாகவும் மாற்றிபோட்டால், படத்துக்கு ஒரு புதிய கலர் கிடைக்கும் என கருதினார்.
தயாரிப்பாளரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் அதனை ஒப்புக்கொண்டனர். வில்லன் வேடம் ஏற்க சிவகுமாரும் மறுப்பு சொல்லவில்லை.
கன்னியாகுமரி, தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
ஒரே நாளில் 10 சீன்கள் வரை ’ஷுட்’ செய்தார், எஸ்.பி.முத்துராமன்.
மொத்த படத்தையும் பத்தே நாட்களில் முடித்து விட்டார் என்பதை இன்றைய தலைமுறை நம்பாது. ஆனால் அதுவே உண்மை. படம் சூப்பர் டூப்பர் ’ஹிட்’.
எழுத்தாளராக பஞ்சுவால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்ட ஒருவர், பின்னாட்களில் இயக்குநராகவும் உருவெடுத்தார். அவர் தாமரை செந்தூர் பாண்டி.
குற்றாலத்தில் பஞ்சு அருணாசலம் தயாரித்த கழுகு ‘ஷுட்டிங்’ நடந்து கொண்டிருந்தது. அப்போது அவருக்கு தாமரை செந்தூர் பாண்டியை சந்திக்கும் வாய்ப்பு நேரிட்டது. அவர் நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்தவர்.

தாமரை எழுதிய நாவல் ஒன்றை கணிசமான பணம் கொடுத்து வாங்கினார். அந்த நாவல் தான் சிவகுமார் – ராதா நடிப்பில் உருவான ‘ஆனந்த ராகம்’.
இந்தப் படம் உருவான நேரத்தில் தாமரை செந்தூர் பாண்டி அவ்வப்போது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்.
கோடம்பாக்கம் ஓரளவு புலப்பட்டது. டைரக்ஷன் முயற்சிகளில் இறங்கினார். ஆட்கள் கிடைத்தார்கள். அந்தப் பழக்கத்தில் தாமரை செந்தூர் பாண்டி இயக்கிய படமே ‘குருவம்மா’. தேவயானி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இன்னும் கொஞ்ச காலம் பஞ்சு அருணாசலம் வாழ்ந்திருந்தால், மேலும் பல எழுத்தாளர்களையும் சினிமாவுக்குள் கொண்டு வந்திருப்பார்.
– பாப்பாங்குளம் பாரதி.