Take a fresh look at your lifestyle.

மாலைக்கண் நோயாளியாக சிவாஜி நடித்த படம்!

தமிழ் சினிமாவில், மாலைக்கண் நோயை காமெடிக்கு பயன்படுத்திய படம் சின்னதம்பி. பி.வாசு இயக்கத்தில், பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக இந்தப் படத்தில் கவுண்டமணிக்கு மாலைக்கண் நோய்.

‘எத்தனை லட்சம் கொடுத்தாலும் 6 மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டேன்’ என்பார் கவுண்டமணி. திருமணம் செய்துகொண்டு மாலை 6 மணிக்கு மேல் அவர் படும் அவஸ்தைகளையும் தவிப்புகளையும் ரசனையாக சொன்னது அந்தப் படம்.

ஆனால், மாலைக்கண் நோயை முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய படம், ‘தவப்புதல்வன்’ என்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு மாலைக்கண் பிரச்னை. அந்த நோயால் அவர் படும் பாட்டை சீரியசாக சொல்லியிருப்பார்கள்.

சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பண்டரிபாய், வி.கோபாலகிருஷ்ணன், காந்திமதி, சோ, மனோரமா, செந்தாமரை உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை, முக்தா சீனிவாசன் தயாரித்து, இயக்கி இருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இதன் கதைக்கு இன்ஸ்பிரேஷன் இயக்குநர் முக்தா சீனிவாசனின் நண்பர்!
முக்தாவுக்கு, கண்ணாடி சீதாராமன் என்ற நண்பர் இருந்தார். அவருக்கு மாலைக்கண் நோய் பிரச்னை. ஆறு மணிக்கு மேல் அவரால் பார்க்க முடியாது. அதனால், அதற்குள்ளாகவே கடையில் டிபன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்.
இல்லை என்றால் முக்தாவே வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வருவார். இந்த நோயை தனது படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று முக்தா சீனிவாசனுக்கு பலநாள் யோசனை.

இதை எழுத்தாளர் தூயவனிடம் சொன்ன முக்தா சீனிவாசன், சினிமாவுக்கு ஒரு கதை ரெடி பண்ணச் சொன்னார். அந்த ‘நாட்’டை வைத்து அவர் உருவாக்கிய கதைதான் ‘தவப்புதல்வன்’!

இந்தக் கதையை சிவாஜியிடம் சொன்னதும், புதுமையான கதைகளை விரும்பி ஏற்கும் சிவாஜி கணேசன், உடனே ஒப்புக்கொண்டார்.

முக்தா சீனிவாசன் படத்தில், சிவாஜிக்கு மாலைக்கண் நோய் என்பது அவர் அம்மா, பண்டரிபாய்க்கு தெரியாது.
தனக்கு மாலைக்கண் நோய் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று சிவாஜி தவிப்பதையும் இதைத் தெரிந்துகொண்டு சிஐடி சகுந்தலா, அவரை ஆட்டிப் படைக்கும் விதமாகவும் கதைப் பின்னப்பட்டிருக்கும்.

1972 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், சிவாஜி, கே.ஆர்.விஜயா உட்பட அனைவரின் நடிப்பும் அப்போது பேசப்பட்டது.

– அலாவுதீன்