Take a fresh look at your lifestyle.

மனோஜ் பட்நாகரின் இசையை நினைவூட்டும் ‘குட்லக்’!

எண்பதுகளின் நடுப்பகுதியில் இளையராஜாவின் ராஜாங்கத்தை அசைக்கப் பல இசையமைப்பாளர்கள் வந்தார்கள்; சென்றார்கள்.

டி. ராஜேந்தர், சங்கர் – கணேஷ் பெற்ற வெற்றிகளுக்கு நடுவே சந்திரபோஸ், தேவேந்திரன், வி.எஸ். நரசிம்மன், எஸ்.ஏ. ராஜ்குமார், சங்கீதராஜன் என்று ஒவ்வொருவரும் தத்தமது திறமையை வெளிப்படுத்தினர்.

அந்த வரிசையில் தனித்து நின்றது மனோஜ் – கியான் ஜோடி.

காரணம், அவர்கள் இசையமைத்த ‘ஊமை விழிகள்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக அமைந்ததுதான்.

வெளிச்சம், உழவன் மகன், மேகம் கருத்திருக்கு, உரிமை கீதம், செந்தூரப் பூவே, தாய்நாடு என்று சில தமிழ் படங்களுக்கு இசையமைத்தது இந்த இணை. பிறகு மனோஜும் கியானும் தனித்தனியாகப் பிரிந்தனர்.

கியான் வர்மா தனியாக ‘இணைந்த கைகள்’, ‘சத்தியவாக்கு’ படங்களுக்கு இசையமைத்தார்.

மனோஜ் பட்நாகர் சில தெலுங்கு, இந்திப் படங்களைத் தயாரித்தார்; அவற்றுக்கு இசையமைத்தார். சிலவற்றில் அவரது பெயர் மனோஜ் சரண் என்று குறிப்பிடப்பட்டது.

இவர் தமிழில் இரண்டுப் படங்களை இயக்கவும் செய்திருக்கிறார் என்பது இளம் தலைமுறையினருக்கு ஆச்சர்யமளிக்கும் தகவலாக இருக்கும். அவையிரண்டுமே ‘மியூசில் ஹிட்’ வரிசையில் இணைபவை.

மும்பை டூ சென்னை!

ஆக்ராவிலுள்ள கல்லூரியொன்றில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துவிட்டு, திரையிசை மீதான ஆர்வத்தில் மும்பைக்கு இடம்பெயர்ந்தவர் மனோஜ் பட்நாகர். கியான் வர்மா உடன் இணைந்து, ‘ரூஹி’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மனோஜ் – கியான் என்ற பெயரில் இந்த ஜோடி தந்த ஹிட்களை கண்டு, ஆபாவாணன் – அரவிந்தராஜ் கூட்டணி இவர்களைத் தமிழுக்கு அழைத்து வந்தது.

‘தோல்வி நிலையெனக் கொண்டால்’ உட்பட என்றென்றைக்கும் நினைவில் நிற்கிற பாடல்களை ‘ஊமை விழிகள்’ படத்திற்காகத் தந்தது இந்த ஜோடி.

அதன் தொடர்ச்சியாக, சென்னையிலேயே ஸ்டூடியோ அமைத்து தங்குகிற அளவுக்கு, தமிழ் படங்களில் இவர்கள் பணியாற்றினர்.

இந்த ஜோடி பிரிந்தது நாம் அறிந்ததே. பிறகு கியான் வர்மா இசையமைத்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகு, அவர் தமிழ் திரையுலகை விட்டு விலகினார்.

ஆனால் தெலுங்கில் பிரசாந்தை வைத்து ‘பிரேம சிகரம்’ எனும் படத்தைத் தயாரித்த மனோஜ் பட்நாகர், பின்னர் தொடர்ச்சியாகச் சில படங்களை தமிழ், இந்தி மொழிகளில் ஆக்கினார். ஒரு இயக்குநராகவும் ஆனார்.

இரண்டு ‘மியூசிகல் ஹிட்’!

தமிழில் விஜய், ரம்பா, ரகுவரன், பானுபிரியா, நிழல்கள் ரவி, ராதாரவி, எம்.என். நம்பியார், சார்லி, அஞ்சு, தாமு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘என்றென்றும் காதல்’ படத்தைத் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் உடன் இணைந்து தயாரித்தார் மனோஜ் பட்நாகர். அதனை எழுதி இயக்கியதோடு இசையமைக்கவும் செய்தார்.

தொண்ணூறுகளில் காதலும் குடும்ப செண்டிமெண்டும் கலந்த படங்கள் இந்தித் திரையுலகை ஆக்கிரமித்தன.

அதன் தாக்கத்தில் தமிழில் மனோஜ் பட்நாகர் தந்த படமே ‘என்றென்றும் காதல்’. இதன் வசனத்தை கிரேஸி மோகன் அமைத்திருந்தார்.

இப்படத்திற்காக மனோஜ் பட்நாகர் தந்த ‘கண்களா மின்னலா’, ‘ஓ தென்றலே’, ‘உலகெல்லாம் ஒரு சொல் காதல்’, ‘ஜலக்கு ஜலக்கு’ பாடல்கள் ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்தன. இதில் சில பாடல்கள், காட்சிகள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டன.

ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் பெற்ற வெற்றியின் காரணமாக, தியேட்டர்களிலும் இப்படம் நல்ல வரவேற்பைக் கண்டது.

அந்த மாயாஜாலத்தை மீண்டும் ஒருமுறை நிகழ்த்தும் வகையில், கிட்டத்தட்ட அதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு மனோஜ் பட்நாகர் இசையமைத்து, இயக்கி, தயாரித்த படம் ‘குட்லக்’.

நாயகன், அவரது அண்ணன், அண்ணி என்று தொடங்கும் இதன் கதை, பின்னர் நாயகியின் பக்கம் நகர்ந்து, அதனைத் தொடர்ந்து ஒரு குழந்தையைச் சுற்றி வரும்.

அவருக்கும் நாயகனுக்குமான பந்தத்தைத் திரையில் காட்டி, அதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பேசி, அதற்கான தீர்வுகளைச் சொல்லி ‘சுபம்’ எனும் டைட்டில் போடும்வரை எட்டு திசைகளிலும் நீண்டது இதன் திரைக்கதை.

என்னதான் ஜவ்வாக திரைக்கதை நீண்டாலும், மலேசியா போன்ற ஒரு வெளிநாட்டைத் திரையில் காட்டுவதும், ரசிகர்களை முனுமுனுக்க வைக்கும் பாடல்களைக் கொண்டிருந்தால் வெற்றியைச் சுவைக்கலாம் என்று களமிறக்கப்பட்டது ‘குட்லக்’.

ஆனால், அந்த தன்னம்பிக்கையைக் குலைக்கும்விதமாகச் சுமார் வெற்றியைப் பெற்றது இப்படம்.

அதேநேரத்தில், அப்போது ‘குட்லக்’ பார்த்த சில ரசிகர்களின் மனங்களில் இப்படத்தின் பாடல்கள் ஒட்டிக்கொண்டது.

இதோ இந்த நெஞ்சோடு, காதல் செய்யும் காதலர்க்கெல்லாம், ஜூலை பதினாறு வந்தால், நானே நீ நீ நீ நீதானே நான் பாடல்கள் ‘அழகழகான’ டூயட்களாக அமைந்தன.

இவற்றோடு ‘இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே’ என்று முழுக்க இந்திப்பட சாயலில் அமைந்த பாடலும் இதிலுண்டு. இதில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து.

இப்படத்தில் இடம்பெற்ற ‘கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு’ பாடல், அந்தாக்‌ஷரி பாணியில் வெவ்வேறு பாடல்களைப் பாடுவது போன்று அமைந்திருக்கும். அதனூடே ஏடாலீட ஜோக்குகளை வரிகளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டது இப்பாடல்.

கிட்டத்தட்ட இதே தொனியில் ‘ஆளவந்தான்’ படத்தில் வரும் ‘சிரி சிரி’ பாடலையும் எழுதியிருப்பார் வைரமுத்து. பாடல் வரும் சூழல் கூடத் திரைக்கதையில் ஒரேமாதிரியாகத்தான் கையாளப்பட்டிருக்கும்.

வைரமுத்து போன்ற ஒருவர் இப்படியான கவனக்குறைவைச் செய்ய வாய்ப்பில்லை. இந்த ஒற்றுமையின் காரணம் சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கே வெளிச்சம். ‘சிரி.. சிரி..’ பாடல் போல ‘கடிக்கும் ஜோக்கு ஒண்ணு’ பெரிதாகக் கவனிக்கப்படவில்லை என்பதால் அக்காலகட்டத்தில் இது பெரிதாக விவாதிக்கப்படவில்லை என்றெண்ணுகிறேன்.

’குட்லக்’ படம் பெரிய வெற்றியைப்பெறாத காரணத்தால், 2003ஆம் ஆண்டு மீண்டும் மும்பைக்கு இடம்பெயர்ந்தார் மனோஜ். அங்கு சாக்லேட், சுக்ரியா, செஸ் உட்படச் சில படங்களைத் தயாரித்தார்.

தற்போது சன் நெக்ஸ்ட் உட்படச் சில ஓடிடி தளங்களில் ‘குட்லக்’ திரைப்படம் காணக் கிடைக்கிறது. இப்படத்தையும் சரி, பாடல்களையும் சரி, இன்றும் சில ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அது போன்ற ரசிகர்களைக் கவர்ந்திழுப்பது சாதாரண விஷயமில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த ரசிகர்களின் விருப்பங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

குட்லக் படத்தில் பணியாற்றியவர்களுக்கு இதனை விட வேறென்ன மகிழ்ச்சியைத் தந்துவிடப் போகிறது?!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#இசையமைப்பாளர்கள்_மனோஜ்_கியான் #Musicdirectors_Manoj_Gyan #இசையமைப்பாளர்_மனோஜ்பட்நாகர் #Musicdirector_Manoj_bhatnagar #ரூஹி #Roohi #ஊமை_விழிகள் #Oomai_vizhigal #கியான்_வர்மா #Gyan_varma #வெளிச்சம் #Velicham #உழவன்_மகன் #Uzhavan_magan #மேகம்_கருத்திருக்கு #Megam_karuthirukku #உரிமை_கீதம் #Urimai_geetham #இணைந்த_கைகள் #Inaintha_kaigal #சத்தியவாக்கு #Sathyavakku #என்றென்றும்_காதல் #Endrendrum_kadhal #குட்லக் #Goodluck