Take a fresh look at your lifestyle.

இரு மதத்தவர்களை இன்றும் இணைக்கும் மருதநாயகம்!

கமலின் நீண்டகால கனவான மருதநாயகம் படத்தைப் பற்றி நமக்கு அரசல் புரசலாகத் தெரியும்.

உண்மையான மருதநாயகத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? அவருடைய வீரமான வரலாற்றைப் பற்றிய சின்னஞ்சிறு பதிவு.

256 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம். அந்த வீரனை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் படை வீரர்கள், திடலில் கூட்டம் திரளாகக் கூடியிருக்கிறது.

நடுவில் நின்ற மாமரத்துக் கிளையில் தூக்குக்கயிறு. முன்னால் கொண்டுபோய் அந்த வீரனை நிறுத்துகிறார்கள்.

அந்திச் சாய்கிற நேரத்தில் வீரனின் கழுத்தை இறுக்குகிறது தூக்குக்கயிறு. சுற்றிலும் இருந்த ஜனக்கூட்டம் பரிதவிக்கிறது.

“சா்ா்ா்ா்க்” கயிறு அறுந்து விழுகிறது. வீரனின் உயிர் போகவில்லை. மறுபடியும் இன்னொரு கயிறு. அதுவும் அறுந்து போகிறது.

படைவீரர்களுக்கு ஒரே குழப்பம். தூக்கிலிடுவதில் இவ்வளவு சிக்கலா? கால்களில் கனத்த குண்டுகளுடன் தொங்கவிட்டும் சாகவில்லையே”

– ஆலோசிக்கிறார்கள்.

“அவனது தோளில் ஒரு தாயத்து மறைக்கப்பட்டிருக்கிறது. மந்திர சக்தியுள்ள அந்தத் தாயத்தை எடுக்காத வரை அவனைக் கொல்ல முடியாது” – வயதான – ஆலோசனை வருகிறது.

அதன்படி கையிலிருந்த தாயத்தை வெட்டி எடுத்துப் பின் தூக்கிலிடுகிறார்கள்.

சரிந்த பிணத்தின் மீது உயிர் இருக்குமோ சந்தேகப்பட்டு தலை, கை, கால், முண்டமெனத் தனித்தனியாக வெட்டுகிறார்கள்.

தலைப்பகுதி திருச்சியிலும், கைகள் பாளையங்கோட்டையிலும், கால்கள் பெரியகுளத்திலும் புதைக்கப்படுகின்றன.

உடம்பு புதைக்கப்பட்டிருப்பது மதுரையிலுள்ள சம்மட்டிபுரத்தில். பிணமான பிறகும் சிதைக்கப்பட்ட அந்த வீரன் கான்சாகிப் என்ற மருதநாயகம்.

உடம்பு புதைக்கப்பட்ட அந்த இடத்தில் ஒரு தர்ஹா. உள்ளே உடல் புதைக்கப்பட்ட இடம்.

வருஷா வருஷம் ரம்ஜானுக்கு மறுநாள் கொடியேற்றப்பட்டு திருவிழா நடக்கிறது கான்சாகிப்பிற்கு.

திருமணத்திற்கு, வியாதிகளுக்கு வேண்டிக்கொண்டு அந்தத் தர்ஹாவுக்கு முன்னால் சேவல், ஆடு பலி கொடுக்கிற மதங்களைக் கடந்த ஜனங்கள்.

இந்துவாகப் பிறந்து முஸ்லீமாகி கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட மருதநாயகம் தான் – இறந்த பின்பும் கூட- இன்று வரை முஸ்லீம், இந்துக்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.

*
– மணா “தமிழகத் தடங்கள்” நூலிலிருந்து.