Take a fresh look at your lifestyle.

ரஜினியின் சினிமா வாழ்வில் மைல் கல்லாக அமைந்த பாடல்!

பி.வாசுவின் கனவு பலித்த தருணம்

இயக்குநர் பி. வாசு, இளையராஜாவை அணுகி ‘அம்மா’ சென்டிமெண்ட் உள்ள ஒரு பாடல் காட்சி தன்னுடைய ‘மன்னன்’ திரைப்படத்தில் வைக்கப் போவதாகக் கூறினார். அவரே பாடலின் மெட்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறினார்.
 
“உங்கள் ‘ஜனனி ஜனனி’ பாடலைப் போன்று சிறப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
ராஜா ஒரு நிமிடம் யோசித்தார். அந்தப் பாடல், ‘கல்யாணி’ ராகம். அதே ராகத்தில் வாசு அவர்களுக்கு மெட்டு அமைத்துக் கொடுத்தார் ராஜா.
 
சொல்லப்போனால் “ஜனனி ஜனனி” பாடலேயே சிறு மாற்றங்களுடன் மெட்டை ‘ரீ-வர்க் (Rework) செய்து கொடுத்தார்.
 
வாசு அவர்களுக்கும் சந்தோஷமே. கவிஞர் வாலி வெண்ணெய்யை உருக்கும் வரிகளை எழுதினர்.
 
ஆனால், பிரச்சினை அங்கிருந்து தான் ஆரம்பித்தது.
 
பாடல் காட்சியை ஒளிப்பதிவு செய்ய ரஜினி செட்டுக்குள் நுழைந்தார். வாசு அவர்கள், ரஜினியிடம் காட்சி அமைப்பைக் கூறியவுடன்,
 
ரஜினி “சார், நான் ஆக்ஷன் ஹீரோ! அம்மா சென்டிமென்ட் சீன் செய்ய முடியாது” என்று கூறி கிளம்பிவிட்டார். வாசு அவரை எவ்வளவு வற்புறுத்தியும், ரஜினி பிடிவாதம் பிடித்தார்.
 
இரண்டு நாள் ஷூட்டிங் கேன்சல்! பிரச்சினை ராஜாவின் காதுகளுக்கு எட்டியது. அவர் ரஜினியை ஸ்டுடியோவிற்கு அழைத்து,
 
“ரஜினி, இந்தப் பாடல் காட்சி உன் வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமையும். நம்பிக்கையுடன் செய் என்று அறிவுரை கூற ரஜினி “சரி” என்று ஒப்புதல் அளித்தார். வாக்கு பலித்தது.
 
ராஜா அவர்கள் அவர்களின் குறுக்கிடு இல்லாவிடின், இப்பாடல் அரங்கேறி இருக்குமா என்பது சந்தேகம் தான்.
 
‘மன்னன்’ திரைப்படம் கன்னட மொழி திரைப்படமான, ‘Anuraga Aralithu’ வின் ரீமேக். பண்டரி பாய் அந்தப் படத்தில் நாயகனின் பக்கவாதம் உள்ள தாயாராக நடித்திருந்தார். தமிழிலும் அவ்வாறே நடித்தார்.
 
விதி அவர் வாழ்க்கையில் விளையாடியது. 1994-ம் ஆண்டில், அவர் பயணித்த வாகனம் மீது ஓரு லாரி மோதியது. அவரது இடது கைக்கிட்ட தட்ட துண்டிக்கப்பட்டது.
 
அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா, அவருடைய மருத்துவச் செலவுக்கு உதவினார்.
 
1997-ம் ஆண்டில் வெளிவந்த ‘அருணாச்சலம்’ திரைப்படத்தில் பண்டரிபாய் அம்மாவிற்கு அப்பட வசூலிலிருந்து ஒரு பகுதியை ரஜினி ஒதுக்கினார்!
 
இதை என்னவென்று சொல்வது? ரஜினி அந்தப் பாடலில் நடிக்கவில்லை. வாழ்ந்தார் என்பது தான் உண்மை!
 
ரஜினியும் தாயாரின் பெயர், ‘ஜிஜா பாய்’. ரஜினி எட்டு வயதை எட்டியபொழுது அவரது தாயார் தவறிவிட்டார். அவர் நடித்த நூற்றுக்கணக்கான படங்களில், பல்வேறு நடிகைகள் அவருக்குத் தாயாராக நடித்துள்ளனர்.
 
ஆனால், மன்னன் திரைப்படத்தில் அவருக்குத் தாயாக நடித்த பண்டரி பாய், பலர் மனதில் நின்றது, இரு ‘தாயார்களின்’ பெயர் ஒற்றுமை வியக்கத்தக்கது.
 
– நன்றி: ராமமூர்த்தி முகநூல் பதிவு