தமிழ் சினிமா பல கலைஞர்களைக் கடந்து வந்திருக்கிறது. அவர்களில் பலர் நடிகர்களாக, நடிகைகளாக, குணசித்திர மற்றும் நகைச்சுவை கலைஞர்களாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக, இசையமைப்பாளர்களாக, கதாசிரியர்களாக, இதர தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பரிமளிக்கும் கனவோடு முயற்சிகள் பல செய்து, அவை எதுவும் நிறைவேறாமல் போவது பெருங்க்கொடுமை.
அதனாலேயே, சினிமாவில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தால் போதும் என்று சிலர் நினைத்துவிடுகின்றனர். திரையுலகில் கிடைக்கிற பணிகளைச் செய்து அல்லது எந்த வாய்ப்பும் கிடைக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்து திருப்திப்பட்டுக் கொள்கின்றனர்.
பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சினிமாவை நேசிக்கிற எவரிடமும் அப்படியொரு விஷயம் புதைந்து கிடக்கும்.
மிகச்சிலர் புகழுச்சியில் ஏறினாலும், தமக்கான இடத்தை எட்ட முடியாமல் சோர்ந்து விடுவதுண்டு. ‘புகழைப் பெறவும் தக்கவைக்கவுமான சூட்சமங்கள் தெரியவில்லை’ என்று பலர் பாதி வழியில் தேங்கிவிடுவதுண்டு. அவர்களையும் தாண்டிச் சிலர் தங்களது திறமைகளை நிரூபித்தும் பெரிய கவனிப்பைப் பெறாமல் போவதுண்டு.
‘இப்படிப் பல தடைகள் தாண்டி வெற்றிக்கோட்டைத் தொட்டபிறகும் ‘அண்டர்ரேட்டட்’ ஆக இருப்பவர்களைப் பட்டியல் இடலாம். அதில் ஒருவராகத் தெரிபவர் நடிகர் லிவிங்ஸ்டன்.
“அவரைத்தான் எல்லோருக்கும் தெரியுமே” என்று கேட்கலாம். ஆனால், அவருடன் பழகிய நண்பர்கள், அவரைத் தெரிந்த சினிமா கலைஞர்களைக் கேட்டால், ‘இப்போதிருப்பதைவிட இன்னும் பல மடங்கு புகழ் பெற வேண்டியவர்’ என அவரைக் குறிப்பிடுவார்கள் என்பதே உண்மை.
பல திசைகளில் சிதறிய திறமை!
புரசைவாக்கம், பெரம்பூர், புளியந்தோப்பு, மிண்ட், பாரிஸ் கார்னர், திருவல்லிக்கேணி என ‘புராதன சென்னை’யை நன்கறிந்த, அதன் இண்டு இடுக்குகளை அறிந்த ஒரு சில சினிமா கலைஞர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன்.
பின்னி மில்லில் தந்தைக்கு வேலை, குடும்பத்தலைவியாகத் திகழ்ந்த தாய், பெரம்பூர் பகுதியில் வாழ்ந்த கிறித்தவக் குடும்பம் என அறுபதுகளில் லிவிங்ஸ்டனுக்குக் கிடைத்த வாழ்வனுபவங்கள் தனித்துவமானது.
கிதார் இசைக்கத் தெரிந்த லிவிங்ஸ்டன், ஒருகாலத்தில் இளையராஜாவின் இசையமைப்பு பணிகளில் ஈடுபட ஆசை கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்படியொரு எண்ணத்தோடு கோடம்பாக்கம் நோக்கிச் சென்றவர், படம் இயக்குவதிலும் திரைக்கதை எழுதுவதிலும் எப்போது ஆர்வம் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.
கமர்ஷியல் சினிமாவுக்கான திரைக்கதையாக்கத்தில் பெரும் எழுச்சியை உண்டுபண்ணிய பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் லிவிங்ஸ்டன்.
அந்த காலகட்டத்தில் பாண்டியராஜன், ஜி.எம்.குமார், ஆர்.பி.விஸ்வம் எனப் பலர் அவரோடு பணியாற்றியிருக்கின்றனர்.
‘பாக்யராஜின் பொற்காலம்’ என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் அவரோடு பேசவும் பழகவும், அவரது சொல்படி திரைப்படப் பணிகளை ஆற்றவும் வாய்ப்பு கிடைத்தவர்கள் என இவர்களைக் குறிப்பிடலாம்.
‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்னதாகப் பாண்டியராஜனுக்குத் தனியாகப் படம் இயக்க வாய்ப்பு கிடைக்க, அவரோடு ஜி.எம்.குமாரும் லிவிங்ஸ்டனும் கிளம்பி வந்தனர். அப்படி அவர்கள் கூட்டாகச் சேர்ந்து எழுத்தாக்கம் செய்த படம் ‘கன்னி ராசி’.
அதன்பிறகு, பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண் பாவம்’ படத்தில் ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் பங்களிப்பு இருந்ததா எனத் தெரியவில்லை.
ஏனென்றால், அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ஒரே ஒரு நபர் எழுதிய திரைக்கதையாகத் தெரியாது. அந்தளவுக்குக் கனகச்சிதமான வார்ப்போடு அமைந்திருக்கும்.
‘பாட்ஷா’வில் நாயகன் ஒரு காலத்தில் பெரிய தாதாவாக திகழ்ந்தார் என்று சொன்னது எப்படி பின்னர் வந்த ‘ஹீரோயிச’ படங்களுக்கான முன்மாதிரியாக மாறியதோ, அதே போன்று வேறு வேலைகளில் ஈடுபடுவதாகத் தென்படுகிற நாயகன் ஒரு ‘ரகசிய போலீஸ்’ என்று சொன்ன ‘காக்கிசட்டை’க்கும் ஒரு சிறப்பிடம் உண்டு.
எம்ஜிஆர் பார்முலாவில் வந்த படம் என்றபோதும், அந்தப் படத்திற்கு ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் கூட்டணி அமைத்திருந்த திரைக்கதை மிக அபாரமானது.
‘சத்யா மூவிஸ் கதை இலாகா’ என்று டைட்டிலில் குறிப்பிடப்பட்டதால், அவர்கள் இருவரது பெயர்களும் வெளியே தெரிய வராமல் போயிருக்கிறது. ஆனாலும், இந்தக் கூட்டணி மேலும் சில படங்களின் எழுத்தாக்கத்தில் பணியாற்றியிருக்கிறது.
ஜி.எம்.குமார் இயக்கிய ‘அறுவடை நாள்’ படத்தின் ஆக்கத்தில் லிவிங்ஸ்டனுக்கு கணிசமான பங்குண்டு.
சினிமா என்பது ஒரு கூட்டுக்கலை என்பதை அறிந்தவர்கள் மேற்சொன்ன தகவல்களைக் கேட்டு துணுக்குற மாட்டார்கள்.
இயக்குனர் என்ற இடத்தை நோக்கி ஜி.எம்.குமார் பயணித்தது போன்று லிவிங்ஸ்டன் பெரிய முயற்சிகள் எதையும் செய்யவில்லை. ‘பல விஷயங்களில் தன்னை நிரூபிக்க லிவிங்ஸ்டன் முயன்றதே அதற்குக் காரணம்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் ஜி.எம்.குமார்.
ஒருவேளை எழுத்தாக்கத்தில் மட்டும் அவர் கவனம் செலுத்தியிருப்பாரானால், ‘சிறந்த திரைக்கதையாசிரியர்’ என்ற இடத்தைப் பெற்றிருக்கவும் கூடும். மேற்சொன்ன படங்கள் அனைத்துமே ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ஸை கண்டவை என்பதே அதனை ஆமோதிக்கும்.
நடிப்பின் மீதான ஆசை!
இசையமைப்பில், இசைக்கருவிகள் வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்த லிவிங்க்ஸ்டனுக்கு நடிப்பிலும் பேரார்வம் இருந்தது. அதனால், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அதில் தன்னை நிரூபிக்க முயற்சிகள் மேற்கொண்டார். ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தில் அறிமுகம் ஆனார்.
வாய்கொழுப்பு, பாட்டுக்கு ஒரு தலைவன், நாளைய மனிதன், பாட்டுக்கு நான் அடிமை, புதுப்பாட்டு எனப் பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.
‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் கிருஷ்ணமூர்த்தி பாத்திரத்தில் நடித்தது அவரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. மேற்சொன்ன படங்களில் எல்லாம் அவர் ‘ரஞ்சன்’ என்ற பெயரிலேயே நடித்தார்.
கேப்டன் மகள், வீரா, மக்களாட்சி என்று சொல்லத்தக்க படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களைப் பெற்றாலும், லிவிங்ஸ்டனுக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் ‘பத்தோடு பதினொண்ணு’ ரகமாகவே இருந்தன.
அந்தக் காலகட்டத்தில், அவருக்குக் கிடைத்த ‘கசப்பான அனுபவம்’ நாயகன் ஆகிற ஆர்வத்தைக் கிளர்ந்தெழச் செய்தது. “ஹீரோவா நடிக்கலாம்னு இருக்கேன்” என்று சொன்னதும் படாரென்று சுற்றியிருந்த சிலர் சிரித்ததுதான் அந்த அனுபவம்.
ஆனால், அந்த ஒரு நிகழ்வுதான் ‘சுந்தர புருஷன்’ ஸ்கிரிப்டை லிவிங்ஸ்டன் எழுதக் காரணமாக மாறியது.
எப்படி பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் திரையில் தெரியும் தங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு வகைவகையான நாயக பாத்திரங்களை உருவாக்கினார்களோ, அதேபாணியில் தன்னை ‘கணேசன்’ ஆக அந்தப் படத்தில் வெளிப்படுத்தினார் லிவிங்ஸ்டன்.
திரைக்கதையில் மட்டுமல்லாமல், அப்படத்தின் இசை வார்ப்பிலும் அவர் பங்காற்றியிருக்கிறார். இந்தப் படத்தில் உதவி இயக்குனர் ஆகப் பணியாற்றியவர் எஸ்.ஜே.சூர்யா. அதில் வரும் ‘செட்டப்ப மாத்தி’, ‘ஆண்டிப்பட்டி அம்முகுட்டி’ பாடல்களை எழுதியவரும் அவரே. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராஜ ராஜனே’ பாடலில் லிவிங்ஸ்டன் குரலும் ஒலித்தது.
ரொமான்ஸ், செண்டிமெண்ட் நிறைந்த கதையில் தன்னை ‘பபூன்’ ஆகக் காட்டிக்கொள்கிற ‘சார்லி சாப்ளின்’ உத்தியை இப்படத்தில் கையாண்டிருந்தார் லிவிங்ஸ்டன். அவரது ‘முன்னேர்’களைப் போலவே அவருக்கும் அந்த உத்தி கைகொடுத்தது.
இதே காலகட்டத்தில் வெளியான ‘துறைமுகம்’ படத்தில் திருநங்கை பாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடித்தார் என்பது பலர் அறியாதது. அப்படம் பெரிய வெற்றியைப் பெறாத காரணத்தால், எவரும் அவரது துணிச்சலைப் பாராட்டவில்லை.
பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த ‘ஜாலி’, ‘சொல்லாமலே’, ‘பூமகள் ஊர்வலம்’ படங்களில் நடித்தார் லிவிங்ஸ்டன். ’வாலி’ படத்தில் கௌரவ தோற்றத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருந்தார்.
ஒரு முதல் வரிசை நாயகனாக மாறியபிறகு இதனைச் செய்திருந்தால், லிவிங்ஸ்டன் புகழ் ஊடகங்களில் பெரிதாகக் கொண்டாடப்பட்டிருக்கும். அதுவே உண்மை.
போதுமென்ற மனம்!
விரலுக்கேத்த வீக்கம், வானத்தைப் போல, எங்களுக்கும் காலம் வரும், என் புருஷன் குழந்தை மாதிரி என்று 2000-வது ஆண்டு வெளியான படங்கள் சிலவற்றில் முக்கியத்துவம் பெற்றார் லிவிங்ஸ்டன்.
தொடர்ந்து தான் நாயகனாக நடிக்கத் தகுந்த கதைகள் கிடைக்காத காரணத்தால், கிடைத்த சில சின்ன வாய்ப்புகளை ஏற்று நடித்தார். மெல்ல ஒரு குணசித்திர நடிகனாக, நகைச்சுவை கலைஞனாக மாறினார்.
’சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ‘காமெடி’யில் கலக்கியிருப்பார். இத்தனைக்கும் ஒரே ஒரு ஷாட்டில் வந்து போயிருப்பார். அதில் ‘லகலகலக’ என ‘சந்திரமுகி’யில் ரஜினி பேசிய வசனத்தை அவரிடமே பேசி கைத்தட்டல்களை அள்ளினார்.
இந்தக் காட்சி அவ்வளவு சிறப்பானதா? ஆம், ஏனென்றால் லிவிங்ஸ்டன் நடிப்பில் ரஜினியின் சாயலை நிறையவே காண முடியும். ஹீரோயிசத்தை வெளிப்படுத்த ரஜினி செய்கிற மேனரிசங்களை கொஞ்சமாகப் பிரதிபலித்து நகைச்சுவை ஆக்கியவர் லிவிங்ஸ்டன். விவேக், லொள்ளுசபா ஜீவா எனப் பல கலைஞர்களிடம் அதனைக் காண முடியும்.
இப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் ‘அஞ்சாதே’வில் அஜ்மலின் அப்பாவாகத் தோன்றினார். அதில் நாயகன் நரேன் தந்தையாக நடித்தார் எம்.எஸ்.பாஸ்கர்.
‘தனக்கான பாத்திரங்கள் இப்படியும் இருக்கலாம்; அதில் தனது திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தலாம்’ என்ற புரிதலை லிவிங்ஸ்டன் கொண்டிருந்ததாலேயே அது சாத்தியம் ஆயிருக்க முடியும்.
இத்தனை காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து தன்னைத் தேடி வருகிற வாய்ப்புகளை ஏற்று திரையில் முகம் காட்டி வருகிறார் லிவிங்ஸ்டன். ‘சுந்தர புருஷன் 2’ திரைக்கதையை அவர் தயார் செய்து வைத்திருப்பதாகச் செய்திகள் சமீபத்தில் வந்தன.
இது போன்ற விஷயங்கள் இப்போதும் சினிமாவோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவர் மெனக்கெடுவதையே காட்டுகிறது.
ஒரு இசைக்கலைஞனாக, திரைக்கதையாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டிருக்க வேண்டிய லிவிங்ஸ்டன் இன்று ஒரு நடிகராக மட்டுமே தனது முகத்தைக் காட்டி வருகிறார்.
இதுவரையிலான தனது அனுபவத்தை அவர் பகிர்ந்தார் என்றால், அவை ஒரு ‘வெப்சீரிஸ்’ஸுக்கான விதைகளாக அமையும். அதன் வழியே அவர் பார்த்த உலகமும் நமக்குத் தெரியும்..!
மாபா