மிகச்சரியான கதை, காட்சியமைப்பு, ஆக்கத்தைக் கொண்டிருக்கும் பட்சத்தில் த்ரில்லர் வகைமை படங்கள் ‘எவர்க்ரீன்’ அந்தஸ்தை பெறும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளியான ‘போர்தொழில்’ படம் அப்படியொரு ‘த்ரில்லர்’ படமாக அமைந்தது.
அதனால் ‘சைக்கோபாத்’ கொலையாளிகளை அல்லது அது போன்ற சாயலைக் காட்டுகிற கதைகளை அப்படத்தோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அந்த வகையில் வசந்த் ரவி, மெஹ்ரீன் பிர்ஸடா, சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண் நடித்த ‘இந்திரா’ திரைப்படம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அப்படத்தின் ட்ரெய்லர், ‘இது ஒரு சைக்கோபாத் கொலையாளியைக் கண்டறிகிற த்ரில்லர்’ என்று சொன்னதும் அதற்கொரு காரணம்.
சரி, படம் எப்படி இருக்கிறது?
‘இந்திரா’ கதை!
இந்திரா என்றதும் ‘நிலா காய்கிறது’ என சுஹாசினி மணிரத்னம் இயக்கிய படப் பாடல் நினைவுக்கு வரக்கூடும். ஆனால், அது போன்ற பெண் பாத்திரப் பெயர் எதுவும் இப்படத்தில் இல்லை.
இக்கதையில் வரும் நாயகனின் பெயர் இந்திர குமார் (வசந்த் ரவி). ‘இந்திரா’ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே டைட்டிலுக்கான காரணம்.
மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துகிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா (வசந்த் ரவி). அதனால், மேலதிகாரியால் அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறார்.
அவரது மனைவி பெயர் கயல் (மெஹ்ரீன்). கண்களை இமைகள் காப்பது போல அவரைக் கவனித்துக் கொள்பவர்.
ஒருநாள் இந்திராவின் பார்வை பறிபோகிறது. அதனைக் கண்டு, அவரை விடவும் வேதனையில் துடிக்கிறார் கயல்.
பிறகு, இந்திராவைக் கவனித்துக் கொள்வதையே தனது வேலையாகக் கொள்கிறார் கயல். அப்போது, பிளாட்டில் யாரோ ஒருவர் தங்களைக் கண்காணிப்பது போன்று உணர்கிறார். ‘அது உண்மையா, இல்லையா’ என்று அவரால் கண்டறிய முடியவில்லை.
ஒருநாள், தான் கர்ப்பமுற்றிருக்கும் விஷயத்தைக் கணவனிடம் சொல்கிறார் கயல். அன்றிரவு, படுக்கயில் தனதருகே மனைவி இல்லாததைக் கண்டு அதிர்கிறார் இந்திரா. தட்டுத் தடுமாறி எழுந்து அவரைத் தேடி வருகிறார்.
ஹாலில் கயல் தூக்கிலிட்ட நிலையில் பிணமாகத் தொங்குகிறார். அதனை அறிந்து வேதனையில் வெடிக்கிறார் இந்திரா.
இதற்கிடையே, சென்னை நகரில் ஒரு ‘சைக்கோ’ கொலையாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே பாணியில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது கைகள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. அதே பாணியில், கயலின் கையும் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
கயல் மரணத்தை விசாரிக்க வரும் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் நாகேந்திரா (கல்யாண்), இந்திராவைக் கண்டதும் ‘வித்தியாசமாக’ உணர்கிறார். அவரையே ஒரு குற்றவாளி போல நடத்துகிறார்.
விசாரணையில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் வெளியில் இருந்து எவரும் வரவில்லை என்பது தெரிய வருகிறது. அதையடுத்து, அங்கிருப்பவர் எவரோ கயலைக் கொலை செய்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வருகிறார் நாகேந்திரா.
இந்த நிலையில், இந்திரா மற்றும் கான்ஸ்டபிளாக இருக்கும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து அந்த ‘சைக்கோ’ கொலையாளியைப் பிடிக்கின்றனர்.
ஆனால், அவரோ ‘நான் இந்த பொண்ணை கொலை செய்யலை’ என்று கயல் புகைப்படத்தைக் காட்டிச் சொல்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது? யார் கயலைக் கொலை செய்தது? அதனை இந்திரா கண்டுபிடித்தாரா என்று சொல்கிறது ‘இந்திரா’வின் மீதி.
‘த்ரில்’ பொங்குகிறதா?
தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் ‘இது ஒரு ஹாரர் படமா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு, ‘இல்லை, இது த்ரில்லர் படம் தான்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிற வகையில் சில காட்சிகள் வந்து போகின்றன.
இடைவேளைப் பகுதியில் வரும் காட்சிகள் சட்டென்று வேகமெடுக்கின்றன. இரண்டாம் பாதியில் ஒரு பிளாஷ்பேக், மேலும் சில பாத்திரங்கள் என்று கதை வேறொரு திசையில் நகர்கிறது.

ஆனால், அதனால் ‘த்ரில்’ பொங்கிப் பெருகும் என்று பார்த்தால், அது நிகழவில்லை. இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சபரீஷ் நந்தா, அந்த இடத்தில் தன் கையில் இருந்த ‘லகானை’ நழுவ விட்டிருக்கிறார்.
மற்றபடி, படம் பேசுகிற கருத்து ரொம்பவே வலிமையானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதுவும் கிளைமேக்ஸ் காட்சியானது, நாம் அரிதாகப் பார்த்த சில கொரிய மொழிப் படங்களை நினைவூட்டுவதாக உள்ளது.
இப்படத்தின் ‘ப்ளஸ்’ ஆக அஜ்மல் தஹ்சீன் அமைத்துள்ள பின்னணி இசை உள்ளது. ஆங்காங்கே வருகிற பாடல்கள் காட்சியமைப்பை வலுப்படுத்தினாலும், திரைக்கதையில் இருக்கிற பரபரப்பைக் குறைக்கிறது.
முனி பால்ராஜின் கலை வடிவமைப்பு கதை நிகழும் இடத்தைப் பளிச்சென்று காட்ட உதவியிருக்கிறது.
ஒளிப்பதிவின் வழியே பிரபு ராகவ் காட்சிக்கோணங்களில் பயத்தை நிரப்ப உதவியிருக்கிறது.
ஒளிப்பதிவாளரின் ஷாட்களை ஆங்காங்கே தூவி, திரையில் ‘த்ரில்’லை ஊட்ட முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்.
ஆனால், அந்த இடங்களில் நாம் உணர்வது பிரமையா, உண்மையா என்பதை அவர் தெளிவுபடுத்தாமல் விட்டிருப்பது ஒரு குறை தான்.
இது போக ஒலிப்பதிவு, சண்டைக்காட்சி வடிவமைப்பு எனச் சில அம்சங்கள் ஈர்க்கும் வகையில் உள்ளன.

நடிப்பைப் பொறுத்தவரை, ‘தீடீரென்று பார்வையிழந்தவர்’ என்பதனை மிகச்சரியாகத் திரையில் கடத்த முயன்றிருக்கிறார் வசந்த் ரவி. அதேநேரத்தில், செவித்திறன் கொண்டு அவர் தன் முன்னே நிகழ்பவற்றைத் துல்லியமாக அறிய முயல்வது ஏற்கும்விதமாக இல்லை.
முன்பாதியில் நம் மனதில் எழும் கேள்விகளுக்குப் பதில் பின்பாதி திரைக்கதையில் உள்ளது. அதற்கேற்ற வகையில், ஒரு பாத்திரமாக அவர் தோன்றியிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.
நாயகி மெஹ்ரீனை இதற்கு முன் தமிழில் ஓரிரு படங்களில் பார்த்திருக்கிறோம். உடனே அவரை மறந்திருக்கிறோம். இதிலும் அப்படியொரு உணர்வையே அவர் ஏற்படுத்துகிறார். அது அவரது குறையா, பாத்திரச் சித்தரிப்பின் குறையா எனத் தெரியவில்லை.
இந்தக் கதையில் ‘சைக்கோ’ கொலையாளியாக சுனில் வருகிறார். அவர் வரும் காட்சிகள் ஈர்த்தாலும், மையக் கதைக்கும் அவருக்குமான சம்பந்தம் என்ற கேள்வி எழாமல் இல்லை.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், கஜராஜ் என்று சில பாத்திரங்கள் இதில் வந்து போகின்றன.
பிளாஷ்பேக்கில் வரும் அனிகா சுரேந்திரன் சட்டென்று ஈர்ப்பை உணர வைக்கிறார்.
அவரது ஜோடியாக வரும் சுமேஷ் மூரின் வசன உச்சரிப்பு நம்மிடத்தில் ‘மலையாள வாசனை’யை உணரச் செய்கிறது. அதனை ‘டப்பிங்’கில் சரிப்படுத்தி இருக்கலாம்.

அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொண்டாலும், ‘இன்னும் கூட அவர்களுக்குக் கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமோ’ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
ஒருவேளை ‘நான்லீனியர்’ முறையில் இன்னொரு கதையாக அவர்களைக் காட்டியிருந்தால், ‘இந்திரா’வின் திரைக்கதை வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும். அது இன்னும் இப்படத்திற்கு வலு சேர்த்திருக்கக் கூடும்.
அந்த திசையில் இயக்குநர் சபரிஷ் நந்தா சிந்தித்தாரா என்று தெரியவில்லை. அது போன்ற முயற்சிகளைச் செய்திருந்தால், ‘போர்தொழில்’ போன்றதொரு த்ரில்லராக ‘இந்திரா’வை மாற்றியிருக்கலாம்.
அது நிகழாத காரணத்தால், ‘ஆம், இது ஒரு த்ரில்லர் படம்தான்’ என்று மட்டுமே சொல்ல முடிகிறது..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்