Take a fresh look at your lifestyle.

சகலரையும் வியக்‍க வைத்த ‘சக்‍தி’யின் திரைத் தமிழ்!

கிஸ்தி, திரை, வரி, வட்டி…
யாரை கேட்கிறாய் திரை …
எதற்கு கேட்கிறாய் வரி..
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கொடுக்க வேண்டும் திரை.

எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?
ஏற்றம் இறைத்தாயா?
அல்லது,
கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு
மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?

மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே…

திரையில் நடிக்‍க வாய்ப்பு கேட்டு வருபவர்களுக்‍கு இந்த வசனம்தான் பாலபாடம்.

பொதுவாகவே சினிமா வாய்ப்பு கேட்டு வருபவர்கள் பலரும், சிவாஜி கணேசனின் வசனத்தையோ, அவரது நடிப்பின் சாயலை வெளிப்படுத்திதான் வாய்ப்பு கேட்பார்கள்…

மேற்குறிப்பிட்டுள்ள வசனம், தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட வசனங்களில் ஒன்று. அந்த காலத்திலேயே இந்த வசனம் ஒலி நாடாக்‍களிலும், புத்தகங்களிலும் வெளிவந்தது. இந்த வசனம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடிகர் திலகம் பேசிய வசனம் என்று எல்லோருக்‍கும் தெரியும்.

ஆனால், இதை எழுதியவர் யார் என்று கேட்டால், பதில் தெரியாமல் விழிப்பார்கள். இந்த வசனத்தை ரசிக்‍கும் பெரும்பாலானோருக்‍கு இந்த வசனத்தை எழுதியது யார் என்று தெரியாது.

திரைத் தமிழை நேசிக்‍கும் ஒருசிலர் மட்டும் உடனே சொல்லி விடுவார்கள், வசனகர்த்தா பெயரை… அவர்தான் சக்‍தி T.K. கிருஷ்ணசாமி.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்‍கதை வசன கர்த்தாக்‍களில் இவரும் ஒருவர்.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணசாமி, சக்‍தி நாடகக் குழுவில் இணைந்து தனது இலக்‍கிய புலமையை வளர்த்துக்‍ கொண்டார்.

நாடகங்களில் நடித்தார். வசனம் எழுதினார். கவியின் கனவு என்ற கிருஷ்ணசாமியின் நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நாடகத்தை பார்ப்பதற்காக திருச்சியில் இருந்து நாகப்பட்டினத்திற்கும், கும்பகோணத்திற்கும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்‍கிய காலம் ஒன்று உண்டு. அந்த அளவுக்‍கு சக்‍தி கிருஷ்ணசாமியின் நாடகத் தமிழ், நாட்டோரை கவர்ந்தது.

1957-ம் ஆண்டு சக்‍தி கிருஷ்ணசாமி எழுதிய புகழ்பெற்ற நாடகமான வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

சக்‍தி கிருஷ்ணசாமியின் அனல் தெறிக்‍கும் வசனங்கள், தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின.

அம்பிகாபதி, கர்ணன், ஆளுக்‍கொரு வீடு, குங்குமம், பணக்‍கார குடும்பம், எங்கள் வீட்டுப் பிள்ளை, பணம் படைத்தவன், பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல படங்களில் சக்‍தி கிருஷ்ணசாமியின் தமிழ், ரசிகர்களின் ரசனையை உயர்த்தியது.

காந்தியவாதியான சக்‍தி கிருஷ்ணசாமி, திரைப்படங்களுக்‍கு பாடல்களும் எழுதியுள்ளார். உடல்நலக்‍ குறைவு காரணமாக கடந்த 198-7ம் ஆண்டு சக்‍தி கிருஷ்ணசாமி காலமானார்.

தமிழ் சினிமாவுக்‍கு தங்களது தமிழ் மூலம் திரை இலக்‍கியங்களை வழங்கிய இளங்கோவன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் வரிசையில் சக்‍தி கிருஷ்ணசாமி முன்வரிசையில் கம்பீரமாக வீற்றிருக்‍கிறார்.

பிரபல திரைக்‍கதை வசனகர்த்தா, பாடலாசிரியர் சக்‍தி கிருஷ்ணாமி பிறந்தநாள் இன்று (மார்ச் 11, 1913)

✍️ லாரன்ஸ் விஜயன்