தென்னிந்திய தெருக் கிரிக்கெட் டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி, கோவா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் திறமைகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிறந்த வீரர்களைக் கொண்ட 12 அணிகள், வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில், 3 கோடி ரூபாய் பரிசை வெல்வதற்காக விளையாடுகின்றன.
சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தலைவர் ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோர் இந்த லீக்கைத் தொடங்கி வைத்தனர்.
சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் பிராண்ட் அம்பாசிடராக ரவி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
‘எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர். தெருக் கிரிக்கெட் விளையாடி ஜெயித்து 25 ரூபாய் பரிசு வென்று, நண்பர்களுடன் ஐஸ் சாப்பிட்டு, பணத்தை காலி செய்திருக்கிறேன்.
தெருக் கிரிக்கெட்டில் சாதிக்க துடிப்பவர்களுக்கான எஸ்எஸ்பிஎல்லின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.