Take a fresh look at your lifestyle.

மன்னிப்பு கேட்கச் சொன்ன கர்நாடக நீதிமன்றம்; மறுக்கும் கமல்!

‘உலக நாயகன்’ கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் ஃலைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கன்னட அமைப்பினர், கமலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கன்னடமொழி பற்றி பேசிய கமல்ஹாசனின் ‘தக் ஃலைப்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தின.

இது குறித்து அண்மையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, அவசரக் கூட்டம் நடத்தி ஆலோசித்தது. கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் – இல்லை என்றால் ‘தக் ஃலைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட முடியாது’ என்று எச்சரித்திருந்தது.

ஆனால், கமல்ஹாசன், தான் தவறாக எதுவும் கூறவில்லை – அன்பு மன்னிப்பு கேட்காது என்று கூறினார். தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தக் லைஃப் படத்தை புறக்கணிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ள நிலையில், தடையை நீக்கக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். ‘கமல் சொன்ன கருத்தில் தவறு இல்லை. ‘தக் ஃலைப்’ படத்துக்கு தடை விதிப்பது போக்கிரித்தனம்’  என்று அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்து பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா இல்லை, வரலாற்று ஆய்வாளரா என கேள்வி எழுப்பினார்.

பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கமலுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  

இதற்கிடையே, கர்நாடக ஃபிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம்  தனக்கு இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்து இருக்கும் அன்பு மீது மிகுந்த மரியாதை உண்டு. கன்னடம் குறித்த எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் கடிதம் திருப்தியாக உள்ளது; ஆனால் அதில் ஒரு வார்த்தையை சேர்க்க வேண்டும். அதாவது கமல்ஹாசனின் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை விடுபட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது கமல் தரப்பில், நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

– பாப்பாங்குளம் பாரதி.