‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தை த.ச.ஞானவேல் டைரக்டு செய்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
போலி என்கவுண்டர்களுக்கு எதிரான போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கும் இந்தப் படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், டுஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
கேரளா, நெல்லை, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் ஷுட்டிங் நடந்துள்ளது. இப்போது படக்குழு கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு வரும் 12-ம் தேதி பிறந்தநாளாகும். அன்று ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, ரஜினி நடித்துள்ள ‘லால்சலாம்’ படத்தின் சில காட்சிகளும் அன்றைய தினம் வெளியாகலாம்.
இதனால் 12 ஆம் தேதியை ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர் நோக்கியுள்ளனர்.
லால்சலாம் பொங்கல் திருநாளில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
- பாப்பாங்குளம் பாரதி.