Take a fresh look at your lifestyle.

வெள்ள நிவாரணம் வழங்கும் திரைப்பிரபலங்கள்!

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேரிடர் மீட்புக் குழுவினர், மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொண்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலிருக்கும் மக்களுக்கு வழங்கிவருவதாகக் கூறினாலும், பல்வேறு இடங்களில் உணவே கிடைக்கவில்லை என மக்கள் கூறிவருகின்றனர். சில இடங்களில் போராட்டமும் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், திரைப் பிரபலங்கள் போன்றோர், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சிக்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர்.

அந்த வகையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது வெள்ளித்திரையிலும் சின்ன சின்னக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளியக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மலைவாழ் மக்களுக்காக தன் சொந்த செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி தந்தார். நகைச்சுவை நடிகராக வளர்ந்து வரும் பாலா தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகின்றார்.

தற்போது சென்னையில் பெரு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – குடும்பத்திற்கு தலா (1000) ரூபாய் வீதம் – 200 குடும்பங்களுக்கு, மொத்தமாக 2,00,000 (இரண்டு லட்சம்) உதவித் தொகை வழங்கியுள்ளார்.

பலரும் வீட்டை விட்டே வெளியே வர தயங்கி முடங்கியுள்ள நிலையில், தெருவில் இறங்கி உதவுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பாலாவின் செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இதேபோல் நடிகை அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து சென்னைக்கு தன்னுடைய சொந்த செலவில் வந்து தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

இவர்களை போலவே மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதேபோல் பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.

இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

‘வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.