திரைத் தெறிப்புகள் 94 :
*
முழுக்க இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பரப்புகளுக்கிடையே குளுமையாக எடுக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான ‘அன்பே வா’ படத்தில் பாடல் காட்சி சிம்லாவிலும் மற்ற சில மலைப்பிரதேசங்களிலும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
திமுக வண்ணத்தில் ஒரு கோட்டும் கையில் பெட்டியுடன் ஸ்ட்டிக்குமாக மலைச்சரிவில் ஓடிவந்தபடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடும் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.
“புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது,
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூ மழைப் பொழிகிறது…”
எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு இந்தப் பாடல் காட்சியைப் பார்க்க வேண்டும்.
துள்ளலான இசையுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இப்பாடலில் இடம்பெறும் “புதிய சூரியனின் பார்வையிலே…” என்ற டி.எம்.எஸ்-ஸின் அழுத்தமான வரிக்கு அப்போது, திரையரங்குகளில் கைத் தட்டலும், விசிலும் தூள் பறக்கும்.
“புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொள்ளும் வேளையிலே,
இமயத்தை வருடும் குளிர்காற்று
என் இதயத்தைத் தொடுகிறது.
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது…”
அந்தக் காலத்திலேயே எப்படிப்பட்ட கல்விக் கூடங்களுக்கான எதிர்பார்ப்பும் அதற்கு மொழிகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்கின்ற முனைப்பும் வாலியின் பாடலில் வெளிப்படுவதை உணர முடியும்.
“பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை தெரிகிறது.
அவர் வர வேண்டும் நலம் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது…”
சுற்றுலாப் பயணிகளுக்கு இடையில், சீருடைத் தறித்து கதுப்பான கன்னங்களுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளை கையில் தூக்கி எம்.ஜி.ஆர். கொஞ்சும்போது, அந்த சின்னக் குழந்தைகள் வெட்கப்படுவதைப் பார்ப்பதுகூட கட்சிதமான அழகுதான்.
நாடு, மொழி, மதம், ஜாதி என்கின்ற பேதங்கள் இல்லாத உலகுக்கான எதிர்பார்ப்பு இந்தப் பாடலில் மையங்கொண்டிருப்பதை உணர முடியும்.
“எந்த நாடு என்ற கேள்வியில்லை
என்ன ஜாதி என்ற பேதமில்லை.
மனிதர்கள் அன்பின் வழிதேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்.
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்.”
மிகவும் ஜாலியாக நகர்கிற படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெறும் இந்தப் பாடலில் கூட வரிகள் எவ்வளவு உன்னதமாக இருக்கின்றன.
*
– மணா