‘கோமாளி’ படத்தின் கிளைமேக்ஸில் ஆட்டோ டிரைவராக சில நொடிகள் தலைகாட்டி நடிகராக அறிமுகமானவர் அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
அது பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு, வேறெந்த நட்சத்திர நடிகரையும் வைத்து அவர் படம் இயக்கவில்லை.
மாறாக, ‘லவ் டுடே’ கதையைத் தயார் செய்துவிட்டு தானே நாயகனாக நடிக்கிற முயற்சியில் இறங்கினார்.
மூன்றாண்டு கால உழைப்புக்குப் பின்னர் பெருவெற்றியை அடைந்தார். இதோ இப்போது ‘டிராகன்’ படம் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அவரைத் தமிழ்த் திரையுலகின் ‘நட்சத்திர நாயகர்’களில் ஒருவராக ஆக்கியிருக்கிறது.
அடுத்து அவரது நடிப்பில் விக்னேஷ் சிவனின் ‘லைக்’, கீர்த்திஸ்வரனின் ‘டூட்’ படங்கள் வரவிருக்கின்றன.
‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்கள் தெலுங்கிலும் நேரடியாக ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
குறிப்பிடத்தக்க அளவில் வசூலையும் பெற்றன. குறிப்பாக ‘டிராகன்’ திரைப்படம் இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது.
அதற்கான காரணம், ‘லவ் டுடே’ இந்திப் பதிப்பு பெரிய அளவில் எடுபடாமல் போனதுதான்.
அதன் பின்னணியை ஆராய்ந்தால், தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த அளவுக்கு இந்தியில் அமீர்கான் மூத்த மகன் ஜுனைத் கானின் நடிப்பு இல்லை என்ற தகவல் காணக் கிடைக்கிறது.
ஒப்பீட்டளவில் முதலில் நம் கண்ணில் பட்டதுதான் சிறப்பாகத் தெரியும் என்பது வேறு விஷயம்.
அதனை மீறி, எஸ்.ஜே.சூர்யா பாணியில் ‘எக்சண்ட்ரிக்’ ஆக நடந்துகொள்ளும் ஒரு இளைஞனைத் திரையில் காட்டியதில் பிஆர் ஒரு படி மேலே என்றுதான் சொல்ல வேண்டும்.
‘டிராகன்’ படமும் கூட, கிட்டத்தட்ட அதே பாணியிலான நடிப்பைக் கொண்டதுதான்.
அதனாலேயே தெலுங்கு, இந்தியில் இப்படத்தை ‘ரீமேக்’ செய்வதில் அங்குள்ள நாயகர்கள் தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால், அதுவே பிரதீப்பின் வெற்றிகளில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
ஆம், தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ‘டூட்’ திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதாகப்பட்டது, ஐந்து மொழிகளில் ‘பான் இந்தியா’ அடையாளத்தோடு வரவிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர், சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு சரத்குமார் அளித்த பேட்டியொன்றில் ‘பிரதீப் ரங்கநாதனுடன் டூட் படத்தில் நடித்து வருவதாக’க் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் அப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கையில் தாலியோடு பிரதீப் ரங்கநாதன் நிற்கிற பர்ஸ்ட் லுக்கும் வெளியானது.
இரண்டொரு நாட்களிலேயே அடுத்த போஸ்டரை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டார் பிரதீப் ரங்கநாதன்.
மேல்சட்டை அணியாமல் போஸ் கொடுக்கும் அவரோடு நாயகி மமிதா பைஜுவும் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றிருந்தார். அதில் அப்படம் தீபாவளிக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே தீபாவளிக்கு மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியின் ‘பைசன்’, சூர்யா – ஆர்ஜே பாலாஜி காம்பினேஷனில் உருவாகி வரும் ‘சூர்யா 45’ படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், களத்தில் ‘டூட்’டும் குதித்திருக்கிறது.
இந்தியில் ஆயுஷ்மான் குரானாவின் ‘தாமா’, அனுராக் பாசு இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், ஸ்ரீலீலா நடிக்கிற படம் ஆகியன தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி படம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் அத்தினத்தையொட்டி வருமென்று எதிர்பார்க்கப்படுகின்றன. சூர்யாவின் 45வது படம் கூடத் தெலுங்கில் அதே தினத்தில் வெளியாகவே வாய்ப்புகள் அதிகம்.
ஆக, பல முனைப் போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது ‘டூட்’.
அதற்கு முன்னரே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கீர்த்தி ஷெட்டி உடன் பிரதீப் நடிக்கிற ‘லைக்’ படம் வரவிருக்கிறது.
நவராத்திரி விழா தொடங்குகிற சமயத்தில், செப்டம்பர் 18 அன்று திரையைக் காணவிருக்கிறது. இப்படமும் கூட ஐந்து மொழிகளில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அனேகம்.
இதில் எஸ்.ஜே.சூர்யா தொடங்கி யோகிபாபு, மிஷ்கின், சீமான், சுனில், ஆனந்தராஜ், கௌரி கிஷன், ஷரா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் அனிருத்.
கவனிக்கவும். மேற்சொன்ன ‘லைக்’, ‘டூட்’ படங்களுக்குப் பிறகு பிரதீப்பின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதுவே அவரது அடுத்த தேர்வு குறித்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
தமிழில் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழும் விஜய், அஜித்தின் படங்களுக்கு வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் வரவேற்பு கணிசமாகக் கிடைத்து வருகிறது.
ஏற்கனவே சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோருக்கு தெலுங்கில் குறிப்பிட்ட அளவில் ‘சந்தை மதிப்பு’ உண்டு. அந்த வரிசையில் தானும் இணைய முயற்சித்த சிவகார்த்திகேயனுக்கு நல்லதொரு அறிமுகமாக அமைந்திருக்கிறது ‘அமரன்’.
விஜய் சேதுபதியையும் அவ்வரிசையில் சேர்க்கலாம். ஜீவா, ஆர்யா உள்ளிட்ட பல நாயகர்கள் கடந்த காலத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
போலவே, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நானி, ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உட்படப் பலருக்குத் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிற எண்ணம் நெடுநாட்களாகவே இருந்து வருகிறது.
கன்னடத் திரையுலகைச் சேர்ந்த சுதீப் 2010வாக்கிலேயே இதனைச் சாதித்துவிட்டார். ‘நான் ஈ’க்குப் பிறகு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக மாறினார். ‘கேஜிஎஃப்’, ‘பாகுபலி’ வழியே யஷ், பிரபாஸ் ஆகியோரும் அதனைச் சாதித்திருக்கின்றனர்.
தனுஷ் நேரடி இந்திப்படங்களில் நடித்து தான் ஒரு ‘ஆல் இந்தியா ஸ்டார்’ என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்.
சல்மான்கான் போன்ற முன்னணி இந்தி நடிகர்கள் தென்னிந்திய மாநிலங்களில் தங்களது படங்கள் பெரியளவில் கவனம் பெறுவதில்லை என்று வருத்தப்பட்டிருந்தார்.
‘அதுவே, அவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் புகழ் பெறுவதற்கான விருப்பம் உண்டு என்பதைக் காட்டியது.
ஆக, அதன் ஒருபகுதியாகவே தற்போது பிரதீப்பின் படங்கள் ஐந்து மொழிகளில் வெளியாவதையும் நோக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், இதுவும் கூட பிரதீப் திட்டமிட்ட அல்லது கனவு கண்ட ஒரு விஷயம்தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. காரணம், நான்காண்டுகளுக்கு முன்பே அவர் யூடியூப்பில் வெளியிட்ட ஒரு சிறு குறிப்பு.
‘கோமாளி’ இந்திப் படத்தின் உரிமையை வாங்கிய கோல்டுமைன்ஸ் நிறுவனம் அதனைத் தமக்குச் சொந்தமான தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பி வருகிறது.
அதற்குச் சொந்தமான நான்கைந்து யூடியூப் சேனல்களில் சுமார் பத்தரை கோடி பேர் வரை அப்படத்தைக் கண்டு ரசித்திருக்கின்றனர்.
அதில் ஒரு சேனலில், நான்காண்டுகளுக்கு முன்னர் பிரதீப் ரங்கநாதன் இட்ட ‘கமெண்ட்’ உள்ளது. ‘கோமாளி’ படத்திற்குத் தரும் ரசிகர்களின் ஆதரவை வரவேற்பதாக அந்த கமெண்டில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே, விரைவில் நேரடி இந்திப்படம் ஒன்றில் சந்திப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னபிறகுதான் ‘லவ் டுடே’ வெளியாகி வெற்றி பெற்றது. இந்தியில் ‘லவ் யப்பா’ என்ற பெயரில் தயாரான அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக பிரதீப்பின் பெயரும் இடம்பெற்றது. ’டிராகன்’ இந்தி டப்பிங் பதிப்பு வெளியானது.
இதோ இப்போது, ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாவதாக ‘டூட்’ போஸ்டரில் சொல்லப்பட்டிருப்பதையும் அந்த வரிசையில்தான் சேர்க்க வேண்டும். இந்த வளர்ச்சியை வியக்காமல் இருக்க முடியாது.
‘பில்லா’ படத்தில் அஜித் சொல்வது போல, தனது கேரியரின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டுத் துல்லியமாகச் செதுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
அவரது கடின உழைப்புக்கும் செறிவான மெனக்கெடலுக்குமான பலனாகவே இதனை நோக்க வேண்டும்..!
-மாபா