ஒரு சிறப்பான வெப்சீரிஸ் எப்படி இருக்க வேண்டும்? அதற்கான இந்திய உதாரணமாகத் தென்படுவது ‘பாதாள் லோக்’. 2020ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் இது வெளியானது.
எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கிற கதை எங்கெங்கோ நகர்ந்து ஒரு மாநிலத்தின் அரசியலையே மாற்றியமைக்கிற இடத்தில் கொண்டுவந்து நாயகனை நிறுத்தும்.
அந்த உண்மையைத் தெரிந்தபிறகு அவர் என்ன செய்கிறார் என்பதைக் காட்டும். ஒரு சாதாரண நபராக, அதனை எப்படி எதிர்கொள்ள முடிந்தது என்பதையும் சொல்லும்.
ஒரு நூல்கண்டில் ஒரு முனையைப் பிடித்து இழுக்க, கோளமாகத் தோற்றமளிக்கும் அது மெல்லத் தனது பரப்பை உதிர்த்து இறுதியாகக் கடைசி முனையைத் தொடும் வரை நாம் காண்பது போன்று காட்சி தரும்.
இடையிடையே நம்மை யோசிக்க வைத்த திருப்பங்களுக்கான காரணங்கள் கூட இறுதியாகத் தெரிய வரும். மீண்டும் ஒருமுறை பார்த்தாலென்ன என்று தோன்றும்.
இன்னொரு முறை ஐந்தாறு மணி நேரம் செலவழிக்க வேண்டுமா என்ற மலைப்பையும் கூட ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்துவிடலாம் என்று எண்ண வைக்கும்.
அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகிற இன்னொரு படைப்பாக அமைந்திருக்கிறது ‘பாதாள் லோக் சீசன் 2’.
கதை என்ன?
டெல்லியில் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு வர்த்தக மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர்.
மாநாட்டுக்கு முந்தைய நாள், அந்த தலைவர்களில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அவர் பெயர் ஜோனதன் தோம்.
அது பற்றி விசாரணை செய்யும் சிறப்புக்குழுவின் தலைவராக இம்ரான் அன்சாரி (இஷ்வக் சிங்) நியமிக்கப்படுகிறார்.
அந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் அரசின் சிறப்பு ஆலோசகரான கபில் ரெட்டி (நாகேஷ் குக்கனூர்), இந்தக் கொலையால் மாநாட்டு நிகழ்ச்சி தடைபட்டுவிடக் கூடாது என்பதில் கவனத்தைச் செலுத்துகிறார்.
அதேநேரத்தில், டெல்லியிலுள்ள ஜமுனா பார் காவல் நிலையத்தில் தனது கணவர் ரவி பாஸ்வானைக் காணவில்லை என்று ஒரு பெண் புகார் அளிக்கிறார். அவருடன் வாய் பேசாமல் இருக்கும் ஒரு சிறுவன் இருக்கிறார்.
அந்த நபர் வேலை செய்யும் பழ வியாபாரி ஜோகியைத் தேடிச் செல்கிறார் இன்ஸ்பெக்டர் ஹதிராம் சௌத்ரி (ஜெய்தீப் அலுவாலியா). அப்போது, ஜோகி செல்லும் பதில்கள் அவருக்குத் திருப்தி தருவதாக இல்லை.
அடுத்த சில மணி நேரங்களில் அவர் ஜோகியின் பூட்டப்பட்ட அலுவலகத்தைச் சோதனையிடுகிறார். அப்போது, சட்டவிரோதமாக நாகலாந்துக்குச் சில பொருட்கள் கடத்தப்பட்டதும் அங்கிருந்து கொண்டுவரப்பட்டதும் தெரிய வருகிறது.
அதில் ரவி பாஸ்வான் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்து, அந்த வழக்கை மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க முயற்சிக்கிறார்.
அப்போது, ஒருகாலத்தில் தன்னுடன் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய இம்ரான் அன்சாரியைச் சந்திக்கிறார் ஹதிராம்.
அடுத்தடுத்து இருவரும் வெவ்வேறு திசை நோக்கித் தங்களது விசாரணையைத் தொடர்கின்றனர். ஒருகட்டத்தில் இரண்டு வழக்குகளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதைக் கண்டறிகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, நாகாலாந்து சென்று விசாரிக்கும் இம்ரான் அன்சாரி உடன் ஹதிராம் சௌத்ரியும் செல்கிறார்.
அந்தப் பயணத்தில் நாகலாந்து மாநிலத்தின் அரசியல் மட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக அம்மக்கள் அனுபவித்துவரும் வலியையும் வேதனையையும் சிலரது கொடூர ஆதிக்கத்தையும் கண்டறிகின்றனர்.
ஆனால், அந்த விசாரணை எளிதானதாக அமையவில்லை. அவர்கள் இருவரது உயிரையும் பறிக்கும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கின்றன. அதன்பிறகு என்னவானது?
டெல்லியில் ஜோனதன் தோம் கொலையைச் செய்தது யார் என்று தெரிய வந்ததா? ரவி பாஸ்வான் எப்படி காணாமல் போனார்? இவ்விரு வழக்குகள் தொடர்பான விசாரணையில் வேறு என்னென்ன உண்மைகள் தெரிய வந்தன என்று சொல்கிறது ‘பாதாள் லோக் சீசன் 2’வின் மீதி.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி இந்த சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
மெல்லச் சூடேறும்!
‘என்னய்யா சவசவன்னு இருக்கு’ என்று சலித்துக்கொள்ளும்விதமாகச் சில கதாபாத்திரங்கள், இடங்கள், அவையிரண்டுக்குமான தொடர்புகள் என்று நகரும் திரைக்கதை குறிப்பிட்ட புள்ளியில் சில திருப்பங்களைக் காண்கிறது.
அவை நம் எதிர்பார்ப்புக்கு மாறானதாக இருக்கின்றன என்பதுதான் இந்த சீரிஸின் யுஎஸ்பி.
அவற்றின் வழியே, ‘இது ஒரு பொலிடிகல் த்ரில்லர்’ என்று நமக்கு உணர்த்தப்படுகிறது.
அதன்பிறகு, சாதாரண காட்சிகள் கூடச் சிறப்பானதாகத் தெரிகிறது. மெல்லச் சூடேறும் வகையில் இதிலுள்ள திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
சுதீப் சர்மா, அபிஷேக் பானர்ஜி, ராகுல் கனோஜியா, தமால் சென் ஆகியோரின் எழுத்தாக்கம் அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.
குறிப்பிட்ட எபிசோடில் சில இடங்கள், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட சில விவரங்கள் விரிவாகக் குறிப்பிடப்படுகின்றன; அதற்கு இந்தப் பகுத்துப் பிரித்து பணியாற்றிய முறைதான் காரணமாக இருக்க முடியும்.
எழுத்தாக்கத்திலேயே அந்தச் சிரத்தை வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், இயக்குநர் அவினாஷ் அருண் தாவ்ரே காட்சியாக்கத்தில் மேலும் ஒருபடியைத் தொட முயன்றிருக்கிறார்.
அதனால், வசனங்களாகச் சொல்லப்படுபவற்றை விட மௌனங்கள் நிறைய விஷயங்களைப் பேசுகின்றன.
ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண், சௌரப் கோஸ்வாமி, படத்தொகுப்பாளர் சன்யுக்தா காஸா மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது.
முதல் சீசனில் வந்த ஜெய்தீப் அலாவத், குல் பனாக், இஷ்வக் சிங் ஆகியோரோடு இதில் ஜஹானு பரூவா, நாகேஷ் குக்கனூர், திலோத்தமா ஷோம், பிரசாத் தமாங், ரோகிபுல் ஹுசைன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அனைவரது நடிப்பும் அபாரம் என்பதுவே இத்தொடரை இமைக்காமல் பார்க்கச் செய்கிறது.
இத்தொடரில் அரசியல்ரீதியாகச் சில விளக்கங்கள் வசனங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை, இந்தக் கதை எடுத்துக்கொண்ட களத்தின் முழு தோற்றத்தையும் நமக்கு உணர்த்துவதாக இல்லை.
ஆனால், ஒரு கதை எங்குத் தொடங்கி எங்கு முடிகிறது என்பதைக் காட்டிய வகையில் ஒரு பாடத்தை நடத்தியிருக்கிறது.
சொல்ல முடியாத ரகசியங்கள் எப்போதுமே ஒரு சுமை. அவற்றைக் கண்டறிவதில் இருக்கும் சிரமங்கள், எல்லாம் தெரிந்தபிறகு ‘இவ்ளோதானா’ என்று தோன்றும்.

ஆனால், அந்த உண்மையைச் சகித்துக்கொள்வதுதான் ஆகப்பெரிய வலியாக, வேதனையாகத் தெரியும். அந்தக் கருத்தை முன்வைக்கிற ‘பாதாள் லோக்’ சீரிஸ் மேலும் பல சீசன்களை காணலாம்.
‘ஒன்றை விட இன்னொன்று உயர்வாகத் தெரியும்படி’ அந்த சீசன்களை தர, இந்த ‘பாதாள் லோக் சீசன் 2’வில் காட்டிய சிரத்தையை இயக்குநர் அவினாஷ் அருண் குழுவினர் வெளிப்படுத்த வேண்டும்.
அது நிகழும் என்கிற நம்பிக்கையை இப்படைப்பு தந்திருப்பது சாதாரண விஷயமில்லை.
– உதயசங்கரன் பாடகலிங்கம்