தெலுங்குத் திரையுலகில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு.
நடிகர் கிருஷ்ணாவின் மகன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுக்கு ஒரு படம் வீதம் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
பிரமாண்டத்திற்குப் பெயர் போன இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த படத்தில் இவர் நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் 2027இல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘அப்படியானால் இடைப்பட்ட காலத்தில் பாபுவின் படத்தைப் பார்க்கவே முடியாதா’ என்று ஏங்கும் அவரது தீவிர ரசிகர்கள், அவரது திரைப்படங்கள் சில சாதனைகளைப் படைக்கவும் காரணகர்த்தாக்களாக விளங்குகின்றனர்.
மகேஷ் பாபு நாயகனாக நடித்த ‘அத்தடு’ தெலுங்குத் திரைப்படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகியிருக்கிறது.
இதன் மூலமாக, புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் இதுவரை இப்படி எந்த திரைப்படமும் அதிக முறை ஒளிபரப்பு செய்யப்பட்டதில்லையாம்.
29-வது படம்!
மகேஷ்பாபுவை நாயகன் ஆக்கும் எண்ணத்தோடு, சிறு வயதிலேயே கேமிரா முன்பு நிற்க வைத்தார் தந்தை கிருஷ்ணா. அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக ஒன்பது திரைப்படங்களில் தலைகாட்டினார்.

மகேஷ்பாபு முதன்முறையாக நாயகனாக நடித்த திரைப்படம் ‘ராஜகுமாரடு’. 1999இல் வெளியானது.
இதனை இயக்கியவர் ‘கமர்ஷியல் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர்’ என்று பெயரைப் பெற்ற இயக்குநர் கே.ராகவேந்திரராவ்.
இப்படத்தில் நடித்தபோது மகேஷ் பாபுவின் வயது 24.
ஆனால், இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதன்பின்னர் அவர் நடித்த படங்களில் ‘முராரி’ ரசிகர்களை ஈர்த்தது.
குணசேகர் இயக்கிய ‘ஒக்கடு’ மிகப்பெரிய ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக அமைந்தது. இதுவே தமிழில் ‘கில்லி’ ஆனது. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக முதன்முறையாக நடித்த ‘நியூ’ படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்தவர் மகேஷ்பாபுதான். ‘நானி’ என்ற அப்படம் பப்படம் ஆனது.
ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படம் என்று நடித்தாலும், ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதை இருக்குமாறு பார்த்துக் கொள்வார் மகேஷ்பாபு. அவரது தோல்விப்படங்களில் கூடச் சில சிறப்பம்சங்கள் இருக்கும்.
அவர் நடித்த யுவராஜு, வம்சி, டக்கரி தொங்கா, பாபி, நிஜம், நானி, அர்ஜுன் என முதல் பத்து படங்களில் அதனை உணர முடியும்.
அவையனைத்தும் தமிழ், மலையாளம், இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த அளவுக்கு அப்படங்களில் ‘விஷயம்’ இருந்தது.
இன்றும் கூட அந்தத் திரைப்படங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
தமிழிலும் கூட மகேஷ்பாபு நடித்த சில ‘டப்பிங்’ திரைப்படங்களுக்குச் சில தீவிர ரசிகர்கள் இருப்பதைச் சமூக வலைதளங்களில் காண முடியும்.
‘தோல்வியடைந்த படங்களைத் தொலைக்காட்சியில் ரசிக்கவே ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் வெற்றி பெற்ற படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும்’. இந்தக் கேள்விக்குத்தான் பதிலளித்திருக்கிறது ‘அத்தடு’.
ஸ்டார் மா தொலைக்காட்சியில் இப்படம் இத்தனை முறை ஒளிபரப்பு ஆகியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? குறிப்பிட்ட டிஆர்பியைப் பெறும் அளவுக்குப் பார்வையாளர்கள் தொடர்ச்சியாக இதனை ரசித்து வருகின்றனர் என்றே அர்த்தம்.
தமிழில் ‘படையப்பா’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் இப்படிப்பட்ட வரவேற்பை ரசிகர்களிடம் இன்றும் பெற்று வருகின்றன.
‘அத்தடு’ திரையனுபவம்!
ஈவிரக்கமற்ற ஒரு ‘கூலிப்படை’ கொலையாளி மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவரைக் கொன்றுவிட்டுத் தப்பிக்கும்போது போலீசிடம் பிடிபட நேர்கிறது. அதன்பின்னே யாரோ சிலரது சதி இருப்பதாக அவர் உணர்கிறார்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஒரு ரயிலில் ஏறுகிறார் அந்தக் கொலையாளி. எதிர் இருக்கையில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார்.
தான் வாழ்ந்த கிராமத்தை விட்டு ஓடிப்போன அவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்தங்களைக் காணச் செல்கிறார்.
ரயிலில் இருக்கும் அந்தக் கொலையாளியை ஒரு ரயில்நிலையத்தில் போலீசார் சுற்றி வளைக்கின்றனர். அப்போது நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டில் கொலையாளியின் எதிரே அமர்ந்திருந்த நபர் கொல்லப்படுகிறார். அவர் தப்பித்துவிடுகிறார்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் அந்தக் கொலையாளி, தன் எதிரே அமர்ந்திருந்த நபரின் அடையாளத்தைப் பயன்படுத்த முனைகிறார். அவரது கிராமத்திற்குச் சென்று, தன்னை ‘அவராக’ அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
ஒரு பெரிய வீட்டின் வாரிசாக, அந்தக் கொலையாளி அடையாளம் காணப்படுகிறார்.

அக்குடும்பத்தில் உள்ள எல்லோரும் அவரை விரும்பத் தொடங்குகின்றனர்.
அந்த நேரத்தில், அந்தக் கொலையாளியைத் தேடி வருகின்றனர் போலீசார்.
அதன்பின் என்னவானது? தன்னைச் சதியில் சிக்க வைத்தவர்களை அந்தக் கொலையாளி கண்டறிந்தாரா? பாசமே என்னவென்று உணராத அவர்,
அந்தக் குடும்பத்தோடு இருந்த சில நாட்களில் அதனைக் கண்டறிந்தாரா? அவற்றுக்கான பதில்களைச் சொல்கிறது ‘அத்தடு’.
இதில் ‘கொலையாளி’ பாத்திரத்தில் நடித்தவர் மகேஷ்பாபு என்று நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை.
உண்மையைச் சொன்னால், இது ‘அம்புலிமாமா’ டைப்பில் காதில் பூக்கூடையைத் தூக்கி வைக்கும் கதை. திரைக்கதை ஆசிரியராகத் திகழ்ந்த த்ரிவிக்ரமை தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர வைத்த திரைப்படம் இது.
மகேஷ்பாபு உடன் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் இது.
டூயட் ஆடுவதற்கான பாடல்கள் மட்டுமல்லாமல், இதில் மகேஷ்பாபு உடன் த்ரிஷா நடித்த காமெடி காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
இதில் நாயகனின் தாத்தாவாக நாசர் நடித்திருந்தார். தெலுங்கில் அவரை பிஸியான ‘குணசித்திர நடிகர்’ ஆக்கியதில் இப்படத்திற்கும் பெரும்பங்குண்டு.
‘அத்தடு’வில் சோனு சூட் வில்லனாக நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், சாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ், ராகுல் தேவ், சரண்ராஜ், தணிகலபரணி, ஹர்ஷவர்தன், எம்.எஸ்.நாராயணா, சுனில், ராஜிவ் கனகலா, அஜய், பிரம்மானந்தம், சுதா, ஹேமா என்று பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் இயக்குநர் கே.விஸ்வநாத்தும் ‘கௌரவமாக’த் தலைகாட்டியிருந்தார்.
கே.வி.குகனின் ஸ்டைலிஷான ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் பரபரப்பூடும் படத்தொகுப்பு, ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் திரையில் காட்டிய அதிரடி மற்றும் நடனம், ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட இன்ன பிற தொழில்நுட்பச் சிறப்பம்சங்களோடு மணி சர்மா அமைத்த கலக்கலான இசையமைப்பும் ‘அத்தடு’வை பெருவெற்றி பெறச் செய்தது.
தெலுங்கில் 38 தியேட்டர்களில் ‘அத்தடு’ 100 நாட்களைக் கடந்தது. வெளிநாட்டு வியாபாரம், டிவிடி உரிமை என்று பல வகையில் பணமழையைப் பொழிய வைத்தது.
அந்த வரிசையில் தான், அதிக முறை ஒளிபரப்பான சாதனையும் இடம்பெற்றிருக்கிறது.
மகேஷ்பாபுவின் சிறப்பம்சம்!
‘அத்தடு’ போலவே, த்ரிவிக்ரம் உடன் அவர் இணைந்த ‘கலேஜா’ படமும் தற்போது அதிக முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது.
‘போன வாரம்தான் அந்தப் படத்தைப் பார்த்தோம். பரவாயில்ல, இந்த வாரமும் பார்க்கலாம்’ என்று ரசிகர்கள் ‘ப்ரோக்ராம்’ செட் செய்யும் அளவுக்கு ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன மகேஷ்பாபுவின் திரைப்படங்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சமூகத்திற்குச் சேவையாற்றுகிற நாயகன் அல்லது குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொண்டிருக்கிற திரைக்கதை என்றே அவரது படங்கள் இருந்து வருகின்றன.
அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள இன்னொரு தெலுங்கு நட்சத்திரமான பவன் கல்யாண் கூட அப்படிப்பட்ட கதைகளில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. அதுவே மகேஷ்பாபுவின் சிறப்பம்சம்.

மகேஷ்பாபு நடித்த பல திரைப்படங்கள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றைக் காணும்போது மேற்சொன்ன சிறப்புகளை நாம் உணர முடியும்.
அந்த வரிசையில் ‘அத்தடு’ திரைப்படமும் ‘நந்து’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது.
‘அப்படியென்னடா அந்தப் படத்துல இருக்குது’ என்பவர்கள் இதனை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
– மாபா