Take a fresh look at your lifestyle.

மனிஹெய்ஸ்ட் புரொபசரும் எம்.ஜி.ஆர். பார்முலாவும்..!

182

ஒழுக்கசீலன் என்று போற்றத்தக்க வகையில் எந்தவொரு தனிமனிதரும் இருந்திட முடியாது. ஆனால், அவ்வாறான குணாதிசயங்களோடு கூடிய மனிதராக வாழ்ந்திட வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குள்ளும் உண்டு.

சாதாரண மனிதர்களால் முடியாததை நிகழ்த்துபவனே நாயகன். இதிலிருந்து விலகி சராசரி மனிதர்கள் படைப்புகள் இடம்பெறத் தொடங்கியவுடன், வழக்கத்திற்கு மாறான விளிம்புநிலை மனநிலை கொண்ட அல்லது அவ்வாறான சமூகங்களில் வாழும் மனிதர்கள் வாழ்க்கையைச் சொல்லும் படைப்புகளும் வரத் தொடங்கின.

மிகச் சமீபகாலமாக மீண்டும் அதீத சாகசத்தன்மையுடன் கூடிய நாயகர்கள் வலம்வரத் தொடங்கியிருக்கின்றனர்.

அவர்கள் வெளியுலகில் சாதாரண மனிதர்களாகத் தோன்றினாலும், அடிப்படையில் சராசரி மனிதர்கள் வரையறுத்துள்ள ஒழுக்கம், பண்பு, குணநலனின் உச்சமாக வெளிப்படுத்தப் படுகின்றனர்.

சமூகவலைதளங்களில் மிக அதிகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ‘மனிஹெய்ஸ்ட்’ தொடரின் புரபொசர் பாத்திரமும் அப்படியொன்றுதான்.

‘லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான இத்தொடர், ஸ்பெயின் நாட்டிலுள்ள தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது.

இதன் தரத்தைப் பார்த்து, இத்தொடரை இரண்டு சீசன்களாக பிரித்து ’மனிஹெய்ஸ்ட்’ என்று பெயரிட்டு உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் தளம் வெளியிட்டது.

அதன் வெற்றியாக, இந்த சீரிஸின் மூன்றாம், நான்காம் பாகங்கள் வெளியாகி தற்போது ஐந்தாவது பாகத்துக்காக பெரும் ரசிகர் திரளே காத்துக் கிடக்கிறது.

கொள்ளைக்கான காரணம்!

’மனிஹெய்ஸ்ட்’ என்ற பெயரே இது கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதை உணர்த்திவிடும்.

பூஜ்ஜியத்தில் இருந்து முடிவிலா உச்சத்தை அடையும் பயணத்தைப் போல, சிறுவயதில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலேயே தங்கும் அளவுக்குப் பலவீனமான இளமைக்காலத்தைக் கொண்டவர் செர்ஜியோ மார்கினா.

ஒவ்வொரு நாளும் சினிமா கதைகளைச் சொல்லி வளர்க்கிறார் இவரது தந்தை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருட்டை மையப்படுத்தி இருக்கும்.

ஒருநாள், ஸ்பெயினுள்ள ராயல் மிண்ட் எனுமிடத்தில் கொள்ளையில் ஈடுபட முயன்றபோது செர்ஜியோவின் தந்தை காவலர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

யாரையும் கடுகளவும் துன்புறுத்திவிடக் கூடாது என்று வாழ்ந்தவர், தனக்குச் சொன்ன கொள்ளை கதைகளெல்லாம் அவரது சொந்த அனுபவம் என்று செர்ஜியோவுக்கு தாமதமாகப் பிடிபடுகிறது.

ஸ்பெயினின் ராயல் மிண்ட்டில் டாலர் அச்சடிக்கும் ஆலை மட்டுமல்லாமல் ஒரு அருங்காட்சியகமும் இயங்கி வருகிறது. எந்த இடத்தில் தந்தை கொல்லப்பட்டாரோ, அதே இடத்தில் கொள்ளையடிக்க வேண்டுமென்பதே செர்ஜியோவின் கனவாகிறது.

தந்தையின் ஆன்மா சாந்தியடைய, அதற்கான திட்டத்தைப் பல ஆண்டுகளாகத் தீட்டுகிறார் செர்ஜியோ. அதற்காக 8 நபர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கிறார்.

அனைவரும் சேர்ந்து கொள்ளையடிப்பதற்காக அந்த அருங்காட்சியகத்தில் புகுவதில் இருந்து திரைக்கதை வேகம் பிடிக்கிறது.

ஒருமுறை சென்றுவிட்டால் வெளியே உயிருடன் திரும்ப உத்தரவாதம் இல்லை என்ற நிலையில், அந்த கொள்ளை எவ்வாறு வெற்றிகரமாக நிகழ்த்தப்படுகிறது என்பதைச் சொல்வதில் தனித்து நிற்கிறது இத்தொடர்.

முதல் சீசனில் 13, இரண்டாவது சீசனில் 9 என்று 22 எபிசோடுகளும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும். ஒரே மூச்சில் பார்த்து முடிக்கும் ஆவலைத் தரும்.

புரபொசரின் மதிக்கூர்மை!

இருப்பவரிடம் கொள்ளையடித்து இல்லாதவருக்குக் கொடுக்கும் ராபின்ஹூட் வகையறா படைப்புகள் உலகமெங்கும் உண்டு.

மனிஹெய்ஸ்ட் நாயகன் செர்ஜியோ மார்கினா அதிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டு, யூரோ டாலர் அச்சடிக்கும் ராயல் மிண்ட்டை கைப்பற்றி அதில் வேண்டிய தொகையை அச்சடிக்கத் திட்டமிடுகிறார்.

இது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகச் சில திட்டங்களும், மீறி போலீசாருக்கும் உளவுத்துறையினருக்கும் தெரியவரும்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளச் சில திட்டங்களும் அவர் கைவசம் இருக்கின்றன.

இதில் எந்த பிசகும் ஏற்படாமல் இருக்க, தன் குழுவிலுள்ள 8 பேருக்கும் 2 கட்டளைகள் இடுகிறார். முதலாவது, எல்லோரும் ஏதாவதொரு தலைநகரத்தின் பெயரால் அழைக்கப்பட வேண்டும். இதனால், ஒருவரைப் பற்றி மற்றொருவர் முழுக்கத் தெரிந்துகொள்வது தவிர்க்கப்படும்.

இரண்டாவது, குழுவிலுள்ள ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் காதலோ, கலவியோ கொள்ளக் கூடாது. அவ்வாறு நிகழ்வது ரசாபாசத்தை உண்டாக்கி திட்டத்தில் தோல்வியை ஏற்படுத்திவிடும் என்பது புரபொசரின் எண்ணம்.

இதனை மீறி, அக்குழுவிலுள்ள டோக்கியோவுக்கு ரியோவுடன் காதல் உருவாகிறது. அதுவே, இக்கொள்ளையின் ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரை புரபொசர் திட்டமிடாத திருப்பங்களுக்கும் காரணமாகிறது.

இந்த கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ரஹீல் முரிலோவுடன் செர்ஜியோவுக்கு ஏற்படும் காதலும் அவற்றில் ஒன்று.

அதற்கும் டோக்கியோவே காரணமாக இருப்பார் என்று திரைக்கதையில் சொல்லப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

கொள்ளைக்கான இடத்தை நோட்டமிடுவதற்காக முன்கூட்டியே செர்ஜியோவும் டோக்கியோவும் செல்வதாகத் திட்டமிட்டு, டோக்கியோவின் தாய் இறந்ததால் அது வேண்டாம் என்பார் புரபொசர். டோக்கியோ பிடிவாதமாக இருக்க, அவருடன் ரியோ செல்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

இக்கதை முழுக்கவே புரபொசரின் மீது தீராத அன்பும் மரியாதையும் கொண்ட டோக்கியோவின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது.

எம்ஜிஆர் பார்முலா!

எந்தவித பேஷனுக்கும் உட்படாத, குறிப்பிட்ட வகையில் மட்டுமே சில காரியங்களை மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிற, புதியவர்களுடன் பழகத் தயங்குகிற, மற்றவர்களுடன் தனது மனதில் இருப்பதைப் பகிரத் தயங்குகிற ஒரு மனிதர் செர்ஜியோ மார்கினா.

அதே நேரத்தில், யாருடனும் ஒட்டாத குணநலன்களைக் கொண்டிருந்தாலும் ஒரு குழுவை நிர்வகிக்கும் ஆளுமை கொண்டவர்.

தன்னுடன் பணியாற்றுகிற, வேலை சார்ந்து பழக நேர்கிற எந்த பெண்ணுடனும் உறவு கொள்ளக்கூடாது என்பது புரபொசரின் விதிமுறைகளுள் ஒன்று.

குறிப்பாக, ‘வொர்க் இஸ் வொர்க்’ எனும் கொள்கை சார்ந்து இயங்கும் இவர், தன்னையும் அறியாமல் விசாரணை அதிகாரியுடன் காதல்வயப்படுவது இத்திரைக்கதையில் அற்புதமான இடம்.

உண்மையைச் சொன்னால், இத்தொடரின் வெற்றியே செர்ஜியோவின் குணநலன்கள், பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், கூர்மையான திட்டமிடல்களைச் சார்ந்தே அமைந்திருக்கிறது.

யதார்த்த வாழ்க்கையில் இப்படியொரு மனிதனைச் சந்திக்கவே முடியாது என்ற வகையில் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கிட்டத்தட்ட புரபொசர் பாத்திரம், எனக்கு எம்ஜிஆரின் பல்வேறு திரைப்படங்களை நினைவூட்டியது. அவர் நடித்த திரைப்படங்களில் அவரது பாத்திரம் வெவ்வேறாக இருந்தாலும், அதன் மையச்சரடு ஒழுக்கமாக குணநலன்களோடு வாழும் சிறந்த மனிதன் என்பதாகவே இருக்கும்.

தன்னால் செய்ய இயலாத ஒன்றை தூற்றுவது மனித இயல்பு. அதற்கு நேரெதிராக, அப்படியொன்றை எதிர்க்கருத்து ஏதுமில்லாமல் ஏற்றுக்கொள்வதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இதனை நன்கு உணர்ந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், பெரும்பாலான படங்களில் அவரது பாத்திரம் ஒழுக்கத்தின் உச்சமாகவே வெளிப்பட்டன.

அற்புதமான ஒழுக்கசீலன்!

இத்தொடரில் புரபொசரின் பேச்சு, நடவடிக்கை, பண்பை ரசிக்கும் டோக்கியோவும் நைரோபியும் அவரைச் சீண்டுகின்றனர். அவரோடு உறவு கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதனைக் கேட்டு புன்னகைக்கும் புரபொசர், ஒருபோதும் அதற்கு உடன்படுவதில்லை. அது தனது கொள்கைக்கு உடன்பாடானது அல்ல என்று மென்மையாக மறுப்பது அவரது பழக்கம்.

பெண்களிடத்தில் இத்தனை கூச்சம் என்றதும், செர்ஜியோ தன்பாலின ஈர்ப்பாளர் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது.

ஆண்-பெண் உறவை மட்டுமே விரும்பும் அவர், தனக்கான பெண்ணைச் சந்திக்கும் காதல் தருணம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறார்.

அத்தனைக்கும் மேலாக, இந்த கொள்ளையில் பிணையக் கைதிகளோ, போலீசாரோ, பணியாளர்களோ சிறிதும் துன்புறுத்தப்படக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருப்பார் புரபொசர்.

வழக்கமான ‘ஹெய்ஸ்ட்’ திரைப்படங்களில், தொடர்களில் ரத்தமும் துப்பாக்கிச் சத்தமும் அதிகமாக இருப்பதற்கு நேரெதிரான விஷயம் இது.

சக மனிதனைச் சாகடிப்பதை வீடியோ கேம் விளையாட்டாக நினைக்கும் மனோபாவம் பெருகிவரும் நிலையில், புரபொசரின் பாத்திரப் படைப்பு மனிதத்துக்கு வெகு அருகில் நிற்கிறது.

அசகாய சூரன்!

உடலுக்குப் பாந்தமாக பொருந்தும் கோட் சூட் மற்றும் டை, பாந்தமாகச் சீவிய தலைமுடி, அளவான தாடி, கண்ணாடி, புஜபல பராக்கிராமம் வெளியே தெரியாத உடலமைப்பு என்றிருக்கும் புரபொசர் பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்தது போன்று பொருந்துபவர் நடிகர் அல்வரோ மார்டே.

இவரா இதைச் செய்தார் என்று வியக்கும் அளவுக்கான உருவம். ஆனால் செயல்புயலாக இருக்கும் நடவடிக்கைகள்.

கிட்டத்தட்ட ‘பசுத்தோல் போர்த்திய புலி’ போன்ற பாத்திரம். அதைக் கச்சிதமாக வெளிப்படுத்தியதில் ஆக்‌ஷன் ஹீரோக்களையும் சூப்பர்மேன்களையும் பின்னுக்குத் தள்ளுகிறார் அல்வரோ.

மிகமுக்கியமாக, முதலாளித்துவத்தை எதிர்க்கும் சாதாரண மனிதரின் எண்ணங்களை வெளிப்படுத்துகையில் அவரது முகம் முரணாகத் தோன்றாது.

பொதுவாகவே, மேலை நாடுகளில் வாழும் மக்கள் காதல், அன்பு, பாசம் போன்றவற்றை அதீதமாக வெளிப்படுத்த மாட்டார்கள் என்ற எண்ணம் கீழை நாடுகளில் அதிகம்.

கதறி அழுவதோ, காதலை எண்ணி உருகுவதோ, ஆனந்தத்தில் தாண்டவமாடுவதோ, ஒழுக்கத்தில் சேர்ந்தொழுகுவதோ அங்கிருப்பவர்களுக்குப் பிடித்தமில்லாதது என்ற எண்ணமும் நம்மில் பதிந்திருக்கிறது.

டைட்டானிக் திரைப்படம் எப்படி இந்த கற்பிதங்களை உடைத்ததோ, அதேபோல உணர்ச்சிப் பிரவாகம் உலகமெங்கும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்ற வகையில் மனிஹெய்ஸ்ட் தொடரின் அத்தனை பாத்திரங்களும் வார்க்கப்பட்டிருக்கின்றன.

அடைய முடியாத உயரத்தைத் தொட முயற்சிப்பது போல, அதீத ஒழுக்கம் குறித்த கற்பனை அவர்களுக்கும் உண்டு என்பதற்கான ஒரு சோறு ‘புரபொசர்’ பாத்திரம்.

– உதய் பாடகலிங்கம்.