Take a fresh look at your lifestyle.

‘மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’ – டாம் க்ரூஸ் வசீகரிக்கிறாரா?

164

பல ஹாலிவுட் நாயகர்கள் நம்மூர் ரசிகர்களுக்கு அறிமுகமாகக் காரணம், அவர்கள் நடித்த ஆக்‌ஷன் படங்களே. அவற்றில் அவர்கள் நிகழ்த்திய சாகசங்கள் இன்றும் திரும்பத் திரும்ப கண்டு ரசிக்கிற வகையில், கொண்டாடுகிற மாதிரி அமைந்திருக்கின்றன.

அந்த வரிசையில் இடம்பெறுகிற படங்களில் ஒன்று ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ். டாம் க்ரூஸ் இதன் நாயகன். ப்ரூஸ் ஜெல்லர் உருவாக்கிய தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘மிஷன் இம்பாசிபிள்’ முதல் பாகம் 1996ஆம் வந்தது.

அந்த வரிசையில் இந்த சீரிஸின் நாயகன் ஈதன் ஹண்ட் நிகழ்த்துகிற ஏழாவது சாகசமாக வெளியானது, 2023இல் வந்த ‘மிஷன் இம்பாசிபிள் – தி டெட் ரெக்கனிங்’. அதன் இரண்டாம் பாகம் இப்போது உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது.

எரிக் ஜெண்ட்ரஸன் உடன் இணைந்து இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்கோரி.

வழக்கமான ‘மிஷன் இம்பாசிபிள்’ படமாக இது அமைந்திருக்கிறதா? சிறப்பானதொரு ‘ஆக்‌ஷன்’ படம் பார்த்த திருப்தியைத் தருகிறதா?

உலகைக் காக்கிற நாயகன்!

அமெரிக்காவின் ஐஎம்எஃப் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) அரசாங்கத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படாமல் ‘ரகசிய வாழ்க்கை’ வாழ்ந்து வருகிறார்.

ஆனால், அவரை அரசே தேடிச் செல்கிற நிலை ஏற்படுகிறது.

அதற்குக் காரணமாக விளங்குகிறது ‘எண்டைட்டி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு.

அது உலகையே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. எந்தவொரு நாடாலும் அதனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

இந்தச் சூழலில், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே போர் ஏற்படுகிற வகையில் அவற்றைக் கட்டுப்படுத்துகிற வகையில் செயல்படுகிறது எண்டைட்டி.

இன்னும் மூன்று நாட்களில் பெரும் போர் மூளப் போகிறது எனும் சூழலில், எண்டைட்டியை முழுமையாக அழிப்பதும் ஆபத்தையே தரும்.

ஆதலால், அதன் செயல்பாட்டை முடக்கி, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.

அதனை மேற்கொள்ள, உலகின் பல மூலைகளில் இருக்கும் சில விஷயங்களை ஒருங்கிணைத்தாக வேண்டும். சில சாதனங்களைக் கைப்பற்றியாக வேண்டும்.

அவற்றில் ஒன்று ஈதன் ஹண்ட்டின் குழுவில் அங்கம் வகிக்கும் கம்ப்யூட்டர் நிபுணர் லூதரிடம் (விங் ராம்ஸ்) இருக்கிறது.

அதனை ஹண்ட்டின் எதிரியான கேப்ரியேல் (எசாய் மொரால்ஸ்) திருடிச் செல்கிறார்.

அப்போது லண்டன் நகரமே அழிந்துவிடுகிற ஆபத்தைத் தவிர்க்கத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார் லூதர்.

எண்டைட்டியை முழுக்கத் தன்வசப்படுத்துவதே கேப்ரியேலின் திட்டம். இப்போது அவர் பின்னே அழைவதை விட, எண்டைட்டியின் கட்டுப்படுத்துவதற்கான சாதனங்களைத் தேடுவதே சரி என்று தன் பயணத்தை மேற்கொள்கிறார் ஈதன் ஹண்ட்.

அந்தப் பயணம் நல்லபடியாக அமைந்ததா? எண்டைட்டியை கட்டுப்படுத்த எண்ணுகிற கேப்ரியேல் அதற்குத் தடையாக அமைந்தாரா? ரஷ்யா போன்ற நாடுகளின் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈதன் ஹண்டுக்கு தொந்தரவு தந்தார்களா?

இறுதியில், எண்டைட்டியின் செயல்பாடு முடக்கப்பட்டு உலகம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறது இப்படம்.

ஆக, ‘உலகையே காக்கிற நாயகனின் கதை’ என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

ஆனால், அப்படிச் சொல்கிற வகையில் நமக்குத் தூக்கத்தைக் கொட்டிக் கொடுக்கிற அளவுக்கு உள்ளது இதன் திரைக்கதை.

இதுவரையிலான ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் வசனக் காட்சிகளுக்கு நடுநடுவே சில சண்டைக்காட்சிகள் இருக்கும்.

‘த்ரில்’ ஊட்டுகிற சில இடங்கள் நிச்சயம் இருக்கும்.

இதில் அப்படியொரு திரையனுபவமே கிடைக்கவில்லை. அதுவே இப்படத்தின் பெரும்பலவீனம்.

ஓவர்.. ஓவர்..!

ஒளிப்பதிவாளர் ப்ரேசர் டக்கார்ட், தயாரிப்பு வடிவமைப்பாளர் கேரி ப்ரீமேன், படத்தொகுப்பாளர் எட்டி ஹாமில்டன், இசையமைப்பாளர் மேக்ஸ் அருஜ், ஆல்ஃபி காட்ப்ரே, இது போக விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்பங்களில் ஈடுபட்ட கலைஞர்கள், இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்கோரியின் பார்வைக்குத் தங்கள் பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

ஆனால், எரிக் ஜெண்ட்ரஸன் உடன் இணைந்து இயக்குநர் தந்திருக்கும் எழுத்தாக்கம் சலிப்பூட்டுவதால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.

இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சிலர் ‘கிளாசிக்’ என்று சொல்லக்கூடும். ஆனால், சாதாரண ரசிகர்களுக்கு அந்த எண்ணம் துளி கூட இல்லாத வகையிலேயே இதன் உள்ளடக்கம் இருக்கிறது. நிறைய ‘க்ளிஷே’ காட்சிகளும் அதற்குக் காரணமாக இருக்கின்றன.

’மிஷன் இம்பாசிபிள்’ படங்களில் வருகிற டாம் க்ரூஸ், விங் ராம்ஸ், சிமோன் பெக் போன்றவர்களைத் தாண்டி, முந்தைய ‘தி டெட் ரெக்கனிங்’ படத்தில் நடித்த ஹெய்லி அட்வால், போம் கெள்மெண்டீப் போன்றவர்களும் இதிலுண்டு.

இப்படத்தில் முகத்திலும் உடலிலும் சுருக்கங்களைக் கொண்ட, வயது முதிர்ந்த டாம் க்ரூஸை காண்கையில், வழக்கமான ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்கள் தரும் உற்சாகத்தைப் பெற முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அவரது பழைய வசீகரத்தைப் படத்தில் எங்கும் காண இயலவில்லை. அதுவும் இப்படத்தின் பலவீனங்களில் ஒன்று.

’ஒரு ஆபத்து. அதனைச் சரி செய்வதற்கான வழிகளைக் கண்டறிதல், அவற்றைத் தேடிக் கையிலெடுத்தல், சரியான நேரத்தில் அவற்றைச் செயல்படுத்தி ஆபத்தைத் தடுத்தல்’ என்று வழக்கமான ‘ஆக்‌ஷன் அட்வெஞ்சர்’ கதையே இப்படத்தில் இருக்கிறது.

ஆனால், அதனைச் சரிவர ரசிகர்கள் புரிந்துகொள்கிற வகையில் கதை சொல்லலைக் கையாளாமல் படுத்தி எடுக்கிறது இப்படைப்பு.

உளவாளிகளின் சாகசங்களைச் சொல்கிற திரைப்படங்களை, அவற்றை ஒரு சீரிஸ் ஆக்குகிற முயற்சிகளை வெறுக்கிற சில தீவிர ‘உலக சினிமா’ ரசிகர்களுக்கு ‘மிஷன் இம்பாசிபிள்: தி பைனல் ரெக்கனிங்’ மகிழ்ச்சியைத் தரலாம். ஏனென்றால், இக்கதைக்கு இந்தப் படைப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

நாளை, இதே பாத்திர வார்ப்புகளை வேறொரு குழுவினர் பயன்படுத்தி புதிய திரையனுபவங்களைத் தரக்கூடும்.

ஆனாலும், ‘மிஷன் இம்பாசிபிள்’ என்றவுடன் தோன்றுகிற நாயகன் டாம் க்ரூஸின் பிம்பமும், அதன் பின்னணியில் நம் மனதுக்குள் ஒலிக்கிற இதன் ‘தீம் மியூசிக்’கும் இப்படியொரு முடிவைச் சந்தித்திருக்க வேண்டாம் என்பதே இந்த சீரிஸின் தீவிர ரசிகர்களது கருத்தாக இருக்கும்.

அவர்களனைவரும் ‘அப்புறம்’ என்றவாறு தியேட்டரில் இருந்து எழுந்து வேறு வேலைகளை நோக்கிச் செல்கிற வகையில் அமைந்திருக்கிறது இப்படம் தருகிற திரையனுபவம்.

-உதயசங்கரன் பாடகலிங்கம்