Take a fresh look at your lifestyle.

எட்டு இயக்குநர்களை ஒன்றிணைத்த மணிரத்னம்!

தமிழ் சினிமாவில், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குநர்கள் நடித்திருந்தனர்.

அதன்பிறகு ட்ராகன் படத்தில் 5 இயக்குநர்கள் நடித்திருந்த நிலையில், தற்போது மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் 8 இயக்குநர்கள் நடித்துள்ளனர். அவர்களும் அவர்கள் இயக்கிய படங்களும் இதோ.

கமல்ஹாசன்:

உலக நாயகன் கமல்ஹாசன், சேச்சி 420 என்ற இந்திப் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அடுத்து ஹேராம் என்ற படத்தைtஹ் தமிழிலும் இந்தியிலும் இயக்கினார்.

அதன் பிறகு விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

நாயகனுக்குப் பிறகு, மணிரத்னத்துடன் கமல், இணைந்த இரண்டாவது படம் தக் லைஃப்.

சிம்பு:

அஷ்டாவதானி டி.ராஜேந்தரின் மகன். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதல் அழிவதில்லை மூலம் ஹீரோ ஆனார். வல்லவன் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார் சிம்பு.

நாசர்:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான நாசர், ஹீரோ, வில்லன் என நிறைய வேடங்களில் அநாயாசமாக நடித்தவர், அவதாரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து  தேவதை, மாயன், பாப்கார்ன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

ஜோஜூ ஜார்ஜ்: 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு, புத்தம்புது காலை விடியாதா? ஃபப்பூன், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த இவர், தக் லைப் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பனி என்ற படத்தின் இயக்குநர் இவர்.

பாபுராஜ்:

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பாபுராஜ், பரசுராம், ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

பிளாக் தல்யா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, மனுஷ்ய மிர்கம், பிளாக் காபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

தனிகெல்லா பரணி:

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தனிகெல்லா பரணி. 1994 ஆம் ஆண்டு வெளியான ‘வீட்ல விஷேசங்க’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு, கம்பீரம், கில்லி ஆகிய படங்களில்  நடித்திருந்தார். இவர், தெலுங்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மிதுனம் என்ற படத்தை இயக்கியிருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இந்தப் படத்தின் நாயகனாக நடித்தார். 

மகேஷ் மஞ்ச்ரேக்கர்:

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். 2013-ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடித்த அவர், தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.

வாஸ்தவ்: தி ரியாலிட்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 30 படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ஏக் ராதா ஏக் மீரா, நிரவாதி ஆகிய படங்களை டைரக்ட் செய்து வருகிறார். 

சின்னி ஜெயந்த்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் முத்திரை பதித்தவர் சின்னி ஜெயந்த்.  உனக்காக மட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கானல் நீர், நீயே என் காதலி ஆகிய படங்களையும் இயக்கினார்.

– பாப்பாங்குளம் பாரதி.