கேரள சினிமாவின் தந்தை ஒரு தமிழர். அவர் பெயர் ஜே.சி.டேனியல். இந்த முதல் மௌன சினிமா முயற்சியை மலையாளத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
கமல் எனும் இயக்குனர் 2013இல் பிருத்விராஜ், ஸ்ரீனிவாசன், மம்தா மோகன்தாஸ் மற்றும் பலரை நடிக்க வைத்து இதனைப் படமாக்கியிருக்கிறார்.
2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு திரைப்பட விருதுகளைத் தட்டிச் சென்ற படம் செல்லுலோயிட்.

கேரளாவில் வசித்த செல்வந்தரான பல் டாக்டர் ஜோசப் செல்லையா டேனியல் தனது “விகதகுமாரன்” எனும் கேரளாவின் முதல் மௌன சினிமாவை 1928இல் எடுத்து திரையிட்டார்.
இந்தியாவில் வெறும் புராணப் படங்கள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு கேரளத் தமிழர் ஒரு சமூகப் படம் எடுத்திருக்கிறார் என்பது ஒரு புரட்சி.
அடுத்த புரட்சி, மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியான பி.கே.ரோசி ஒரு தலித். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி, அவள் நடித்த படத்தைப் பார்க்க திரையரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பது தீராத சோகம்.
அவள் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அவள் தமிழகத்துக்கு ஓடி வந்து தலைமறைவானாள்.

தாதா சாகிப் ஃபால்கே-வைச் சந்தித்து முதல் மௌன படத்தை கேரளாவில் எடுத்த தமிழரான ஜே.சி.டேனியலின் கடைசி காலத்தில் மருத்துவ செலவுக்குக் கூட வழியில்லாமல் செத்துப்போன சோகம் படத்தில் சொல்லப்பட்ட விதம் படம் முடிந்தவுடன் நெஞ்சில் கனக்கிறது.
இவரது வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் சேலங்காட்டார் எழுதியதைத் தமிழில் செ.புஷ்வராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் பா.ராமமூர்த்தி வடிவமைப்பில் இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது.
– கலை விமர்சகர் இந்திரன் ராஜேந்திரன்