Take a fresh look at your lifestyle.

மனதைக் குழைந்து நெகிழ்த்தும் ‘கும்கி-2’ !

மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெராடி, சூசன் நடிப்பில் பிரபு சாலமன் எழுதி இயக்கி இருக்கும் படம் கும்கி 2. ஜெயந்தி லால் காடா மற்றும் தவால் காடா தயாரிப்பில் உருவான படம் இது.

மலைகளுக்கு நடுவே செறிந்த காடுகளுக்கு உள்ளே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழும் பாசம் என்றால் என்ன என்றே அறியாத சிறுவன் ஒருவன்.

அப்பா யார் என்று தெரியாத நிலையில் இன்னொருவனோடு வாழ்ந்து கொண்டு எப்போதும் மது குடித்துக் கொண்டு யாராயிருந்தாலும் அடித்து நொறுக்கும் அம்மா (சூசன்) . அம்மாவின் தொடுப்பு நபரால் சிறுவனுக்கு கிண்டல் கேலி.

இப்படி வாழும் அவன் இயற்கை, வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் இவைகளை நேசிக்க ஆரம்பிக்கிறான்.

தந்தத்துக்காக யானைகளைக் கொல்லும் கூட்டம் ஒன்று, ஒரு காட்டு யானைக் கூட்டத்தில் ஒரு யானையை சுட்டுக் கொல்ல, மற்ற யானைகள் சிதறி ஓட, ஒரு குட்டி யானை ஒரு பள்ளத்துக்குள் விழுந்து விடுகிறது.

குழியில் இருந்து ஏற முடியாமல் பல நாள் பட்டினியில் தவிக்கிறது யானை.

அந்தப் பக்கம் வந்த சிறுவன் குழிக்குள் இறங்கி போராடி கஷ்டப்பட்டு யானையைத் தனி ஆளாக மேலே ஏற்றுகிறான்.

நன்றியுடன் அந்த யானை அவன் கூடவே வருகிறது.

மகன் யானை வளர்ப்பதை அறிந்த பஜாரி அம்மா, யானை வளரட்டும்; வளர்ந்த உடன் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கிறாள்.

அவனும் வளர்ந்து பெரியவனாக (மதி), ஒரு நாள் யானை காணாமல் போகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அவன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற நிலையில், அந்த யானை, காட்டு யானைகளை விரட்டும் கும்கி யானையாக இருப்பது தெரிய வருகிறது.

சட்டப்படி ஒரு யானையை வளர்ப்பதற்கான எல்லா ஆவணங்களும் இப்போது யானையை வைத்திருக்கும் அந்தப் பாகன் பெயரில்தான் இருக்கிறது.

இந்த நிலையில் ஓர் அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதி சாக வேண்டும் என்பதற்காக யானையை வெட்டிப் பலி கொடுக்கும் பூஜை செய்ய யானையைத் தேடுகிறார்.

பாகனிடம் இருக்கும் யானையை அரசியல்வாதிகள் ஒரு கோடி ரூபாய்க்கு கேட்கிறார்கள்.

பாகன் யானையைக் கொடுத்தானா? யானையைக் காப்பாற்றி வளர்ந்த நாயகனுக்கு யானை கிடைத்ததா? அரசியல்வாதியின் பலி நிறைவேறியதா? என்பதே படம்.

படத்தின் முதல் கால் மணி நேரம், அடர்ந்து செழித்த காடுகள், அவற்றின் ஈரமான கரும்பச்சை நிறம், வானின் வழி பேரிரைச்சலோடு கீழிறங்கும் முரட்டு அருவிகள்,

அனகோண்டா பாம்பு போல நீண்டு பருத்து வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், சிறு சிறு பூச்சிகள், காட்டெருமைகள், இயற்கை சத்தங்கள், ஆழமான அமைதி இவையெல்லாம் இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் கிடைக்காத ஒரு காட்சி அனுபவம்.

இயக்குநர் பிரபு சாலமன், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் படக்குழுவினரின் பகீரத உழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை. எல்லோருக்கும் வாழ்த்துப் பூங்கொத்துகள்!

சிறுவன் மற்றும் குட்டி யானை இடையேயான ஒவ்வொரு காட்சியும் கவிதை. யானைக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுப்பது, அதற்கு பவுடர் அடித்து, காதில் தோடு போல மாட்டி சிறுவன் ரசிப்பது.

தும்பிக்கையால் வளைத்து அவன் மேல் யானை காட்டும் பாசம், யானையின் எக்ஸ்பிரஷன்கள் சிறுவனின் முகபாவனைகள் யாவும் அபாரம்.

(சில ஹீரோக்களே கேமரா முன்னாள் யானை போல இறுகிப் போய் நிற்பார்கள். அவர்களை விட இந்த யானை சிறப்பாகவே ‘நடித்து’ இருக்கிறது)

மேலே சொன்ன விசயங்களில் இருந்தே கிளைமாக்சுக்கு லீட் எடுப்பது திரைக்கதையின் நேர்த்தி.

சில காட்சிகளில் காட்டை விட்டுக் கதை நகர்ப்புறத்துக்கு வரும்போது, காட்டுக்குள்ளேயே இருங்கப்பா என்று மனம் ஏங்கும் அளவுக்கு சிறப்பான படமாக்கல்.

நடு ரோட்டில் யானை போடும் சண்டை எதிர்பாராத விருந்து.

ரசூல் பூக்குட்டியின் உதவியாளராக, வித்தியாசமான ஒலிகளைப் பதிவு செய்ய வரும் பெண்ணை (ஷ்ரிதா ராவ்) படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விதமும் அருமை.

இடையில் நாயகனின் நண்பராக வரும் ஆண்ட்ரூஸ், காமெடி என்ற பெயரில் பழைய வடிவேலு மாடுலேஷனின் பேசிக் கொண்டு ரொம்பவே சோதித்தார்.

ஆனால், சரியான சமயத்தில் திரைக்கதையை சரியான திசையில் கொண்டு வந்து, படத்தை தூக்கி நிறுத்துகிறார் பிரபு சாலமன்.

அவ்வளவு அழகான ஒரு இயற்கை வெளியில் எங்கே கேமரா வைத்தாலும் அழகாகவே தெரியும். எனினும் அதை சலுகையாக எடுத்துக் கொள்ளாமல் தன் பங்குக்கு அழகு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை – சோகக் காட்சிகளில் கனமும் ஆபத்துக் காட்சிகளில் திகிலும் ஏற்றுகிறது.

இயக்கத்தோடு சேர்ந்து பயணிக்கும் புவனின் படத்தொகுப்பு படத்தை வேகப்படுத்துகிறது.

அம்மாவின் கேரக்டரை மட்டும் கொஞ்சம் கண்ணியமாகப் படைத்திருந்தால் இந்தப் படம் குழந்தைகளுக்கான படம் என்று குன்றின் மேல் ஏறிச் சொல்லியிருக்கலாம்.

எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஒரு சாதாரண காட்சியை எடுப்பதற்குக் கூட பெரும் உழைப்பைக் கேட்பதுதான் சினிமா ஷூட்டிங்.

ஆனால், அவ்வளவு உயர்ந்த மலையில் மின்சாரம் இல்லாத சூழலில் யானையை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு போய், அதற்கான உணவைக் கூட கீழே இருந்துதான் கொண்டு போக வேண்டும் என்ற சூழலில்,

ஆபத்தான பல இடங்களில் கேமரா வைத்து இப்படி ஒரு படம் எடுத்து, திரைக்கதை ரீதியாகவும் சிறப்பான படம் கொடுத்திருக்கும் பிரபு சாலமன், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோரின் உழைப்பு பிரம்மிப்பானது.

கும்கி 2 – பழகப் பரவசம்.

– சு.செந்தில் குமரன்