தமிழிலும் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், தனது தெலுங்குப் படங்களின் தமிழ் மொழிமாற்று மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமான ராணா டகுபதி, தமிழ், தெலுங்கு இரண்டிலும் புகழ்பெற்ற சமுத்திரக்கனி,
மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திரா விஜய், ஆடுகளம் நரேன் நடிக்க, தமிழ்ப் பிரபா கதை ஆலோசனை மற்றும் கூடுதல் திரைக்கதை வசனம் எழுத,
செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி, தமிழிலும் தெலுங்கிலும் வந்திருக்கும் படம் ‘காந்தா’.
படத்தின் முக்கியத் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மானும் ராணா டகுபதியும்,
1950-களின் ஒரு பிரபலமான நடிகர் டி.கே.மகாதேவன் (துல்கர் சல்மான்). அவரை உருவாக்கிய இயக்குநர் அய்யா.
இப்படி ஒரு சூழலில், அவன் கதையை விட ஹீரோயிசத்தை முன்னிறுத்தும் பாணியில் நடிப்பதும் அப்படிப்பட்ட படங்களை மட்டும் ஒப்புக்கொள்வதும் அய்யாவுக்குப் பிடிக்கவில்லை.
மகாதேவன் மேல் ஒரு பொய் கேஸ் போட்டு அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.
ஜெயிலுக்குப் போய் மீண்டு வந்த மகாதேவனை ஒரு பிரபல தயாரிப்பாளரின் (நிழல்கள் ரவி) மகள் (காயத்ரி) காதலிக்க,
அவளைக் கல்யாணம் செய்து கொண்டு மீண்டும் ஜெயித்து தனக்கு பிடித்த வகையில் ஆக்ஷன் ஹீரோவாக உயர்கிறான் மகாதேவன்.
மாடர்ன் சினிமா என்ற ஸ்டுடியோ ஓனர் மற்றும் தயாரிப்பாளர் மார்ட்டின் (ரவீந்திரா விஜய்) மீண்டும் மகாதேவன் – அய்யா இருவர் காம்பினேஷனில் ஒரு படம் எடுக்க விரும்புகிறார்.
படப்பிடிப்பின் முதல் நாள் அய்யா மேல் உள்ள கோபத்தைக் காட்டுகிறான் மகாதேவன். சாந்தா என்ற படத்தின் பெயரைக் காந்தா என்று மாற்றுகிறான். பனிப்போர் வலுவாகிறது.
அய்யா எடுக்கும் ஷாட்கள் ஒவ்வொன்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாக இருக்க, அதை மகாதேவன் தனக்கு சாதகமாக நடித்து மாற்றுகிறான்.
மகாதேவனுக்கும் கதாநாயகிக்கும் காதல் உறவு என்று போகிறது. இது அய்யாவுக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நிலையில் மகாதேவன் கதாநாயகி நெருக்கம், மகாதேவன் மனைவி மாமனார் இருவருக்கும் தெரிய வருகிறது. ஒரு எதிர்பாராத அசம்பாவிதம் நடக்கிறது.
மிகப்பிரபலமான இவர்கள் அனைவரையும் விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி (ராணா டகுபதி) எகத்தாளமாக நடந்து கொள்கிறார். குற்றம் என்ன? குற்றவாளி யார்? அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
துல்கர் சல்மான் அந்தக் கால பிரபல ஹீரோ என்ற கேரக்டரை உணர்ந்து நடிக்கிறார்.
படைப்பாளி என்ற கர்வம், நினைத்தது நடக்கவில்லையே என்ற குமுறல், தான் பார்த்து உருவாக்கிய நடிகன் இப்போது தன்னையே மதிக்காமல் இருக்கிறானே என்ற ஆத்திரம் என்று சிறப்பாக நடித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.
ஒரு பார்வைக்கு கீர்த்தி சுரேஷ் போல இருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பிலும் சிறப்பு.
டானி சஞ்சேஸ் லோபஸின் ஒளிப்பதிவு கருப்பு வெள்ளை, – கலர் மற்றும் 35 MM – சினிமாஸ்கோப் என்று எல்லா வகையிலும் அசத்துகிறது. ஒளி – இருள் பயன்பாடும் சிறப்பு.
ராமலிங்கத்தின் கலை இயக்கம் அபாரம்.
பூஜிதா டடிகொண்டா, அர்ச்சனா ராவ் ஹர்மன் கவுர் ஆகியோரின் உடைகள் மிகப் பொருத்தம்.
ஜானு சந்தரின் இசை ஜஸ்ட் ஒகே.
கதை திரைக்கதைதான் காலை வாரி விட்டது.
தங்களைப் பற்றி ஆபாசமாக தொடர்ந்து எழுதிய லக்ஷ்மி காந்தன் என்ற பத்திரிகையாளர் மீது தியாகராஜா பாகவதரும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் கோபப்பட, லக்ஷ்மி காந்தன் கொலை செய்யப்பட, அவர்கள் இருவரும் ஜெயிலுக்குப் போனார்கள் என்பது நடந்த ஒன்று.
ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஜெயிலுக்கு மகாதேவனையும் ‘இன்னொரு குணச்சித்திர நடிகரையும் (கலைவாணர்) ஜெயிலுக்கு அனுப்பி வைத்தது டைரக்டர் அய்யா என்கிறார்கள்.
இந்த இரண்டுங்கெட்டான் விஷயத்தை தவிர இந்தப் படத்துக்கும் தியாகராஜ பாகவதருக்கும் சம்மந்தம் இல்லை.
சமுத்திரக்கனி கேரக்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அய்யா என்ற பெயர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான எல்லீஸ்.ஆர். டங்கனைக் குறிக்கும்.
அனால், கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றோரின் சினிமா குருவான அவர் மிக நல்ல மனிதர்.
பின்னாளில் அவர் ஒருமுறை பேட்டி கொடுக்கும்போது ”MY BOYS ARE RULING TAMILNADU” சொன்னபோது அரசியல் மாறுபாடுகளை மறந்து கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரும் நெகிழ்ந்து ஏற்றுக் கொண்டது வரலாறு.
அவரின் பெயரை வைத்து ஏன் இப்படி பொறாமை பிடித்த இயக்குநர் கேரக்டரைப் படைக்க வேண்டும்? அது தப்பில்லையா?
அதே போல மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மிகப்பெரிய ஸ்டுடியோ அதிபர். திறமைசாலி. தனது மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பின் அனுபவத்தை வைத்து பல படங்களில் காட்சிகள் வைத்து அசத்தியவர். அவர் துப்பாக்கி வைத்திருந்தார்.
அங்கே இருக்கும்போது, எம்.ஆர்.ராதா, பெண் சம்மந்தப்பட்ட ஒரு விசயத்தில் மாட்டினால் சுந்தரம் சுட்டு விடுவார் என்று அங்கிருந்தே வந்துவிட்டார் என்பது வரலாறு.
அந்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயரை மாடர்ன் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றி அதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருந்தார் என்று சொல்லி அதன் மூலமும் சுந்தரத்தை அடையாளப்படுத்தி,
ஆனால் அவர் கதாநாயகியின் உதவியாளப் பெண்ணோடு உறவில் இருந்தார் என்று ஒரு காட்சி. இப்படி அவரைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.
முக்கியமாக நாயகன் கேரக்டர் யாரை அடையாளப்படுத்துகிறது என்பதில் மகா குழப்பம். தியாகராஜ பாகவதர் சுத்தமாக இல்லை.
துல்கரின் தலைமுடி ஹீரோயிச முன்னிறுத்தல்கள் சில்க் ஜிப்பா எல்லாம் எம்.ஜி.ஆரை ஞாபகப்படுத்துகிறது.
ஆனால், அவர் நாடகத்திலேயே எட்டு வேடத்தில் நடித்தவர், நடிப்புச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார் என்கிறார்கள் அது சிவாஜியை ஞாபகப்படுத்துகிறது.
விசாரணை அதிகாரி தோற்றத்துக்கு பொருத்தமாக இருந்தாலும் செயற்கையான ஓவர் நடிப்பு, தெலுங்கு வாசனை வீசும்படியாக அவரே டப்பிங் பேசுவது என்று ரொம்பவும் சோதிக்கிறார் ராணா டகுபதி.
படத் தயாரிப்பளர்களில் ஒருவர் என்பதற்காக இப்படியா?
ஒரு காட்சியில் ஒருவர், ஹீரோவைக் காட்டி ஒரு படத்துல இவர் பதினாறு வேடம் போட்டு இருக்கிறார் என்று சொல்ல, ஏன் இங்க நடிக்கிறதுக்கு வேற யாருமே இல்லையா என்கிறார் ராணா நக்கலாக.
கூந்தல் இருக்கறவங்க அள்ளி முடியத்தான் செய்வாங்க. அதுக்காக வழுக்கைத் தலையர்கள் பொறாமைப் படலாமா?
லெவலின் அந்தோணி கோனாசல்வேசின் படத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், முக்கியமாக கிளைமாக்ஸ் பகுதியில்.
“படத்தில் வரும் நாயகன், இயக்குநர், நடிகை, நாயகனின் அப்பா எல்லோரும் அயோக்கியர்கள், கெட்டவர்கள் வன்மம் பிடித்தவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள்.”
– இதுதான் 1950-களின் தமிழ் சினிமா என்கிறார்கள் துல்கர் சல்மானும் ராணா டகுபதியும்.
படத்தில் எந்த கேரக்டருடனும் படம் பார்ப்பவர்கள் ஒன்ற முடியவில்லை.
எவன் செத்தா என்ன, எவன் பொழைச்சா என்ன? எவன் குற்றவாளியா இருந்தா என்ன? என்ற மனநிலையே படம் பார்ப்பவருக்கு ஏற்படுகிறது.
படத்தின் டைட்டிலின் போது, கிருஷ்ணன் பஞ்சு, உள்பட பல தமிழ் இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் இவர்கள் புகைப்படத்தை மட்டுமே தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படத்திலும் காட்டுகிறார்கள்.
இதன்மூலம் தமிழ் சினிமா எப்படி இருந்ததுன்னு பாருங்க என்று நகையாடி தெலுங்கு ரசிகர்களைப் கவரப் பார்க்கிறார்கள்.
அவர்களுக்குப் பிடிக்கலாம். ஆனால், நம்ம ரசிகர்களுக்கு?
தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட மகாநடி என்ற – சாவித்ரியின் வரலாறு சொல்லும் படத்திலும் இப்படித்தான்.
சாதாரண நடிகையாக இருந்த சாவித்திரிக்கு சிறப்பான கேரக்டர்களைத் தந்து நல்ல வசனங்களை எழுதி, சிறந்த படங்களை இயக்கி, சாவித்ரியை உச்சத்துக்குக் கொண்டு போன கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஆரூர்தாஸ் போன்றவர்களை கோமாளி போலக் காட்டினார்கள்.
மொத்தத்தில் காந்தா… தமிழ் சினிமாவின் வில்லி.
– சு.செந்தில் குமரன்