தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், பழம்பெரும் கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர்.
முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ‘முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தை திரைக்கலைஞர் சிவகுமார் வெளியிட, சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
‘காற்றில் விதைத்த கருத்து’ நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவுக்கு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் K. பாக்யராஜ் தலைமை தாங்க, தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் RK செல்வமணி, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் T. சிவா, தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாக்யராஜ் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை வைஜெயந்தி பாட, தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் லியாகத் அலிகான் வரவேற்புரை வழங்கினார்.
நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குட்டி பத்மினி, ரோகிணி, தேவயாணி, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.
விழாவில், கவிஞர் முத்துலிங்கம் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.