எழுபதுகள், எண்பதுகளில் ‘பக்திப் படங்கள்’ என்றொரு வகைமை தமிழ் திரையுலகில் பிரபலம். சில நேரங்களில் ‘மினிமம் கியாரண்டி’யாக அந்த வகைமை படங்கள் கருதப்பட்டன.
தொண்ணூறுகளில் அது சற்றே சரிந்திருந்த வேளையில், ‘அம்மன்’ போன்ற படங்களின் வரவால் 2000-களில் கிராபிக்ஸ் உதவியோடு பக்திப் படங்கள் பெருக்கெடுத்தன.
அதன்பின் மீண்டும் ‘சைலண்ட் மோடு’க்கு போன இந்த வகைமை சமீப ஆண்டுகளாகப் பூதாகரம் எடுத்து வருகிறது. ‘ஆதி புருஷ்’ போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் கூட, சமகாலக் கதைகளோடு ஓரளவுக்குப் போட்டி போடுகிற வகையில் விஎஃப்எக்ஸ் உதவியோடு இவை உருவாக்கப்படுகின்றன.
அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிற ‘கண்ணப்பா’ இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
மோகன்பாபு தயாரித்திருக்கிற இப்படத்தில் அவரது மூத்த மகன் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்திருக்கிறார். அவரே திரைக்கதை வசனத்தையும் கையாண்டிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இதனை இயக்கியிருக்கிறார்.
ப்ரீத்தி முகுந்தன், மோகன்பாபு, சரத்குமார், மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரமானந்தம், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
‘கண்ணப்பா’ தரும் திரையனுபவம் எத்தகையது?
மேலோட்டமான தழுவல்!
வேடுவராகப் பிறந்த திண்ணன் மலை மீதிருந்த வாயுலிங்கத்தை வணங்கியதும் மாமிசத்தைப் பிரசாதமாகப் படைத்ததும் இறைவனின் கண்களில் ரத்தம் வருவதைத் தடுக்கத் தனது கண்களைக் கொடுத்ததும் ‘கண்ணப்ப நாயனார்’ பற்றி சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’மில் இருக்கிற தகவல்கள்.
கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு நீள்கிற இக்கதையைச் சுமார் 3 மணி நேரம் ஓடுகிற திரைப்படமாக ஆக்கியிருக்கிறது ‘கண்ணப்பா’ படக்குழு.
அதுவே ‘கண்ணப்பர்’ குறித்த கதையின் மேலோட்டமான தழுவல் இது என்று சொல்லிவிடும். அதற்கேற்ப, அக்கதையைத் தழுவி எடுக்கப்பட்டாலும், திரைக்கு ஏற்ப புனைவு கலந்திருப்பதாகத் தொடக்கத்திலேயே ‘கார்டு’ இடுகிறது படக்குழு.
மலைவாழ் மக்கள் வாழ்கிற ஒரு வனப்பகுதி. அவர்கள் 5 பிரிவுகளாகப் பிரிந்து அந்நிலத்தை ஆண்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் நாகன் (சரத்குமார்). அவரது மகன் திண்ணன்.
சிறு வயதில் தனது நண்பனை நரபலிக்கு பறி கொடுத்த காரணத்தால், கடவுள் என்ற பெயரே திண்ணனுக்கு அலர்ஜியாக இருக்கிறது. வளர்ந்தபிறகும் அதுவே தொடர்கிறது.
ஒருநாள் வேட்டையாடச் சென்ற திண்ணன், வழியில் நெமிலியை (ப்ரீத்தி முகுந்தன்) பார்க்கிறார். காதல் வயப்படுகிறார். அடுத்தடுத்த சந்திப்புகளில் அந்த காதல் இரு மனங்களுக்கானதாக மலர்கிறது.
இந்த நிலையில், அவர்களது காதலைப் பிரிக்கிற வகையில் சிலர் செயல்படுகின்றனர்.
கால முகன் (அர்பித் ரங்கா) என்பவரது ஆட்கள் வாயுலிங்கத்தைப் பறிக்க முயல்கின்றனர். அவர்களோடு சண்டையிடுகிற திண்ணன், கால முகனின் தம்பியைக் கொன்றுவிடுகிறார்.
விஷயம் அறிந்ததும், கால முகன் படையெடுத்து வருகிறார்.
அவர்களை எதிர்க்க வேண்டிய திண்ணனோ, தந்தை நாகனால் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படுகிறார். அதற்குத் திண்ணனின் கடவுள் நம்பிக்கையற்ற தன்மையே காரணமாக இருக்கிறது.
அதன்பிறகு என்னவானது? கால முகன் படை தடுத்து நிறுத்தப்பட்டதா? திண்ணன் எப்போது சிவனை வழிபடத் தொடங்கினார் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிற புராணக் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றில் குறிப்பிட்ட அளவில் புனைவைச் சேர்த்துத் திரைப்படம் ஆக்குவது புதிதல்ல. அறுபதுகளில் அது நிறையவே தமிழ், தெலுங்கு திரையுலகில் நிகழ்ந்திருக்கின்றன.
கண்ணப்பர் கதையோ எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இக்கதையில் வரும் சம்பவங்களைத் திரையில் ரசிக்க வேண்டுமானால், காட்சியாக்கம் சிறப்பானதாக அமைய வேண்டும்.
அது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியது ட்ரெய்லர். இப்படமோ ‘அது சாத்தியமே’ என்று பதிலளித்திருக்கிறது.
உறுத்தாத காட்சியாக்கம்!

‘கைவசம் விஎஃப்எக்ஸ் இருக்குங்க’ என்று இஷ்டத்திற்கு கற்பனைக் குதிரையை ஓட விடுவது, திரைப்பட ஆக்கத்திற்கு நல்லதல்ல. ‘ஆதி புருஷ்’ போன்ற படங்களில் கிடைத்த சூட்டினால், ‘கண்ணப்பா’ படக்குழு அதனை நன்கு புரிந்து நடந்து கொண்டிருக்கிறது.
‘பாகுபலி’ போன்ற பேண்டஸி கதையாக ஆகிவிடாமல், அதேநேரத்தில் பழைய பக்திப் படங்கள், இன்றைய டிவி சீரியல்கள் பாணியில் அமைந்துவிடாமல், தனி இதன் திரைக்கதை வார்க்கப்பட்டிருக்கிறது.
அதனைச் சரியான முறையில் காட்சியாக்கம் செய்திருக்கிறார் முகேஷ் குமார் சிங்.
இப்படத்தின் பெரும்பகுதி நியூசிலாந்திலுள்ள வனப்பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ்.
டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் மிகுந்த திட்டமிட்டலும் கையாளப்பட்டிருக்கிறது. அதனை மனதில் கொண்டே ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சின்னா, இப்படத்தில் வருகிற சில அரங்குகளை நம்பும்படியாக வடிவமைத்திருக்கிறார்.
ஆண்டனியின் படத்தொகுப்பு முன்பாதியில் ‘செறிவுடன்’ இருக்க, பின்பாதியில் கொஞ்சமாய் சொதப்பியிருக்கிறது.
ஆடை வடிவமைப்பு போன்ற விஷயங்கள் இப்போது வருகிற சில சீரியல்களை நினைவூட்டுகின்றன. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் சரியான நீளத்தில், சரியான வகையில் ரசிகர்களை கவருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பாதியில் மட்டும் சில காட்சிகள் இழுவை ரகம்.
ஸ்டீபன் தேவஸ்ஸி இசையில் சில பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசை பல காட்சிகளைக் காப்பாற்றியிருக்கிறது.
ஒளிப்பதிவு உட்படப் பல விஷயங்கள் ‘டெம்ப்ளேட்’டாக அமைந்த நிலையில், சில காட்சிகளை ‘ப்ரெஷ்’ ஆக உணர வைப்பது அவரது பின்னணி இசையே. சில நேரங்களில் அதுவும் கூட ‘டெம்ப்ளேட்’ ஆக அமைந்து கஷ்டத்தை தருகிறது.
கேச்சா கெம்பக்தீயின் சண்டைக்காட்சிகளில் மெனக்கெடல் நிறையவே கொட்டப்பட்டிருக்கிறது.
மற்றபடி, ‘ட்ரெய்லர்’ரில் உணர்ந்தது போன்று முழுக்கதையும் தெரிந்து போன உணர்வு எழவில்லை. நாடக பாணியிலான வசனங்களோ, கேமிரா நகர்வுகளோ இல்லை.
முடிந்தவரை அப்படிப்பட்ட உணர்வுகள் எழுவதை மட்டுப்படுத்தி, நவீன பாணியில் அமைந்த பக்திக் கதை என்றுணர்த்த முயன்றிருக்கிறது.
அதுவே இயக்குனர் முகேஷ் குமார் சிங்கை பாராட்டத் தூண்டுகிறது.
இப்படத்தில் நடித்தவர்களின் பட்டியல் மிகப்பெரியது. நாயகன் விஷ்ணு மஞ்சு, நாயகி ப்ரீத்தி முகுந்தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘காதல் லயத்துடன்’ படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை ‘ஆபாச எல்லை’யைத் தொடவில்லை.
இவர்களோடு மோகன்பாபு, சரத்குமார், மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரமானந்தம், பிரம்மாஜி, ரகு பாபு, தேவராஜ், ஐஸ்வர்யா, சம்பத்ராம், சிவபாலாஜி, அர்பித் ரங்கா என்று பெரும்பட்டாளமே தலைகாட்டியிருக்கிறது.
இது போக மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் இதில் கௌரவமாக வந்து போயிருக்கின்றனர்.
‘இது கண்ணப்பர் கதை அல்ல’ என்று படக்குழு சொன்னால், இப்படத்தை நல்லதொரு ’அரச புனைவாக’ கருத நிறையவே இடமிருக்கிறது. அதனை இப்படம் சரியாகச் செய்திருக்கிறது.
ஆனால், இது கண்ணப்ப நாயனார் கதை என்பதால் தியேட்டருக்கு வரும் சிவ பக்தர்களை விஷ்ணு மஞ்சு – ப்ரீத்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறையவே நெளியச் செய்யும்.
அதேநேரத்தில், இதுவரை திரையில் காணாத கண்ணப்பரின் கதையைச் சில கற்பனைக் காட்சிகள் சேர்த்துக் கண்ட திருப்தியை அளிக்கும்.
‘எது பக்தி’ என்று மோகன்பாபுவிடம் பிரபாஸ் கேள்வி கேட்டு விளக்கம் சொல்கிற காட்சி, இன்று ஆன்மிகத்தின் பெயரால் முன்வைக்கப்படுகிற சில பழக்க வழக்கங்களை, சமூகவலைதளப் பதிவுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. அது சிலருக்கு உவப்பில்லாமல் போகலாம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தெலுங்கு, இந்தியில் வந்த சில கமர்ஷியல் படங்களில் கூடக் கடவுளர்களின் பெயர்கள் அதிகமாக முன்மொழியப்பட்டு, ஆவேசம் கொள்ள வைக்கிற காட்சியாக்கம் புகுத்தப்பட்ட நிலையில், இப்படத்தின் காட்சிமொழி பெரும்பாலும் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.
என்ன, சில சண்டைக்காட்சிகளில் வெளிப்படுகிற வன்முறையை, வசனங்களில் வெளிப்படுகிற ஆபாச சித்தரிப்பைத் தவிர்த்திருக்கலாம்.
அதேநேரத்தில், ‘கண்ணப்பர்’ பற்றி எதுவுமே தெரியாதவரும் கூடக் காண்கிற வகையில், இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக இக்கதையை விவரித்த வகையில் வசீகரிக்கிறது ‘கண்ணப்பா’ திரைப்படம்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்