Take a fresh look at your lifestyle.

எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைத்த வெற்றி!

டிராகன் 100-வது நாள் விழாவில் படக்குழுவினர் நெகிழ்ச்சி

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.  இதில்,  படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ”மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ‘நான் ஹீரோவாகப் போகிறேன்’ என்று பிரதீப் சொன்னார்.

உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் ‘டிராகன்’ படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.

‘லவ் டுடே’ படத்தை விட ‘டிராகன்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.

அதன் பிறகு ‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார்.

நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்” என்றார்.

நூறாவது நாள் வெற்றி விழாவில் ‘டிராகன்’ பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேகக் காணொலி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தையும், அன்பையும் பகிர்ந்து கொண்டார்.