Take a fresh look at your lifestyle.

காளிதாஸ்2 : கொஞ்சம் கொழ கொழ, நிறைய பரபர!

பரத், பவானி ஸ்ரீ, அஜய் கார்த்திக், அபர்ணதி, கௌரவத் தோற்றத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் நடிக்க, அரவிந்த் ஆனந்தோடு சேர்ந்து எழுதி, காளிதாஸ் முதல் பாகத்தின் மூலம் கவனம் பெற்ற, இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கி இருக்கும் படம்.

ஃபைவ் ஸ்டார் மற்றும் ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் செந்தில் மற்றும் யோகேஸ்வரன் தயாரிப்பு.

டிபார்ட்மெண்டில் நன்மதிப்பை பெற்ற போலீஸ் அதிகாரி காளிதாஸ் (பரத்). முக்கியக் கேஸ்களை சிறப்பாக முடிப்பவர்.

சுமார் எண்ணூறு வீடுகள் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டத்தின் போது ஒரு குழந்தை காணாமல் போகிறது. விசாரிக்க வருகிறார் அதிகாரி.

விசாரணை சரியாக நடைபெறுகிறதா என்று கவனிக்க வருகிறார் பெண் உயர் அதிகாரி (பவானி ஸ்ரீ). அவருக்கும் காளிதாசுக்கும் ஒத்துப்போகவில்லை.

குழந்தையை இழந்த தாய் (அபர்ணதி) – தந்தை (அனந்த நாக்) அபார்ட்மெண்ட் செக்ரெட்டரி (பூவே உனக்காக சங்கீதா) மற்றும் பலரிடம் விசாரணை நடக்கிறது.

தேடலில் குழந்தை பிணமாக மீட்கப்படுகிறது.

அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் நபர் ஒருவன் (அஜய் கார்த்திக்) மீது சந்தேகம் வந்து அவனை கைது செய்து விசாரித்தால் புகழ்பெற்ற வக்கீல் ஒருவர் (பிரகாஷ் ராஜ்) அவனை மீட்டு அழைத்துப் போய்விடுகிறார். போலீஸ் மேலிடம் வக்கீல் செய்தது சரி என்கிறது.

இந்த நிலையில் குடியிருப்பில் இன்னொரு அசம்பாவிதமும் நடக்கிறது.

தீவிரமடையும் விசாரணை பல்வேறு திருப்பங்களுக்கு இட்டுச் செல்கிறது.

குற்றவாளி யார்? ஏன் என்பதே காளிதாஸ் 2.

அப்பார்ட்மென்ட் ஒன்றில் ஒரு சிறுமி கொல்லப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிஜ சம்பவத்தை வைத்து அமைக்கப்பபட்டு இருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை.

மிக மிக மிக அட்டகாசமான படமாக்கல் செய்திருக்கிறார் ஸ்ரீ செந்தில். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு அசர அடிக்கிறது. இருவரும் இணைந்து வைத்திருக்கும் கேமரா கோணங்கள் பிரமாதம்.

இந்த இணைப்பை தன் பங்குக்கு பலம் கூட்டி தூக்கி நிறுத்துகிறது சாம்.சி.எஸ் அமைத்திருக்கும் பின்னணி இசை.

ஆரம்பம் முதலே படம் மிக எங்கேஜிங் ஆகப் போவதில் மேற்சொன்னவர்களுக்கு மட்டுமல்ல, எடிட்டர் பூவன் ஸ்ரீனிவாசனுக்கும் பங்கு உண்டு.

போலீஸ் துறை நடைமுறைகள், நிர்வாக முறைகள், அதிகாரிகளுக்கும் இருக்கும் பனிப்போர் இவை பற்றிய விவரணைகள் செம்ம.. செம்ம.

அஜய் கார்த்திக் மிரட்டுகிறார். பரத் வழக்கம் போல. பவானி ஸ்ரீயின் அதிகார தோரணை சிறப்பு. மீண்டும் நடிக்க வந்திருக்கும் சங்கீதா ‘அடடே’ வாங்குகிறார்.

சின்ன கேரக்டர் என்றாலும் அசத்தி விட்டுப்போகிறார் பிரகாஷ் ராஜ். ஆச்சரியமாக, கிஷோர் சோபிக்கவில்லை.

வித்தியாசமாக திரைக்கதையைக் கொண்டு செல்கிறேன் என்ற பெயரில் ஒரு ‘மைனர்’ காதல், ரவுடி, என்று ஒருநிலையில் எங்கெங்கோ சுற்றுகிறது படம்.

கிஷோர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. அங்கே கொஞ்சம் மிக்சிங்கில் கவனித்து இருக்கலாம்.

அபார்ட்மெண்டில் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஏரியாவுக்குள்ளும் கொஞ்சம் போயிருக்கலாம்.

எனினும், லாஜிக் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டும், பனிக்கட்டிக் கத்தியால் அடிவயிற்றில் சொருகுகிற மாதிரியான அந்த கிளைமாக்ஸ் சிறப்பு.

காளிதாஸ் 2 … கொஞ்சம் கொழ கொழ .. ஆனால் நிறைய பரபர.

– சு. செந்தில்குமரன்