Take a fresh look at your lifestyle.

கார்மேனி செல்வம் – பாராட்டுக்குரிய படம்!

சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி நடிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கி இருக்கும் படம்.

பாத் வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பு.

கடற்கரை ஓரம் ஒரு சிறு வாடகை வீட்டில் வசிக்கும் செல்வம் (சமுத்திரக்கனி), பணக்காரர் ஒருவரின் (கவுதம் வாசுதேவ் மேனன்) நம்பிக்கையான காரோட்டி.

செல்வத்தின் மனைவி (லட்சுமி பிரியா சந்திரமவுலி) சாலையோர இட்லிக்கடை நடத்துபவர். ஒரு மகன்.

முதலாளி, செல்வத்தை மிக மரியாதையாகவும் பாசமாகவும் நடத்துகிறார். முதலாளி மனைவி (அபிநயா) அவருக்கும் மேல். அவர்களின் இருவரின் மகளும் அப்படியே.

கடன் வாங்கி தங்கைக்கு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்த செல்வம், இப்போது அவளுக்கு உரிய சீர் சினத்தி கூட செய்ய முடியாமல் போக, முதலாளி சம்பளத்துக்கு மேல் ஒரு ரூபாய் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் குணமுள்ள செல்வத்துக்கு பணப் பிரச்னை எழுகிறது.

வீடு வாங்க வேண்டும் என மனைவியின் ஆசை ஒரு பக்கம்.

முதலாளி ஒரு மாதம் குடும்பத்தோடு வெளியூர் போக, அந்த சமயத்தில் அவரது காரை அவரது அனுமதி இல்லாமலேயே வாடகை வண்டியாக ஓட்டுகிறான்.

வண்டியில் வரும் கஸ்டமர் ஒருவர், ”கடன் வாங்கினால்தான் பணக்காரன் ஆக முடியும்” என்று கூற, அகளக்கால் வைக்கிறான் செல்வம்.

பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு மனைவி பிள்ளைகளை அழைத்துப் போகிறான். வட்டிக்கு கடன் வாங்கி வீட்டுமனை வாங்குகிறான்.

கிரடிட் கார்டில் டி.வி வாங்குகிறான். அதற்காக ஒய்வு ஒழிச்சல் இன்றி உழைக்கிறான். முதலாளிக்கு ஒரு மாபெரும் இழப்பு.

ஒரு நிலையில் செல்வத்தின் பணப்பிரச்சனை நிலைமை கை மீறுகிறது.

குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு போகிறான். அதன் விளைவுகள் என்ன? அவற்றால் செல்வம் கற்றதும் பெற்றதும் உற்றதும் என்ன என்பதே படம்.

சராசரிக்கும் மேலான நேர்மை உள்ள ஓர் எளிய குடும்பத்தை மிக அழகாக எழுதி, சிறப்பான படமாக்கலோடு இயக்கி இருக்கிறார் ராம் சக்ரி.

செல்வமாக, செழிப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் சமுத்திரக்கனி.

உற்சாகமான நேர்மையான சம்பளத்துக்கு மேல் ஒரு பைசா கூட எதிர்பார்க்காத ஒருவன், தன் வாழ்வின் சில சூழல்களில் முறை தவறி நடக்கும்போது வரும் குற்ற உணர்ச்சி, தடுமாற்றம், மனமுடைதல் ஆகியவற்றை சிறப்பாக செய்திருக்கிறார்.

நியாயமான தன் ஆசைகளை வெளிப்படுத்த, அதற்காக கணவன் எல்லைகளை மீறி நடக்கும்போது ஏற்படும் பயத்தை, பரிதவிப்பை, படபடப்பை, கோபத்தை, ஆற்றாமையை, கையறு நிலையை மிக அட்டகாசமாக வெளிப்படுத்தி மிகப் பிரமாதமாக நடித்துள்ளார் லட்சுமி பிரியா.

கச்சிதமான கேரக்டரில் கவுதம் வாசுதேவன். அபிநயா கேரக்டரும் நடிப்பும் அற்புதம்.

கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி ஆகியோர் சின்னச் சின்ன கேரக்டரில் வந்து பேசிவிட்டுப் போகிறார்கள்.

யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவும் ராமானுஜத்தின் இசையும் சிறப்பு.

சொல்ல வந்த விசயத்துக்கும் அப்பாற்பட்டு அதிகமான கேரக்டர்கள், இரண்டாம் பகுதியில் தேவையற்ற நீளம் ஆகியவை இந்தப் படத்தின் குறைபாடுகள்.

அதற்கேற்ற பாதிப்புகள் இருக்கும் என்றாலும், பணம் குறித்த பார்வை, சம்பாதிக்க வெளிநாடு செல்வோர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்நிலை இவற்றை வடித்திருக்கும் விதத்தில் பாராட்டைப் பெறுகிறது கார்மேனி செல்வம்.

– சு. செந்தில்குமரன்