மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரித்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, பல தளங்களில், பல விதங்களில் ‘கலர்ஃபுல்’ புரோமோஷன்கள் நிகழ்ந்தேறி வருகின்றன.
இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான். தன் பங்குக்கு பேட்டிகளை அள்ளி வீசி வருகிறார். அண்மையில் அவரை தொகுப்பாளினி டிடி பேட்டி எடுத்தார்.
அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது நிக்நேமை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
தொகுப்பாளினி டிடி பேட்டி எடுக்கும்போது, ஏ.ஆர் ரஹ்மானை ‘பெரிய பாய்’ என அழைத்தார்.
உடனே ரஹ்மான், ‘பெரிய பாயா?’ என வியப்புடன் கேட்டார். அதற்கு டிடி, ‘அதுதான் சார் உங்களோட நிக்நேம். செல்லப்பெயர் – ரசிகர்கள் எல்லாம் உங்கள அப்படி தான் கூப்பிடுறாங்க’ என்றார்.
உடனே ஏ.ஆர் ரஹ்மான், ‘வேண்டாம், வேண்டாம், எனக்கு இந்த நிக்நேம் பிடிக்கல’ என வெலவெலத்துப் போனார்.
‘நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன், சின்ன பாய், பெரிய பாய் என கூப்பிட?’ என சிரித்துக்கொண்டே கூறினார்.
சிரிப்பு உதட்டில் இருந்தாலும் உள்ளத்தில் அவர் கொந்தளிப்பாகவே இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைதளத்தில் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிடும்போது ‘பெரிய பாய்’ என்றுதான் செல்லமாக கூறுவார்கள்.
இதைத்தான் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார், இசைப்புயல்.
– பாப்பாங்குளம் பாரதி.