தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. 2016-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா.
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. அதோடு, திறமையான நடிகை என்ற அடையாளத்தையும் அவருக்குக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து ‘சலோ’ என்ற தெலுங்கு படத்திலும் வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் தேவராகொண்டவுடன் காதல், நகைச்சுவை கலந்த ‘கீதா கோவிந்தம்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்தப் படத்திலும் பார்வையாளர்களுடைய குறிப்பாக, தமிழ் ரசிகளிர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து கார்த்தியுடன் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. இந்தப் படம் கலவையான விமர்சனம் பெற்றது.
பின்னர் அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ படத்தின் மூலம் இன்னும் தென்னிந்தியா நடிகையாக மாறினார் ராஷ்மிகா. இந்தப் படத்தின் மூலம் நட்சத்திர நடிகையாகவும் வலம் வந்தார்.
இதையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக ‘வாரிசு’ படத்திலும் நடித்திருந்தார். அந்த அளவிற்கு உயரம் அடைந்து வந்தார் ராஷ்மிகா.
தற்போது ‘புஷ்பா 2’, படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. தனுஷுடன் ‘குபேரா’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், திரைப்படத் துறையில் பல நிராகரிப்புகளைச் சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்.
“ஆரம்பக் காலத்தில் நடிகைக்கான முகம் எனக்கு இல்லை என்று நிராகரித்தார்கள். ஆடிஷன் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது கண்ணீருடன் தான் வருவேன். 20, 25 படங்களுக்கான ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயன்றேன். ஒரு படத்துக்கான ஆடிஷனுக்கு பலமுறை சென்றேன். கடைசியாகவே தேர்வு செய்தார்கள்.
3 மாதங்கள் பயிற்சி நடந்தும் படம் நின்றுவிட்டது. பிறகு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் நடித்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது, இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்றும் தோன்றும்” என தெரிவித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.