Take a fresh look at your lifestyle.

இளையராஜா தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு!

-நெகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்

தேசிய தலைவர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ் பெற்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் சினிமாவாக வந்துவிட்டன.

சினிமா பிரபலங்கள் சாவித்ரி, ‘சில்க்’  ஸ்மிதா ஆகியோரின் ‘பயோபிக்’ கையும் வெள்ளித்திரையில் பார்த்து விட்டோம்.

அந்த வரிசையில் ‘இசைஞானி’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிக்கிறார், தனுஷ்.

‘இளையராஜா’ என்றே தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

தனது ‘பயோபிக்’ படத்துக்கு இளையராஜாவே, இசை அமைக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், இளையராஜா, தனக்குள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உணர்ச்சிபூர்வமாக விவரித்தார்.

‘நான் இளையராஜாவின் பக்தன். அவரின் இசைதான் எனக்குத் துணை.

அவரது இசை எனக்கு நடிப்பு ஆசானும் கூட. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத காலத்திலிருந்து இன்று வரை, ஒரு காட்சியைப் படமாக்குவதற்கு முன்பு அந்தக் காட்சிக்கு தகுந்த மனநிலையில் இருக்கும் இளையராஜாவின் பாடலையோ, பிஜிஎம்-மையோ கேட்பேன்.

அந்த இசை, அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லும். அதனை அப்படியே உள்வாங்கி நடிப்பேன்’ என்று தனுஷ் சொன்னபோது அரங்கில் நிசப்தம்.

தொடர்ந்து பேசிய தனுஷ், நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லையென்றால், இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டே தூங்குவோம்.

ஆனால், நான் பல இரவுகள் இளையராஜாவாகவே நடித்தால் எப்படியிருக்கும் என நினைத்து, தூக்கமில்லாமல் இருந்திருக்கிறேன்.

இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா மற்றொன்று ரஜினிகாந்த்.

இந்த இடத்துக்கு வர முடிந்து, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்பது எனக்கு மிகப் பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது.

ஒரு கலைஞனாக இந்த வாய்ப்பை எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.

இந்த அழைப்பு இளையராஜாவிடமிருந்தே வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. இசையின் கடவுளாக நடிக்கும் வாய்ப்பை நினைத்து நெகிழ்கிறேன்” என்றார் தனுஷ்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், என் அப்பா இடத்தில் வைத்து இளையராஜாவை பார்க்கிறேன்.

நான் இன்று பிறக்காமல் 100 வருடங்கள் கழித்து பிறந்திருந்தாலும், அவர் வாழும் காலத்தில் தான் வாழ்ந்திருப்பேன்.

அவர் என்பது இசை. அது எப்போதும் இருக்கும்’ என்று, புகழாரம் சூட்டினார்.

இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், சுஹாசினி உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

– பாப்பாங்குளம் பாரதி.