மாடல் அழகியான கங்கனா ரனாவத், 2006 ஆம் ஆண்டு “கேங்ஸ்டர்” எனும் இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.
2008 ஆம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.
சில வெற்றிப் படங்களை கொடுத்தாலும், கங்கனா நடித்த 10 படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளன.
ஐ லவ் நியூயார்க், கட்டி பட்டி, ரங்கூன், சிம்ரன், ஜட்ஜ்மெண்டல் ஹே கியா, பங்கா, தலைவி, தாக்கட், சந்திரமுகி – 2 ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில் கங்கனா மிகவும் எதிர்பார்த்த படம் ‘தேஜஸ்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை சர்வேஸ் மேவாரா டைரக்டு செய்திருந்தார். விமானப்படை அதிகாரியாக கங்கனா நடித்திருந்தார்.
படத்தின் பட்ஜெட் 60 கோடி ரூபாய். முதல் நாளிலேயே படத்துக்கு கூட்டம் வரவில்லை. இந்தப் படத்தின் ஒரு வார வசூல் ஐந்தரை கோடி ரூபாய் மட்டுமே.
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள கங்கனா இப்போது கோயில் கோயிலாகச் சுற்றி வருகிறார். அண்மையில். குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
அப்போது அவரை சந்தித்த செய்தியாளர்கள், மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டுயிடப் போவதாக கூறப்படுகிறதே? என கேள்வி கேட்டனர்.
“கிருஷ்ணர் அருள் புரிந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று அவர் பதில் அளித்தார்.
அயோத்தி ராமர் கோயில் குறித்தும் அவரிடம் வினா எழுப்பினர். “பாஜக அரசின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மகத்தான நாளை காணப் போகிறோம்.
கொண்டாட்டங்களுடன் கோயில் திறப்பு விழா நடைபெறும். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சினிமா இனி கை கொடுக்காது என்பதால், அரசியலுக்கு வர ஆயத்தமாகி விட்டார் கங்கனா ரனாவத்.
-பாப்பாங்குளம் பாரதி.