Take a fresh look at your lifestyle.

எப்படி வந்தது கை கட்டும் பழக்கம்?

ஏ.வி.எம். சரவணன் சொன்ன விளக்கம்

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று நடிகர்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினியைச் சொல்வது போல, தயாரிப்பாளர்களில் ஏவி.மெய்யப்பச் செட்டியார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி ஆகியோரைச் சொல்லலாம்.

அவர்களில் ஒருவரான ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் மகன் ஏ.வி.எம். சரவணன்.

முழுப்பெயர் சரவணன் சூரிய மணி.

எல்லோரும் படித்து முடித்ததும் வேலை தேடிய காலத்தில், சரவணன் படித்து முடிப்பதற்கு முன்பே வேலை தயாராக இருந்தது.

1958 ஆம் ஆண்டு தனது பத்தொன்பதாவது வயதில் ஏ.வி.எம். நிர்வாகத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சரவணன்.

1945 ஆம் ஆண்டு அவரது தந்தையர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் துவங்கப்பட்டது ஏ.வி.எம். நிறுவனம். மெய்யப்பச் செட்டியார் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்.

ஆனால், ரசனை மாற்றம், கால மாற்றம், மெய்யப்பச் செட்டியாரின் முதுமை என்று ஏ.வி.எம். சரித்திரம் முடிந்தது என்று எல்லோரும் எண்ணியபோது, ஆகாயத்தைத் தூக்கிச் சுமந்த அட்லஸ் மாதிரி ஏ.வி.எம்.மைத் தூக்கி நிறுத்தியவர்கள்தான் ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம். சரவணன், ஏ.வி.எம். பாலா சுப்பிரமணியன்.

இவர்களில் முக்கிய நபராக இறுதி ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் தயாரிப்பு வாரிசாக எழுந்தவர் ஏ.வி.எம். சரவணன்.

மெய்யப்பச் செட்டியார் மறைந்தது 1979. ஆனால் 1963 ஆம் ஆண்டிலேயே அப்பாவுக்கு ஒய்வு கொடுத்த சரவணன் தன் சகோதரர்களோடு சேர்ந்து பொறுப்பெடுத்துத் தயாரித்த ‘நானும் ஒரு பெண்’ படம் மாபெரும் வெற்றி.

அதுவரை தமிழ் சினிமாவில் வராத கதை. ஸ்ரீ சைலேஷ் டே (Sri Shailash Dey) என்பவர் எழுதிய ‘போது’ (Bodhu) என்ற பெங்காலி நாடகத்தின் உரிமை வாங்கி தரக்கூட்டல் செய்து படமாக எடுத்தார்.

நாடகம் நடத்தியவர்கள் படத்தைப் பார்த்து வியந்தார்கள்.

13 வது தேசியத் திரைப்பட விருது விழாவில் தமிழ்ப் படத்துக்கான விருது மற்றும் ஃபிலிம் பேர் விருதையும் வென்றது சரவணன் பொறுப்பெடுத்த தயாரித்த முதல் படம்.

அதன் பிறகு ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் வரை இந்தியாவின் பல மொழிகளில் சுமார் 170 படங்கள் சரவணன் பொறுப்பில் உருவானவை.

கதை, தொழில் நுட்பம், வெகுஜன ரசனை பற்றிய புரிதல், நேர்த்தி இவற்றால் ஏ.வி.எம். நிறுவனத்தை இமயமாக்கிய திறமையாளர்.

கமல், ரஜினி இருவரையும் இந்த உயரத்துக்குக் கொண்டு போனதில் ஏ.வி.எம்.-மின் பங்கு மகத்தானது. ஏ.வி.எம். இல்லை எனில் ரஜினிக்கு இந்த உயரம் சாத்தியமில்லை என்றால் அது மிகையாகாது.

‘சகலகலா வல்லவன்’ படம் எடுத்து முடித்தாயிற்று. எல்லோருக்கும் பரம திருப்தி. ஆனால், சரவணனுக்கு திருப்தி இல்லை.

இதில் என்ன இருக்கு? எப்படி ஓடும் என்று அவர் படத்தை அவரே யோசிக்கிறார். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் ஏற்கவில்லை.

ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணி, அப்போது பிரபலமான மேற்கத்திய நடனம், நவீன இசை, வித்தியாசமான – அன்றைய அளவில் பிரம்மாண்டமான செட் எல்லாம் போட்டு கமலை ஆட விட்டு, “இளமை இதோ இதோ” பாடல் வரக் காரணம் ஏ.வி.எம். சரவணன்தான்.

கமலுக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த படம் அது.

ரஜினி இன்று நூறு கோடி சம்பளம் வாங்கலாம். ஆனால், தனக்கு தரப்பட்ட சம்பளத்தைப் பார்த்து ரஜினியே அசந்து நின்ற படம் ‘மிஸ்டர் பாரத்’. முப்பது லட்சம். ரஜினி அதுவரை வாங்கிய சம்பளத்தைவிட பத்து மடங்கு கொடுத்தவர் சரவணன்.

இப்படித் தமிழ் சினிமாவின் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் நெருங்கிப் பழகியவர்.

எளிமையின் உறைவிடம். அன்பு கலந்த பேச்சு. பகட்டில்லாத இயல்பான வெள்ளை சட்டை, பேண்ட் என்று காணக் கிடைத்தவர். யாரையும் எழுந்து நின்றுதான் வரவேற்பார்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தைத் தயாரித்தபோது, சரவணனுக்கு அந்தப் படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்லை. அதை, விசுவிடமே சொன்னார்.

ஆனால், அந்தப் படம் பிரமாதமாக ஓடிச் ‘சிறந்த பொழுது போக்கு’ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.

விருது வாங்க, விசுவின் குடும்பத்தினர் அனைவரையும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கட் போட்டு அழைத்துப் போனார். ஆனால், சரவணன் பயணித்தது எக்கனாமிக் க்ளாஸ்!

அதிர்ந்து போன விசுவின் குடும்பத்திடம், “நான் இந்தப் படம் ஓடாது என்று நினைத்தேன். லாபம் சம்பாதித்துக் கொடுத்ததோடு இதோ விருதும் வாங்கித் தந்து விட்டார் விசு.

நான் சாதாரண டிக்கெட்டில் பயணித்து அவரையும் அவர் குடும்பத்தையும் உயர் வகுப்பு டிக்கெட்டில் அழைத்துப் போய், அவரை நான் இப்படித்தானே கவுரவப்படுத்த முடியும்” என்று சொன்னார் ஏ.வி.எம். சரவணன். நெகிழ்ந்து கலங்கியது விடுவின் குடும்பம்.

ஒரு நிகழ்ச்சியில், சிவாஜி, கமல்ஹாசன் இருவரும் ஏ.வி.எம். தயாரிப்புகள் என்று ஒருவர் ஏ.வி.எம்.மின் பெருமையைப் பேச,

பதிலுக்கு சரவணனே எழுந்து, “கமல் எங்க தயாரிப்பு என்பதை நான் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால், சிவாஜி அப்படி அல்ல. பெருமாள் முதலியார் அய்யா இல்லாவிட்டால் சிவாஜி சார் இல்லை… எனவே சிவாஜி சார் விஷயத்தில் பெருமாள் முதலியாருக்குதான் முதல் உரிமை. அவருக்கு பிறகுதான் எங்களுக்கு” என்று சொன்ன பெருந்தன்மையாளர் சரவணன்.

ரஜினி சொன்னது போல ரியல் ஜென்டில் மேன்.

தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வர ஆரம்பித்த காலத்தில் நிறைய மசாலா படங்களை எடுத்து, தமிழ் சினிமாவின் போக்கை தவறான திசையில் கொண்டுபோனது ஏ.வி.எம். நிறுவனம்தானே என்று அவரிடம் கேட்கப்பட்ட போது,

கொஞ்சம் கூட கோபப்படாமல், “அதில் உண்மை இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். சினிமா ஸ்டுடியோவுக்கு வெளியே போனபோது ஸ்டுடியோக்களில் படம் எடுக்க யாரும் வரவில்லை.

எனவே எங்கள் ஸ்டுடியோக்கள் மூலம் வருமானம் வர, பிரம்மாண்டமான செட்கள் போட்டு, படங்களை எங்கள் தரப்பில் எடுக்க ஆரம்பித்தோம். அவை வெற்றி பெற்றதால் எல்லோரும் இந்தப் பக்கம் வந்து விட்டனர்.

அதே நேரம் அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் தரமான படங்கள் எடுத்ததும் எங்கள் ஏ.வி.எம். தான். இப்போது மசாலா படம் எடுத்தாலும் தமிழ் சினிமாவின் வினியோக, வியாபாரத்தை இப்போதும் பெருக்கிக் கொடுக்கிறோம்” என்றார்.

ஒருமுறை கேட்டேன். “எப்படி வந்தது கைகட்டும் பழக்கம்?”

“நம்மளப் பாக்க நம்மளவிட பெரிய ஆளுங்களும் வருவாங்க. சின்ன ஆளுங்களும் வருவாங்க.
பெரிய ஆட்கள் முன்னாடி மரியாதைக் குறைவாகத் தெரியக்கூடாது. சின்னவங்களுக்கு மமதையா தெரியக்கூடாது. மத்தபடி கைகட்டித்தான் ஆகணும்னு இல்ல” என்றார்.

“நீங்க எழுதின உங்க வாழ்க்கை நூலைவிட, உங்கள் தந்தையார் எழுதின அவர் வாழ்க்கை பற்றிய நூலை, அவர் எழுதின விதம் இன்னிக்கும் நவீனமா ஸ்டைலா இருக்கு சார்” என்றேன்.

“உண்மைய சொல்றீங்க சார். சந்தோஷம். அப்புச்சி மாதிரி எங்களால முடியாது சார். எல்லா விஷயத்திலும் அவர் பேரைக் கெடுக்காம இருந்தாலே அது எங்களுக்கு வெற்றிதான்.” என்றார்.

“உங்கள் தந்தையார் தயாரிப்பாளர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநர் கூட. நீங்க தயாரிப்பாளரா மட்டும் நின்னுட்டீங்க. ஏன் டைரக்ட் பண்ணல?”

“அது ரொம்ப கஷ்டம்.”

இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், சர்வதேசத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் பண்பின் சிகரம் விருது மற்றும் சென்னை நகரின் ஷெரிப் பதவிகளை வகித்தவர்.

ஏ.வி.எம். சரவணன் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் காலை இறந்திருக்கிறார். அந்த வகையில் அவர் 86ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்திருக்கிறார்.

சரவணன் கடைசியாக தயாரித்த படம் ‘இதுவும் கடந்து போகும்’. ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சரவணனின் மரணம் அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியாதது.

– சு. செந்தில் குமரன்