சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வடிவேலு, பஹத் ஃபாசில் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘மாரீசன்’. ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது.
‘மாரீசன்’ படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தைப் பாராட்டித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “மாரீசன் திரைப்படம் பார்த்தேன். முதல் பாதி, கதையின் பின்னணியை மிகவும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் விவரித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது.
இரண்டாம் பாதியில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தன. கதைக்களத்தின் வலிமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நடிகர் வடிவேலுவின் நடிப்பு, ஆழத்தையும் வலிமையையும் தருகிறது. அவர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்துபோகும் காட்சியில், ‘ஆஹா… என்ன ஒரு சிறப்பான நடிப்பு!’ என்று நான் வியந்துபோனேன்.
அதேபோல், நடிகர் ஃபகத் ஃபாஸில் தன் கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்து அருமையாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று ஷங்கர் குறிப்பிட்டிருந்தார்.
ஷங்கர் தயாரித்து வந்த ‘இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷுட்டிங்கில் ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் புகார் செய்தார்.
இதனால் வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
பெரும் தொகையை ஷங்கருக்கு நஷ்ட ஈடாக அளித்த பின்னரே வடிவேலுவுக்கு தடை நீக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிறகு ஷங்கரை, வடிவேலு தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.