சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என மாறுபட்ட கதைக் களங்களைத் தேடிப்பிடித்துக் கதை சொன்னவர் இயக்குநர் பாலா, இந்தப் படங்களுக்காக ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியவர்.
இவர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர். அவரை அப்பா என்றே அழைப்பவர். அந்த அப்பாவுக்கு தனது முதல் படமான சேதுவை போட்டுக்காட்டினார் பாலா.
அதற்கு பாலாவின் குரு பாலு மகேந்திரா, காட்டிய ரியாக்சன் என்ன தெரியுமா?.
இயக்குநர் பாலாவே சொல்கிறார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் இது:
“சேது திரைப்படம் பார்த்துவிட்டு எல்லோர் முன்னிலையிலும் இயக்குநர் பாலு மகேந்திரா என்னைப் பாராட்டினார்.
அதன் பின்னர், அவருடைய அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு கூறினார். நானும் அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.
அப்போது, “ஏன்டா பாலா உனக்கு இவ்வளவு குரூர புத்தி? அப்பாவி பெண் படிப்பதற்காக கல்லூரிக்குச் செல்கிறாள். அதே கல்லூரியில் பயிலும் ஒரு ரௌடி, அப்பெண்ணை மிரட்டி காதலிக்க வைக்கிறான்.
பின்னர், ஒரு விபத்தில் அவனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
இதனால், படத்தில் வரும் கதாநாயகி, அப்பெண்ணின் முறைப்பையன் மற்றும் கதாநாயகன் என எல்லோரது வாழ்க்கையும் முற்றிலும் அழிந்துப் போவதைப் போன்று படம் எடுத்திருக்கிறாய்.
உன்னால் எப்படி இவ்வளவு குரூரமாக சிந்திக்க முடிகிறது?
ஏறத்தாழ நீ உருவாக்கிய ஹீரோயின் என்பவள் உன்னுடைய மகள் போன்றவள். நீ பெற்றெடுத்த பெண்ணை நீயே கழுத்தை நெறித்துக் கொன்று விடுவாயா? என்று பாலு மகேந்திரா எனக்கு டோஸ் விட்டார்” என இயக்குநர் பாலா ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
_ பாப்பாங்குளம் பாரதி.