Take a fresh look at your lifestyle.

தமிழ்ப் புத்தாண்டு ரிலீசிலிருந்து ‘இட்லி கடை’ ஒதுங்கியது ஏன்?

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும், தனுஷ், இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும், ‘இட்லி கடை’ படமும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தன.

ஆனால் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.

அஜித் படத்துக்குப் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளதால், அதனுடன் மோத ‘இட்லி கடை’ தயாரிப்பாளர் விரும்பவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஜுன் மாதத்துக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

ஆனால், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனோ, இதனை மறுக்கிறார். ‘படத்தின் 10 சதவீத படப்பிடிப்பு இன்னும் பாக்கி உள்ளது – ஒரு பாடலை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்துள்ளோம். எனவேதான் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியிட முடியவில்லை’ என்பது அவரது விளக்கம்.

இன்னொரு தகவலும் உண்டு. அஜித் படத்துடன் மோத தனுஷ் விரும்பாததால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் சொல்லப்படுகிறது.

காரணம். அஜித் நடிப்பில், ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தனுஷ். அண்மையில், அஜித்திடம் தொலைபேசி மூலம் பேசி, படத்தின் கதையை தனுஷ் சொல்லியுள்ளார். தொடர்ந்து, அஜித்தை நேரில் சந்தித்து முழுக்கதையைக் கூற இருக்கிறார் தனுஷ்.

தற்போது கார் ரேஸில் ஈடுபட்டுள்ள அஜித், வெளிநாடுகளில் பிஸியாக இருக்கிறார். அஜித் சென்னை திரும்பியதும், தனுஷ் கதை சொல்வார் எனத் தெரிகிறது.

அஜித்தை இயக்குவதற்கும், அவரிடம் கதை சொல்வதற்கும் ‘இட்லி கடை’ தடையாக இருந்து விடக்கூடாது என்பதால், அஜித் படம் ரிலீஸ் ஆகும் நாளில் தனது படம் ரிலீஸ் ஆவதை ஒத்தி வைத்துவிட்டாராம் தனுஷ்.

– பாப்பாங்குளம் பாரதி.