‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘கூலி’. இரு வசூல் மன்னர்களும் இணைந்த முதல் படம் இது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதன் முறையாக வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட அனைத்து மொழி நடிகர்களும் நடித்துள்ள ‘பான் இந்தியா’ திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்க, அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்திருந்தனர்.
‘கூலி’ திரைப்படம், வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீசானது. முதல் நாளில், படம் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்றது.
எனினும் ‘கூலி’ சினிமா, முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பழைய சாதனைகளை இந்தப் படம் முறியடித்து, புதிய சாதனை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளில், உலகளவில் ரூ151 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
இந்த வசூல், தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு படம் முதல் நாளில் ஈட்டிய அதிகபட்ச உலகளாவிய மொத்த வசூலாகக் கருதப்படுகிறது. இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் ஒரு ‘சாதனையாளர்’ என்றும் புகழ்ந்து தள்ளியது.

தமிழ்ப் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்து. அதுவே தமிழ்ப் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற புகழை பெற்றிருந்தது. அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது ரஜினியின் ‘கூலி’.
வெளிநாடுகளிலும் ‘கூலி’ திரைப்படம், வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரண்டு படங்களுமே லோகேஷ் கனகராஜ் கை வண்ணத்தில் உருவானவை.
வரும் வார இறுதி நாட்களில் ‘கூலி’ பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற ஒரு படம், வசூலில் சாதனைப் படைத்திருப்பது கோடம்பாக்கத்தில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.