Take a fresh look at your lifestyle.

சிட்டுக்குறிஞ்சி: சுவாரஸ்யம் கொஞ்சம், ஏமாற்றம் கொஞ்சம்!

ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே.பப்பு, ஜி.எம்.குமார் நடிப்பில் வி.ஜே.மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கி இருக்கும் படம்.

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜூட் ஆனந்த் தயாரிப்பு.

வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் செல்லும் அதிகாலை முதல் பேருந்தில், தனி பயணியாக பயணித்து கொடைக்கானல் வரும் ஒரு மலையாள நபர் (ரஜித் மேனன்) காட்டிலாகா அதிகாரியை பணி நிமித்தமாக சந்திக்கிறான்.

அவனுக்கான அறையை உடனே ஒதுக்க முடியாத அதிகாரி, ஊர் ஓரமாக உள்ள ஒரு வீட்டில் வாழும் ஒரு தம்பதி வீட்டில் அவனை தங்க வைக்கிறார்.

கணவனுக்காக காத்திருக்கும் அந்த மனைவி (நக்ஷா சரண்) இவன் மேல் பிரியம் கொண்டு உணவு சமைத்துப் போட்டு, உடைகள் துவைத்து போட்டு, நெருங்குகிறார்.

எதிர்பாராத ஒரு நாளில். அந்த வீட்டை காணவில்லை.

தவிர, அவன் அந்த வீட்டில் பார்த்த அந்தப் பெண் (நக்ஷா சரண்) இன்னொருவன் மனைவியாக இருக்கிறார்.

அவன் சந்தித்த காட்டிலாகா அதிகாரி, பால்காரன் எல்லோரும் சற்றேறக்குறைய வேறு பெயரோடு அல்லது வேறு தோற்றத்தோடு அல்லது வேற்று குரலோடு இருக்கிறார்கள்.

யாருக்குமே இவனைத் தெரியவில்லை என்கிறார்கள். பெண்ணிடம் வம்பிழுப்பதாக கிராமமே கோபப்பட, போலீஸ் வந்து விடுகிறது.

நண்பனான இன்னொரு மலையாளி (வி.ஜே.பப்பு) வந்து சமாளித்து காப்பாற்றுகிறான்.

அதே நேரம் முன்பு வந்த கீரைக்காரப் பெண் மட்டும் இவனை அடையாளம் கண்டு பேசுகிறார்.

நண்பர்களுக்குப் பொறி தட்ட, அவர்கள் காட்டுக்குள் தேடினால்… இவன் ஆரம்பத்தில் தங்கிய வீட்டைப் போல ஒரு பழைய வீடு இடிபாடுகளுடன் இருக்கிறது. அதுபோல அல்ல அதே வீடு! அதே வாசல், அதே அறை, அப்படியே.. அப்படியே..!

அந்தப்பெண் தங்களது கல்யாண போட்டோ உள்ள பெட்டி என்று முன்பொருமுறை காட்டிய பெட்டி நினைவுக்கு வர, அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தால் அங்கே உள்ள அந்த போட்டோவில் கணவனாக இருப்பது இந்த மலையாள மேனனே. ஆனால், மனைவியாக இருப்பது வேறொரு பெண் (தீப்ஷிகா).

அது பற்றி ஊரில் வயதான நபர் ஒருவரிடம் (ராமச்சந்திரன்) விசாரிக்க, அவன் மேனனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

மேனன் முதலில் தங்கிய அந்த வீட்டில் முன்பு இருந்த தம்பதி அண்ணாமலை (இதே ரஜித் மேனன்) மற்றும் போட்டோவில் இருந்த அவனது மனைவி (தீப்ஷிகா).

காதல் ஜோடியாக அந்த ஊருக்கு வந்த அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மேற்படி வீட்டில் வாழ வழி செய்கிறார் ஊர்ப் பெரியவர் (ஜி.எம்.குமார்).

ஆரம்பத்தில் பார்த்த அதே பெயரோடு வன அதிகாரி, பால்காரர் எல்லாம் இங்கே வருகிறார்கள். கீரைக்காரப் பெண்ணாக வருவது மட்டும் வேறொருவர் (சுஜாதா சிவகுமார்).

இதற்கிடையே நெல்லூரில் ஒரு பெண் பஸ் ஏறுகிறார். (இதுவும் தீப்ஷிகாவே). ஓடி வந்து அவர் பஸ்ஸில் ஏற, அவர் கீழே விழாமல் காப்பாற்றுகிறான் ஓர் இளைஞன் (ஸ்ரீராம் கார்த்திக்).

தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் அவன், தான் ஒரு நாவல் எழுதுவதாகவும், கிளைமாக்ஸ் மட்டும் எழுதவே முடியவில்லை என்று சொல்கிறான்.

கதை என்ன என்று நெல்லூர்க்காரி கேட்க, அவன் சொல்லும் கதையில் இதுவரை படத்தில் பார்த்த சம்பவங்கள் எல்லாம் வருகின்றன.

புத்தகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு எழுத்தாளர் மறைந்து விடுகிறார். பஸ்ஸில் உள்ள அனைவரும் அந்தப் பெண்ணிடம், “உன்கூட யாரும் வரவில்லை. நீ தனியாக பஸ் ஏறி தனியாக பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு வந்தாய் என்கிறார்கள்.

புத்தகம் தொடர, அங்கே கொடைக்கானலில் பெரியவர் ஆதரவில் தனி வீட்டில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காதல் ஜோடி கொடூரமாக கொலை செய்யப்பட்டது காட்டப்படுகிறது.

பத்திரிகை செய்திகள் மூலம் அது ஆணவக் கொலை என்பதை நெல்லூர்ப் பெண் அறிகிறாள்.

அப்படி கொல்லப்பட்ட தமிழ்த் தம்பதியில் அந்த கணவரின் மறுபிறப்பான மலையாள மேனன் அங்கே காத்திருக்க, மனைவியின் மறுபிறப்பான நெல்லூர்ப் பெண் என்ன செய்தாள்? கதையின் கிளைமாக்ஸ் ஆக அவள் எழுத நினைத்தது என்ன என்பதே இந்தப் படம்.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். சிட்டு என்பது சிறு பறவை ரகம். சிட்டுகள் நிறைந்த மலை நில ஊர் என்பதே சிட்டுக் குறிஞ்சி.

பரீட்சார்த்தமான கதை.

மலையாள இளைஞன் வரும்போது விடிகாலை முதல் பஸ்ஸில் ஒலிக்கும் ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்” என்ற முருகன் பாடல், அப்புறம் காதல் ஜோடி வரும்போதும், அப்புறம் நெல்லூர்ப் பெண் வரும்போதும் ஒலிப்பது அழகு.

கீரைக்காரிக்கான நடிகைகளை மாற்றுவது, முதல் கீரைக்காரியிடம் இருந்து நாயகன் லீட் எடுப்பது, கட்டிய வீட்டின் அறைகளுக்குள் மலையாள மேனன் நடப்பதையும் அதே வீடு பாழடைந்த நிலையில் அங்கே மலையாள மேனன் நடப்பதையும் மாறி மாறி காட்டும் காட்சி இவை எல்லாம் ரசனை. அருமை.

பிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் குறிஞ்சியின் அழகு ஜொலிக்கிறது. மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு பெரிதாக குழப்பமின்றி திரைக்கதையைப் பின்பற்ற உதவுகிறது.

இளையராஜாவின் முந்தைய சிம்பனி நிகழ்த்தப்பட்ட Budapest Philharmonic Orchestra எல்லாம் இருந்தும், மாறாவின் இசை ஜோரா எல்லாம் இல்லை.

ரஜித் மேனன், தீப்ஷிகா, வி.ஜே.பப்பு, ஜி.எம்.குமார் எல்லாரும் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க, நக்ஷா சரண் கவனிக்க வைக்கிறார்.

எனினும் பிளாஷ்பேக் கதையில் கீரைக்காரப் பெண்ணாக வரும் சுஜாதா சிவகுமார் ஒரு சில காட்சிகளே எனினும் நடை உடை பாவனையில் அசத்துகிறார்.

சூழல்கள், கேரக்டர்கள், நடிகர்கள் எல்லாவற்றையும் இஷடத்துக்கு கலைத்துப் போட்டு, பிங்கி பிங்கி பாங்கி ஆடுகிறார்கள். தப்பில்லை. அது ஒரு தில்லுதான்.

அதேநேரம் கலைத்துப் போட்டதை அசத்தலாக அடுக்கினால்தான் கலைத்துப் போட்டதற்கு மரியாதை. ஆனால், கலைத்துப் போட்டதில் இருந்த ஆர்வம் சுவையாக அடுக்குவதில் இல்லை.

அதோடு, அதில் ஒரு சிறப்பான கதையும் அமைய வேண்டும். இந்த இரண்டும் மிஸ் ஆகிறது.

இவை இப்படி இருக்க, இன்னொரு பக்கம் ஓடி வரும் ஜோடி, நோய் வாய்ப்படும் பெரியவர், நர்ஸ் வேலை பார்க்கும் பெண், ஊர் ஒதுக்குப்புறமாக வம்படியாக வசிக்கும் வீடு என்று டெம்ப்லேட் விஷயங்களும் இருப்பது மைனஸ்.

ஏன் இப்படி? எப்படி இப்படி? என்ற ஒற்றை சுவாரஸ்யம் தவிர படத்தில் ரசிகர்களைக் கவரும் விஷயங்களும் இல்லை.

மொத்தத்தில் சிட்டுக் குறிஞ்சி… மொட்டைக் குறிஞ்சி.

— சு.செந்தில்குமரன்