இயக்குநர் சேரனின் காவியப் படமான ‘ஆட்டோகிராஃப்’ இருபத்தி ஒரு ஆண்டுகளுக்குப் பின் இப்போது மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆட்டோகிராஃபுக்கும் பழைய ஆட்டோகிராஃபுக்கும் என்ன வித்தியாசம்?
இன்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்று பார்ப்போம்.
போராடி, முன்னேறித் திருமணம் செய்துகொள்ளும் செந்தில் குமார் (சேரன்), தன் திருமணத்துக்கு பள்ளியில் படித்த நண்பர்கள், ஆசிரியர்கள்,
பள்ளியிலும் கல்லூரியிலும் காதலித்த – பின்னால் அவனுக்குத் தோல்வியில் முடிந்த காதல்களின் நாயகிகள் ஆகியோரை தன் திருமணத்துக்கு அழைக்கப் போகிறான்.
இந்த புதிய சந்திப்புகள் எப்படி இருந்தன என்பதே ‘ஆட்டோகிராஃப்’.
தானே தயாரிக்க முடிவு செய்த சேரன் – பிரபுதேவா, விக்ரம், விஜய், அரவிந்த்சாமி என்று பல பேரை ஹீரோவாக நடிக்க அணுகியும் கதை பிடித்திருந்தும் வெவ்வேறு காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போக, தானே நாயகனாகவும் நடித்தார் சேரன்.
ரவி வர்மன், விஜய் மில்டன், துவாரகநாத், பாலு மகேந்திராவின் மகன் ஷங்கி மகேந்திரா என்று ஆளுக்கொரு காதலை, நட்பை ஒளிப்பதிவு செய்தார்கள்.
“இது ஓரளவுக்கு என்னுடைய வாழக்கை வரலாறு என்றே சொல்லலாம்” என்றார் சேரன்.
இப்போது ரிலீஸ் ஆகியிருக்கும் ‘ஆட்டோகிராஃப்’ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
படத்தில் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. கேரளா சம்மந்தப்பட்ட சில காட்சிகளும் காதல் தோல்வியின் சேரன் அழும் சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. பின்னணி இசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அறியாத பள்ளிக் காதல் பிரியும்போது அதே மூச்சு முட்டல் இப்போதும் நடக்கிறது.
கல்யாணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு அம்மா ஆன பிறகு முன்னாள் காதலன் வந்திருப்பது தெரிந்த உடன் கமலா கேமரா முன்னால் நின்று முகம் திருத்திக் கொள்ளும் யதார்த்தம்,
தனது முதல் காதலி பிரியும்போது சொல்லி அழுதது போலவே, பத்தாவதற்கு மேல் படிக்க முடியாமல் மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாகி அடுப்படியில் முடங்கிய சோகத்தைப் பார்க்கும்போது செந்தில் குமாருக்கு ஏற்படும் வேதனை என இன்னும் அப்படியே மெருகு குலையாமல் இருக்கிறது பல காட்சிகள்.
கல்லூரிக் காதல் எப்படி முடியும் என்பதற்கான குறியீட்டை ஆரம்பத்தில் கோபிகாவை கண்ணனுக்கு ஏங்கும் மீரா போலக் காட்டும் டைரக்ஷன் உத்தி சிறப்பு.
கல்லூரிக் காதலில் தோற்ற சமயத்தில் வரும் பாடலில், பெற்ற அம்மா அப்பாவுக்காக என்னை விட்டு விட்டாயே உன்னால் எப்படி முடிந்தது. என்னால் முடியவில்லை என்ற ரீதியில் வரும் வரிகள் பொருத்தம்.
ஆனால், அவள் குற்றவாளி இல்லை என்று தெரிந்த பின் மீண்டும் சேரன் அழும் சோகக் காட்சியிலும் மீண்டும் அதே வரிகள் பின்னணியில் ஒலிக்கிறது. இப்போதாவது அதை சரி செய்திருக்கலாமே சேரன்?
படம் வந்தபோது சேரன் அழும் பல காட்சிகளில் அவர் நடிப்பு ஓவராக இருக்கிறது. ரொம்ப நாடகத்தனமாக இருக்கிறது என்ற விமர்சனம் வந்தது.
தியேட்டரில் சில இடங்களில் சிரிப்பொலி கேட்டதும் உண்டு. ஆனால் இப்போது பல ஹீரோக்கள் அழுவது ரொம்பக் கொடுமையாக இருப்பதால் சேரனின் அழுகை ‘அட நல்லா இருக்கே’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மலையாளப் படங்களில் தமிழன் என்றாலே திருடன் அயோக்கியன், அல்பம், குடிகாரன், மோசமானவன், கஞ்சா கடத்துபவன் என்று சம்மந்தமே இல்லாமல் தங்கள் திருக்கல்யாண குணங்களை எல்லாம் தமிழர்கள் மேல் ஏற்றிக் காட்டுவார்கள்.
தமிழ்ப் படங்களில் கேரளப் பெண்களை காமெடி மற்றும் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.
ஆனால், இந்தப் படத்தில் தயவு தாட்சண்யம் இன்றியும் ஒரு சார்பு இல்லாமலும், தமிழ் நாட்டில் நிறைய மலையாளிகள் நன்றாக இருக்கிறார்களே என்ற மனசாட்சிக் கூட இல்லாமல்
கேரள மலையாளிகள் தமிழர் மீது துவேஷம் காட்டுவதையும், அங்கே சிக்கிக் கொண்ட சில தமிழர்கள் மலையாளியாகவே தங்களை மாற்றிக்கொண்டு தப்பிப்பதையும் காட்டி இருக்கிறார் சேரன்.

மலையாளக் காதலியிடம் நாயகன் கோவிலுக்கு வரும் ஒரு தமிழ்ப் பெண்மணியைக் காட்டி,
“அவங்க எங்க தமிழ்நாட்டுப் பெண். மூக்குத்தி போட்டு இருக்காங்க பாரு… அது தான் தமிழ்ப் பெண்களின் அடையாளம். எங்கள் பெண்களுக்கு மூக்குத்தி அழகு” என்று சொல்ல,
கஷ்டப்பட்டு மூக்குத்திக் குத்திக் கொள்ளும் காதலி, “இப்ப நானும் தமிழ்ப் பெண்கள் போல அழகா இருக்கேனா?’’ என்று கேட்பதும், தமிழ் எழுத்துக்களால் கதாநாயகிக்கு சேலை கட்டி “தமிழ்ப் படிக்க ஆசை வந்ததா?” என்று கேட்பதும்,
அதை விட தைரியமாக “தமிழ் நாட்டின் வெட்கம் வந்ததா?’’ என்று கேட்பதும் அதன் பின்னர் தமிழ் நாட்டில் ஒரு படத்திலும் கூட யாரும் வைக்காத காட்சி.
தன்னை அடிக்க வந்த மலையாள இளைஞர்களை தனி ஒருவனாக சேரன் முன்னால் நின்று அடிக்க, அப்போது ஒருவன் பின்னால் இருந்து அடிக்கும்போது, பின்னால நின்னு அடிக்கிறீங்களேடா கோழைகளா” என்பது,
“மனசுக்குள்ளே” பாட்டில் கதக்களி ஆடிக்கொண்டே வாள் சண்டை போடும் நபரை, தமிழ் சினிமாவில் காட்டப்படும் ராஜாக்கள் கெட்டப்பில் சேரன் வாள் முனையில் தோற்கடிப்பது,
இதெல்லாம் இன்றைய இளைஞர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் வேற லெவல்.. சான்சே இல்லை… சம்பவம் பண்ணி இருக்கார் சேரன்.
பொதுவாகவே தமிழ் ஆண்களின் அக்கறை உணர்வில் மலையாளப் பெண்கள் நெகிழ்வார்கள். இந்தப் படத்தில் சேரன், கோபிகாவின் உடையைக் கிழித்த படகை உடனடியாக சரி செய்வது,
அவள் பாடிக் கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து வரும் சத்தம் கேட்காமல் இருக்க, கதவுகளை அடைத்து, புழுங்காமல் இருக்க மின் விசிறி வைப்பது எல்லாம்,
அவ்வளவு கட்டுப்பாட்டில் உள்ள வீட்டில் இருந்தும் தமிழப் பையனை அவள் காதலிப்பதை மனோதத்துவ ரீதியில் நியாயப்படுத்தும் காட்சிகள். அபாரம் சேரன்!
படகுப் போட்டியில் கேரளாவில் எவ்வளவு கண்மூடித்தனமாக வன்முறைகள் நடக்கும் என்பதை பூடகமாகச் சொல்லி இருக்கிறார் சேரன்.
பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என்று எபிசோட் எபிசோட் ஆக முடிக்காமல் கல்லூரிக் காதலியை மீண்டும் போய் பார்ப்பதற்குள் சென்னை தோழி பற்றி காட்டுவது, மேட்டிமையான திரைக்கதை உத்தி.
நாயகனை கல்லூரிக் காதலி சந்திக்கும் காட்சியில் நீண்ட நாட்களுக்குப் பின் அவள் தமிழ் பேசுவதும், அப்போது பேசப்படும் வசனங்களும் உலகத் தரம்.

காதலைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்ற ஆறுதல், இன்று குறைந்துகொண்டே வரும் உண்மைக் காதலில் தோற்றவர்களுக்கு ஆறுதல்.
இழந்த காதலிகள் கல்யாணத்துக்கு வரும் கடைசிக் காட்சியில், அந்தக் காட்சி முழுமையும், அப்படியே ஒட்டுமொத்தமாக கனத்து ஜொலிக்கிறது.
கல்யாணப் பரிசாக பணம் உள்ள கவரைத் தரும் பள்ளிக் காலக் காதலி, கை பிடித்து மோதிரம் போடும் கல்லூரிக் காதலி, அது தப்பாக இருக்கக் கூடாது என்பதற்காக மணமகளுக்கும் மோதிரம் போடுவது,
தோழி ஜாலியாக வெறுங்கையோடு போட்டோவுக்கு போஸ் தருவது,
நாயகனின் இரண்டு முன்னாள் காதலிகளும் (மல்லிகா, கோபிகா) என்னாளும் தோழியான பெண்ணும் (சிநேகா) சகஜமாகப் பேசிக்கொண்டிருக்க,
பள்ளிக் காதலியின் பிள்ளையைக் கல்லூரிக் காதலி கொஞ்சுவது இவற்றை நாயகன் பார்ப்பது… எல்லாம் இன்னும் அப்படியே புதுசாக இருக்கிறது.
(பின்னே வேறு யாரும் அந்த ஏரியவைத் தொட்டிருந்தால்தானே இது பழசாகும்)
உண்மையில் 2004-ஐ விட 2025-இல் தான் ஆட்டோகிராஃப்களை அழுத்தமாகக் போட வேண்டி இருக்கிறது.
நன்றி சேரன்!
– சு.செந்தில் குமரன்.