Take a fresh look at your lifestyle.

‘Black Bag’ – இன்னொரு முறை பார்க்கணுமா?

ட்ராபிக், எரின் ப்ரோக்கோவிச், ஓசன்’ஸ் லெவன் சீரிஸ், தி குட் ஜெர்மன் என்று விதவிதமான கதை சொல்லலைத் திரையில் கைக்கொண்டவர் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதோடு, இடையிடையே கமர்ஷியல் பிளாக்பஸ்டர்களையும் தந்து வருபவர். அவரது இயக்கத்தில் தற்போது உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது ‘பிளாக் பேக்’.

இது ‘உளவாளிகள் உலகம்’ பற்றியது. ஆம், உளவு அமைப்பில் பணியாற்றுபவர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது.

உடனே, ‘ஆக்‌ஷன்’, ‘அட்வெஞ்சர்’, ‘த்ரில்லர்’ வகைமைகளில் இப்படம் அமைந்துள்ளதா என்ற ஆர்வம் நம்மைத் தொற்றும். அதற்கேற்ப, இதன் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

  சரி, உண்மையிலேயே பரபரப்பூட்டும் திரைக்கதையைக் கொண்டிருக்கிறதா இந்த ‘பிளாக் பேக்’?

‘பி.பே.’ கதை என்ன?

பிரிட்டன் உளவுப் பிரிவு. அதில் பணியாற்றுபவர்களில் யாரோ ஒருவர் ‘செவரஸ்’ எனும் ரகசிய மென்பொருளை எதிரிகளுக்குக் கசியச் செய்திருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.

அந்த மென்பொருளைக் கொண்டு, அணு உலையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அதன் வழியே உலகப் போரை உருவாக்கிட முடியும்.

அந்தத் தகவல் கசிவு விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஐந்து பேர்களின் பெயர்களை ஜார்ஜ் வுட்ஹவுஸிடம் (மைக்கேல் பேஸ்பைண்டர்) கொடுக்கிறார் அவரது மேலதிகாரியான மீஷம்.

அதில் ஜார்ஜின் மனைவியும் அவரோடு உளவு அமைப்பில் பணியாற்றும் ஏஜெண்டுமான கேத்தரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

மீதமுள்ள நான்கு பேர் செயற்கைக்கோள் பட நிபுணர் கிளாரிசா, உளவுப்பிரிவில் பணியாற்றும் அவரது பாய்ப்ரெண்டான ஏஜெண்ட் ப்ரெடி, உளவுப் பிரிவைச் சேர்ந்த சைக்கியாட்ரிஸ்ட் ஜோ மற்றும் அவரோடு நெருங்கிய உறவைப் பேணி வரும் ஏஜெண்ட் ஜேம்ஸ் ஆகியோர் ஆவர்.

அவர்கள் நால்வரையும் அழைத்து கேத்தரினும் ஜார்ஜும் விருந்தளிக்கின்றனர். அப்போது, ஒவ்வொருவரிடத்திலும் சில பொய்கள் ஒளிந்திருப்பதைக் காண்கிறார் ஜார்ஜ். குறிப்பாக, மனைவி கேத்தரின் ஏதோ ஒன்றை மறைப்பதாக உணர்கிறார்.

அந்த வாரத்தில் புதன்கிழமையன்று ஜூரிச் நகரம் செல்லும் கேத்தரின், ரஷ்ய உளவு அமைப்பைச் சேர்ந்த குலிகாவைச் சந்திக்கிறார்.

அதனை செயற்கைக்க்கோள் மூலமாக கண்காணித்து அறிகிறார் ஜார்ஜ். அதன்பின்னரே உண்மையான பிரச்சனை அவர்களைச் சுற்றி வளைக்கிறது.

ஜூரிச்சில் உள்ள கேத்தரினை லண்டனில் இருக்கும் ஜார்ஜ் வேவு பார்க்கும் நேரத்தில், செயற்கைக்கோள் கண்காணிப்பில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் செல்கிறார் வீட்டுச் சிறையில் அதுவரை அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய உளவுப் பிரிவுத் தலைவர் ஒருவர். அவரிடத்தில் ‘செவரஸ்’ இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

அதாகப்பட்டது, அந்த மனிதர் உலக நாடுகளின் கண்காணிப்பில் மண்ணைத் தூவிவிட்டு ‘செவரஸை’ எடுத்துக்கொண்டு எங்கோ தப்பித்துச் செல்கிறார். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள அணு உலையைத் தகர்த்தால் பாதிக்கப்போவது என்னவோ உலக அமைதிதான்.

மேற்சொன்ன விஷயங்களைப் பகுத்தறிந்தால் ஜார்ஜ், கேத்தரின் செய்த இமாலயத் தவறுகள் தெரிய வருவதோடு, அவர்கள் தேசத்துரோகிகள் ஆகவும் முத்திரை குத்தப்படுவார்கள்.

தொடர்ந்து பல ஆண்டுகளாகப் புரிதல் கொண்ட தம்பதிகளாகத் திகழ்ந்து வருகின்றனர் என்ற சமூகத்தின் பார்வை பொய்யாகிப் போகும்.

ஜார்ஜ் – கேத்தரின் ஜோடி அந்த இக்கட்டான நிலைமையை எவ்வாறு எதிர்கொண்டது? அந்தக் குற்றத்தில் தொடர்புடைய அந்த துரோகி யார் என்று சொல்கிறது ‘பிளாக் பேக்’ படத்தின் மீதி.

உண்மையைச் சொன்னால், இது ஒரு ‘ஸ்பை ஆக்‌ஷன் அட்வெஞ்சர் த்ரில்லர்’ வகைமைக்கு ஏற்ற ஒரு கதை. ஆனால், இதனை ‘சைக்காலஜிகல் ட்ராமா த்ரில்லர்’

ஆக நமக்குத் தந்திருக்கிறார் இயக்கந்ர் ஸ்டீவன் சோடர்பெர்க்.

அதனால் என்ன என்கிறீர்களா? படம் முழுக்கக் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்க, அதில் தென்படும் முரண்களில் இருந்து கதையும் அடுத்தடுத்த காட்சிகளும் எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

‘இங்கிலீஷ் படம்னாலே ஆக்‌ஷன் தான்’ என்றிருக்கிற ஒரு பொது மனநிலையைக் கொண்டிருக்கிற ரசிகனுக்கு, அது எப்படி உவப்பானதாக இருக்கும்?

உளவாளிகளின் பொய்கள்!

உளவாளிகள் என்றாலே நிறைய பொய்கள் சொல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்குள்ளாக அப்படியொரு சூழல் உருவாகும்போது, பொய் சொல்வதற்குப் பதிலாக ‘பிளாக் பேக்’ என்று சொல்லிக் கொள்கின்றனர். அதனால்தான் படத்திற்கு அப்படியொரு டைட்டில்.

ஒரு பாத்திரம் பொய் சொல்கிறதா என்பதை அறிய, இன்னும் சில பாத்திரங்கள் அந்த விஷயம் பற்றி தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர வேண்டும். இதில் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கின்றன.

பொய் சொல்வதைக் கண்டறிகிற ‘லை டிடெக்டர்’ காட்சிகள் கூட இதில் இருக்கின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தவறுகள் செய்யும்போது, யாரெல்லாம் அதன் பின்னிருக்கும் உண்மையை அறிந்திருக்கின்றனர் என்பதைக் கூர்ந்து நோக்குவது இயலாத காரியம். அது இத்திரைக்கதையில் சொல்லப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக, உளவுப் பிரிவில் வெற்றிகரமாகப் பணியாற்றிக்கொண்டே இணை பிரியாமல் இருக்கும் தம்பதிகளாக நாயகனும் நாயகியும் திகழ்வதற்குப் புரிதலே காரணம்.

அதனை அடிப்படையாகக் கொண்டே இப்படத்தின் அடிப்படைக் கரு வார்க்கப்பட்டிருக்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அதற்காகவே, எழுத்தாக்கம் செய்த டேவிட் கெப் மற்றும் இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க்கை வாய் வலிக்கப் பாராட்டலாம்.

இப்படத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, ‘இன்னொரு முறை பார்க்க வேண்டுமா’ என்ற கேள்வி மனதுக்குள் எழும். அதுதான் இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

பீட்டர் ஆண்ட்ரூஸ் என்ற தந்தை பெயரிலும், மேரி ஆன் பெர்னார்டு என்ற தாய் பெயரிலும் இப்படத்தில் முறையே ஒளிப்பதிவு, படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் ஸ்டீவன் சோடர்பெர்க்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் பிலிப் மெசினா, திரையில் காட்டியிருக்கும் வண்ணத் தேர்வுகள் நம்மைக் காந்தமாய் கவர்ந்திழுக்கின்றன.

இப்படத்தின் டிஐ, விஎஃப்எக்ஸ் ஆகியன எது உண்மை? எது க்ரீன்மேட் ஸ்டூடியோவில் படம்பிடிக்கப்பட்டது என்பதை நம் அறிவில் இருந்து அகற்றியெடுக்கிறது.

இப்படத்தில் மைக்கேல் பாஸ்பெண்டர், கேட் பிளான்செட் உடன் மரிசா அபேலா, டாம் பர்கே, நவோமி ஹாரிஸ், ரெஹே ஜீன் பேஜ் மற்றும் பியர்ஸ் பிரஸ்னன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் காஸ்ட்டிங்கும் மேக்கிங்கும் ‘வெகு சாதாரணமாக’த் தெரிந்தாலும், படம் நகர நகர அதன் மீதான பிரமிப்பு எகிறி வருகிறது.

‘பிளாக் பேக்’ வழக்கமானதொரு ஹாலிவுட் படமல்ல; ஆனால், பார்த்து முடித்தபிறகு நிறையவே அது குறித்து அசை போடத் தோன்றும்.

’இன்னொரு முறை பார்த்தால் தெளிவாகப் பதில்கள் கிட்டுமோ’ என்று எண்ண வைக்கும். அந்த வகையில் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் ‘பிளாக் பேக்’.

-உதயசங்கரன் பாடகலிங்கம்