Take a fresh look at your lifestyle.

Badass Ravikumar – பிரபுதேவாவை வில்லனாக ரசிக்கலாமா?!

ஒரு சமூகத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிற வார்த்தைகள், சொலவடைகள் சில காலம் கழித்து ‘இழிவானதாக’, ‘மோசமானதாக’ கருதப்படுவதைக் கண்டு வருகிறோம்.

அந்தக் ‘கெட்ட வார்த்தை’களை ஆராய்ந்து அலசினால், அதனை உணர முடியும்.

போலவே, ‘இழிவான வார்த்தை’ களாகக் கருதப்படுபவற்றைக் ‘கொண்டாட்டத்திற்குரியதாக’ மாற்றுகிற வேலைகளும் சமகாலத்தில் நடந்து வருகின்றன.

அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்றை ‘டைட்டிலாக’ கொண்டிருக்கிறது ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’.

‘பேட்ஆஸ்’ என்பது சரியான உச்சரிப்பு அல்ல தான். ‘Badass’ எனும் ஆங்கில வார்த்தைக்கு எவராலும் எளிதில் சமாளிக்க முடியாதவன் என்ற அர்த்தத்தை எடுத்துக்கொள்கிறது இளைய தலைமுறை.

ஆனால் இவ்வார்த்தைக்கு ரொம்ப மோசமானவன், தொல்லை தருபவன், கடினமானவன், மூர்க்கம் நிறைந்தவன் என்று பல அர்த்தங்களைச் சொல்கிறது ஆங்கில அகராதி.

நம்மூர் பாஷையில் சுருக்கமாகச் சொன்னால் ‘அகராதி பிடிச்ச பய’ என்று கொள்ளலாம்.

இந்த வார்த்தையைப் பொதுவெளியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு, இது குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று அதுவே ‘பொதுச்சொல்’ ஆகியிருப்பது காலத்தின் கொடுமை தான்!

பேட்ஆஸ் ரவிக்குமார் படத்திற்கு கதை எழுதியிருப்பதோடு, இசையமைத்து, நாயகனாகவும் நடித்திருக்கிறார் ஹிமேஷ் ரேஷமய்யா.

இவர் ‘தசாவதாரம்’ படத்திற்கு இசையமைத்தவர்.

கெய்த் கோம்ஸ் இதனை இயக்கியிருக்கிறார்.

சரி, ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ தரும் அனுபவம் badஆ? goodஆ?

பே.ர. கதை!

‘எண்பதுகளில் வெளியான இந்தித் திரைப்படங்களுக்கு அர்ப்பணம்’ என்ற எழுத்துகள் ஒளிர, திரையில் படம் ஓடத் தொடங்குகிறது.

ரவிக்குமார் (ஹிமேஷ் ரேஷமய்யா) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் சில குற்றவாளிகளைத் தேடிக் கண்டறிந்து சட்டத்தின் முன்னே நிறுத்துகிறார்.

ஆனால், அவர்கள் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்படுகின்றனர். அப்புறமென்ன, சட்டத்தைக் கையிலெடுக்கும் ரவிக்குமார் அவர்களைத் தீர்த்துக் கட்டுகிறார்.

இந்த விஷயம் காவல்துறையில் இருக்கும் உயரதிகாரிகளுக்கும் தெரியும். ஆனாலும், ரவிக்குமாரின் ‘பேட்ஆஸ்’ குணாதிசயம் அவர்களை எதுவும் செய்ய விடாமல் தடுக்கிறது.

இந்த நிலையில், இந்திய அரசின் ரகசியங்கள் அடங்கிய ரகசிய ‘டேப்’ (?!) ஒன்றை வெளிநாட்டுக்குக் கடத்த ஒரு கும்பல் முயல்வதாகச் சொல்கிறார் ஒரு இண்டர்போல் அதிகாரி. அதையடுத்து, ஒரு சிறப்புப் படை அவர்களைப் பிடிக்க அமைக்கப்படுகிறது.

அந்தக் குழுவில் சேர்க்கப்படுகிறார் ரவிக்குமார். அவர், அந்தக் கும்பலைத் தேடி ஓமன் நாட்டுக்குச் செல்கிறார்.

ரவிக்குமார் அந்த கும்பலைத் தேடிப் பிடித்து, அவர்களிடத்தில் இருக்கும் அந்த ‘டேப்’ பை மீட்பார் என்பது நாம் அறிந்ததே.

இந்தக் கதையினூடே நாயகியைக் காணும் நாயகன், அவர்கள் காதல் முறிவுக்கான காரணம், ஏராளமான வில்லன்கள் வில்லிகள் உடன் விலையுயர்ந்த ஒரு நெக்லஸை திருடுவது என்று இப்படத்தில் பல விஷயங்கள் நிறைக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், எழுபதுகளின் இறுதி மற்றும் எண்பதுகளின் நடுப்பகுதி வரை இந்தித் திரையுலகில் நிலவிய கதை சொல்லலைக் கொண்டு ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அப்படங்களின் ஓருருவமாகத் திரையில் எதிரொலிக்கிறது. அந்தக் காலத்து படங்களை ரசித்தவர்களால் மட்டுமே, இதில் நிறைந்திருக்கும் கிண்டல் கேலிகளை ரசிக்க முடியும்.

அதேநேரத்தில், அப்படங்களுக்கு ‘மரியாதை’ செய்யும் வகையிலும் இப்படம் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஒரே நேரத்தில் ‘spoof’ ஆகவும், ‘tribute’ ஆகவும் அமைந்துள்ளது ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’.

அது இப்படத்திற்குப் பலமா, பலவீனமா என்பதைப் பிரித்தறியத் தெரிந்தால் போதும்; இது பிடித்தமானதாக இருக்குமா இல்லையா என்பதை முடிவு செய்துவிடலாம்.

எண்பதுகளில் இந்திப் படங்களை பிரதிபலிக்கும் வகையில் இதர மொழிப் படங்களும் இருந்த காரணத்தால், இப்படத்தின் உள்ளடக்கம் அங்கிருக்கும் ரசிகர்களையும் கூட ஈர்க்கும் வகையிலேயே உள்ளது.

வில்லனாக பிரபுதேவா!

நாயகன் ஹிமேஷ் ரேஷமய்யா இப்படத்திற்காகப் பெரிதாக மெனக்கெடவில்லை.

எண்பதுகளில் வெளியான அமிதாப்பச்சன், தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, ரிஷிகபூர் உட்படச் சில நடிகர்களின் படங்களைப் பார்த்துவிட்டு நேரடியாகப் படப்பிடிப்புத்தளம் வந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாயகியாக சிமோனா நடித்திருக்கிறார். பெரிதாக முகபாவனை இல்லாமல், அங்க அழகை நம்பிக் களமிறங்கியிருக்கிறார். உடலை வளைத்து நடனமாடச் சிரமப்பட்டிருக்கிறார்.

சிமோனாவின் சகோதரியாக நடித்துள்ள கீர்த்தி குல்ஹரி, அதனை ஈடுகட்டும் வகையில் திரையில் ஜொலிக்கிறார். இப்படத்தில் இவர் வில்லியாகவும் வருகிறார் (இதிலிருந்தே கதையின் இன்னொரு கிளையை யூகித்துக் கொள்ளலாம்).  

சன்னி லியோனும் இதில் ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார். அவரைப் பாடல்களில் பயன்படுத்துவதற்கு சரியான ‘லிங்க்’கை யோசித்த வகையில் இயக்குநர் ‘சபாஷ்’ பெறுகிறார்.

ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா செய்யும் ‘காமெடி அட்ராசிட்டிகள்’ அப்படியே எண்பதுகளை நினைவூட்டுகின்றன. ‘கடுப்பேத்துற மாதிரி காமெடி பண்ணக்கூடாது’ என்று சொல்கின்றன வகையில் இருக்கின்றன.

இது போக ராஜேஷ் சர்மா, பிரசாந்த் நாராயணன், சௌரஃப் சச்தேவா என்று பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அவர்களை எல்லாம் ஓரம்கட்டுவது போல, இதில் பிரபுதேவா வில்லனாக வந்து போயிருக்கிறார். நடனமாடியவாறே வில்லத்தனம் காட்டுகிற அவரது ஸ்டைல் சட்டென்று நம்மை வசீகரிக்கிறது.

கிட்டத்தட்ட ஹிமேஷுக்கு அடுத்தபடியாக அவரே திரையை ஆக்கிரமிக்கிறார். இந்தப் படத்தின் ப்ளஸ்களில் அதுவும் ஒன்று.

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு, சுனில் ஜெய்ஸ்வாலின் தயாரிப்பு வடிவமைப்பு, ராமேஷ்வர் பகத்தின் படத்தொகுப்பு மற்றும் விஎஃப்எக்ஸ், டிஐ உட்படப் பல தொழில்நுட்பப் பணிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, எண்பதுகளில் வெளியான படங்களில் வரும் ‘பேக் புரொஜெக்‌ஷன்’ உட்படப் பல உத்திகளைப் பிரதியெடுத்தாற் போன்று இதில் விஎஃப்எக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஈர்ப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது.

‘ஹூக்ஸ்ட்காப் ஹூக்கா பார்’, ‘பஜார் இ இஷ்க்’, ‘தந்தூரி டேஸ்’, ‘தில் கே தாஜ்மஹால் மெய்ன்’ பாடல்களோடு ‘தேரே பியார் மெய்ன்’ பாடலையும் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா.

பாடல்கள் அனைத்தும் இருக்கையில் இருந்து எழுந்து ‘ஆட்டம்’ போட வைக்கும் ரகத்தில் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சௌரவ் கங்குலி டிசர்ட்டை கழற்றித் தலைக்கு மேலாகச் சுழற்றினாரே, அப்படியொரு ‘வைப்’ தரவல்லவை.

பாடல்களைப் போலவே, பின்னணி இசையிலும் அதிர விட்டிருக்கிறார் ஹிமேஷ்.

மேற்கத்தியப் படங்களில் சில, ஏற்கனவே வெளியான திரைப்படங்களுக்கு ‘மரியாதை’ செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அப்படங்களின் உள்ளடக்கம் ‘ஸ்பூஃப்’ வகைமையில் அமைந்தாலும், அவற்றுக்கு மரியாதை செலுத்துகிற வகையில் நேர்த்தியாகவும் இருக்கும்.

அந்த தரத்தினைக் கொண்டிருப்பதே ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ படத்தின் யுஎஸ்பி.

போலவே, இப்படத்தின் இன்னொரு சிறப்பு ‘பஞ்ச் டயலாக்குகள்’. வசனங்களில் ஆங்காங்கே ‘பஞ்ச்’கள் இடம்பெறுவது திரையுலக வழக்கம். இப்படத்திலோ, ‘பஞ்ச் டயலாக்குகள்’ மட்டுமே வசனங்களாக இடம்பெற்றுள்ளன.

பிரபுதேவாவின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம், சன்னிலியோன் மற்றும் கீர்த்தி குல்ஹரியின் கிறங்க வைக்கும் கவர்ச்சி, ஹிமேஷ் ரேஷமய்யாவின் பாடல்கள் ஆகியவற்றைக் காணத் தயாராக இருந்தால், இப்படத்தின் உள்ளடக்கம் குறித்த எந்தச் சிந்தனையும் இன்றி தியேட்டருக்குப் படையெடுக்கலாம்.

குறிப்பாக, கும்பலாகச் சேர்ந்து சென்று படம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதொரு சாய்ஸ் இந்த ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’.

-உதயசங்கரன் பாடகலிங்கம்