Take a fresh look at your lifestyle.

காதலர் தினத்தில் தமிழில் 11 படங்கள் ‘ரிலீஸ்’!

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை காதலர் தினத்தன்று தமிழில் 11 சினிமாக்கள் ரிலீஸ் ஆகின்றன.

அவை:

‘2 கே லவ் ஸ்டோரி’, ‘பேபி & பேபி’, ‘பயர்’, ‘கண்நீரா’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ‘வெட்டு’, ‘படவா’, ‘அது வாங்கினால் இது இலவசம்’, ‘தினசரி’ மற்றும் ‘வருணன்’ .

இவற்றில் சில  படங்கள் குறித்த ஒரு முன்னோட்டம்.

‘2கே லவ் ஸ்டோரி’:

சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘2கே லவ் ஸ்டோரி’. கிரிக்கெட் வீரர் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.

“திருமண போட்டோ எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இதனை உருவாகியுள்ளேன் – இது 2 கே கிட்ஸ்களுக்கு  அறிவுரை சொல்லும் படம் அல்ல – அவர்களின் பெற்றோருக்கு அறிவுரை சொல்லும்  படம் – நான் இயக்கிய முதல் படம் போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுசீந்திரன்.

‘பேபி & பேபி’:

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ளது.

ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராத வகையில் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப் படம்.

‘ஃபயர்’:

தயாரிப்பாளரும் நடிகருமான ஜே. சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

“‘தங்கமீன்கள்’ படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்க இருந்தேன். இயக்குநர் ராம், மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்தக் கதையை உருவாக்கி, நானே இயக்க முடிவு செய்தேன். இது நான்கு பெண்களைப் பற்றிய கதை.

பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விகுறிதான் – அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது” என்கிறார், ஜே. சதீஷ்குமார்.

‘கண்நீரா’:

மலேசிய தமிழர்கள் உருவாக்கியுள்ள படம், ‘கண்நீரா’. மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஹரிமாறன் இசை அமைத்துள்ளார். முழுப்படமும் மலேஷியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

‘ஒத்த ஓட்டு முத்தையா’:

‘காமெடி கிங்’ கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள படம், ஒத்த ஓட்டு முத்தையா. அரசியல் நையாண்டி கலந்து உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகரும், டைரக்டருமான சாய் ராஜகோபால், இயக்கியுள்ளார்.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழில் பதினோரு படங்கள் ஒரே நாளில் வெளியாவது, இதுவே முதன்முறை என கோடம்பாக்கத்தில் குதூகலிக்கிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.