‘இதுதான் கதை’ என்று படம் முழுக்கப் பல காட்சிகளைத் திரையில் அடுக்கிவிட்டு, கிளைமேக்ஸில் ‘உண்மையாக நடந்தது இதுதான்’ என்று காட்டுவது சுவாரஸ்யம் தருகிற ஒரு உத்தி.
ஆனால், அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும்போது லாஜிக் மீறல்கள் ஏதும் ‘பெப்பரப்பே’ என்று தலை நீட்டிவிடக் கூடாது. கிட்டத்தட்ட அப்படியொரு கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘ஆசாதி’.
‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’ படத்தில் முதன்மைப் பாத்திரமாக வந்த ஸ்ரீநாத் பாசி, இதில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார். சாகர் எழுத்தாக்கத்தைக் கவனிக்க, ஜோ ஜார்ஜ் இதில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
‘பூந்தோட்ட காவல்காரன்’ வாணி விஸ்வநாத், லால், ரவீனா ரவி, சைஜு குரூப், மாலா பார்வதி, டி.ஜி.ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
‘ஆசாதி’ சுவாரஸ்யம் தருகிறதா?
‘ஆசாதி’ கதை!
ஆங்கிலப் படமான ‘தி ஷஷாங் ரிடெம்ப்ஷன்’னில் ஆயுள் தண்டனைப் பெற்ற நாயகன் பல ஆண்டுகள் நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயலாற்றி, கடுமையான காவலைக் கொண்ட ஒரு சிறைச்சாலையில் இருந்து தப்புவதாகக் காட்டப்பட்டிருக்கும்.

‘பிரிசன் பிரேக்’ போன்ற சீரிஸ்கள் கூட இந்த ரகத்தில் உண்டு.
மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட அளவில் இதையொட்டித் திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
சப்ஜெயிலில் இருக்கும் சில கைதிகள் தப்பிப்பதைக் காட்டியது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய ‘தக்ஸ்’.
‘ஸ்வந்தரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் படத்தின் ரீமேக்கான அப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு கதைக்களத்தைக் கொண்டது ‘ஆசாதி’. ‘எனிதிங் ஃபார் ஹெர்’ எனும் பிரெஞ்சு படத்தின் சாயலில் இதன் கதை அமைந்துள்ளது.
உள்ளூர் அரசியல் பிரமுகரின் மகனை, அவரது வீட்டில் வைத்துக் கொலை செய்த வழக்கில் கங்காவுக்கு (ரவீனா ரவி) ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தனது தங்கையைக் கொலை செய்தவனைப் பழிவாங்க அவர் செய்த காரியம் அது.
ஆனால், நீதிமன்ற வளாகத்திலேயே கங்காவின் தந்தை சிவனையும் (லால்) கணவர் ரகுவையும் கொல்ல எதிர்தரப்பு திட்டமிடுகிறது. ஆனால், அது தோல்வியில் முடிவடைகிறது.
தண்டனை அறிவிக்கப்பட்டபோது, கங்கா கர்ப்பமுற்றிருக்கிறார். சில மாதங்களில் அவர் பிரசவிக்கிற தருணம் நெருங்குகிறது.
கங்காவை அரசு மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள். அவருக்குப் பெண் உறவினர்கள் இல்லாத காரணத்தால், அவருடன் இருக்கும் வயதான பெண் கைதி ஒருவரைத் துணைக்கு அனுப்ப ஏற்பாடாகிறது.
அதேநேரத்தில் கங்காவையும் குழந்தையையும் மருத்துவமனையில் இருக்கும் போலீஸ் காவலை மீறி அழைத்துச் செல்லத் திட்டமிடுகின்றனர் சிவன் மற்றும் ரகு (ஸ்ரீநாத் பாசி).
மருத்துவமனையில் இருக்கும் ஒரு நர்ஸ் மற்றும் பிரசவத்திற்குத் தங்கள் வீட்டுப் பெண்களை அழைத்து வந்த இரண்டு ஆண்களையும் அவர்கள் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வருகின்றனர்.
குழந்தைப் பிறந்ததும் நள்ளிரவில் தாயையும் சேயையும் தப்பிக்க வைப்பது அவர்களது திட்டம்.
எல்லாமே சுமூகமாகச் சென்று கொண்டிருக்கிறது எனும் நிலையில் ஒரு பிசகு நிகழ்கிறது. கங்கா உடன் வந்த பெண்மணியையும் தங்களது திட்டத்தில் இணைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆனால், அவரோ விஷயத்தைக் காவலுக்கு வந்த போலீசாரிடம் சொல்லிவிடுகிறார். அது சிறைக் கண்காணிப்பாளர் காதுக்குச் செல்ல, அவரோ ரகசியமாக விசாரணை நடத்துவதற்காகத் தனக்குத் தெரிந்த ஒரு பெண் அதிகாரியின் உதவியை நாடுகிறார். அவரது பெயர் ராணி (வாணி விஸ்வநாத்).
சில மணி நேரங்களிலேயே கைதியை மருத்துவமனையில் இருந்து தப்ப வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதை உறுதிப்படுத்துகிறார் ராணி. அது மட்டுமல்லாமல் ரகுவையும் கைது செய்கிறார்.
அடுத்த சில மணி நேரங்களில் ரகுவை விடுவிக்கிறார் ராணி. ஆனாலும், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்.
காவல் பணியில் இருக்கும் போலீசார் மிரட்டியும் தாக்கியும் அவரைப் பயமுறுத்த முயல்கின்றனர். ஆனால், ரகுவின் செயல்பாட்டில் மாற்றம் இல்லை.
அந்தக் காலகட்டத்தில், அவருக்கு உதவிகரமாக இருந்தவர்களின் முகத்திரையும் கிழிகிறது. அவர்கள் விலகிச் செல்கின்றனர்.

இத்தனைக்குப் பிறகும் அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு கைதியை விடுவித்து அழைத்துச் செல்லும் அந்தக் கும்பலின் முயற்சி வெற்றி பெற்றதா?
ரகுவுக்கு இதர நபர்கள் உதவினார்களா? இறுதியில் என்ன ஆனது என்று சொல்கிறது ‘ஆசாதி’ யின் பின்பாதி.
கைதியை விடுவிக்கச் சிறையைத் தகர்ப்பதற்குப் பதிலாக, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மருத்துவமனையை நாயகன் தேர்ந்தெடுப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
யோசிக்கவிடாத திரைக்கதை!
சாகர் இதன் கதை திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார். வழக்கில் தீர்ப்பு கூறப்படுவதில் தொடங்கும் திரைக்கதை, அடுத்து மருத்துவமனைக்குக் கைதிகளை அழைத்துச் செல்வதை நோக்கி நகர்கிறது.
அதன்பிறகே நாயகனின் பின்னணி விளக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற காட்சிகள் எல்லாம் நம்மை ஒரே திசையில் அழைத்துச் செல்கின்றன.
ஆனால், இறுதியில் ‘பீட்சா’ பட பாணியில் நம் காதுகளில் ஒரு பூக்கூடையைச் சூட்டிவிடுகிறார் சாகர்.
‘இது போன்றதொரு திருப்பம் நிச்சயம் இருக்கும்’ என்பவர்கள் கூடத் திரைக்கதையின் போக்கில் அதனை மீண்டும் யோசிக்கத் தவறிவிடுவார்கள். அதுவே ‘ஆசாதி’யின் சிறப்பு.
அதேநேரத்தில், அந்த ‘கிளைமேக்ஸ் ட்விஸ்ட்’ மொத்த திரைக்கதை குறித்தும் கேள்விகள் பலவற்றை எழுப்பக்கூடியது.
அது தெரிந்தும், இடறல்கள் இல்லா வண்ணம் இப்படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குநர் ஜோ ஜார்ஜ். ‘ஆசாதி’க்குப் பிறகு அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைக்கலாம்.
இப்படத்தின் உள்ளடக்கத்தில் உலகப் படங்களின் சாயல் தென்படுகிறது எனச் சில ரசிகர்கள் குறை கூறலாம். அதற்கான அனேக வாய்ப்புகள் ‘ஆசாதி’யில் உண்டு.
ஒளிப்பதிவாளர் சனீஷ் ஸ்டேன்லி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சஹஸ் பாலா கூட்டணி திரையில் ஒவ்வொரு பிரேமும் செறிவானதாகத் தெரிய மெனக்கெட்டிருக்கிறது. டிஐ, விஎஃப்எக்ஸ் குழுவினரும் அதற்கேற்றவாறு உழைத்திருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் நௌபால் அப்துல்லா கிட்டத்தட்ட 90 சதவீதம் காட்சிகள் வரை ‘அடுத்தது என்ன’ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் படத்தைத் தொகுத்திருக்கிறார்.
கிளைமேஸ் திருப்பத்தை மட்டும் அவசர அவசரமாக விவரித்திருப்பதைத் தவிர்த்து, அதில் நிதானத்தைக் காட்டியிருக்கலாம்.
இசையமைப்பாளர் வருண் உன்னி தனது பங்களிப்பினால் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கனமானதாக மாற்றியிருக்கிறார்.
இது போக இன்னும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இதில் கொட்டப்பட்டிருக்கிறது. அதுவே, இப்படம் சுமாரான பட்ஜெட்டில் அமைந்தது என்ற எண்ணத்தை மழுங்கடிக்கிறது.
நாயகன் ஸ்ரீநாத் பாசி தொடக்கக் காட்சிகளில் ‘பே’வென்று முழித்தவாறே ரொம்பச் சாதாரணமானவராகக் காட்டப்பட்டிருக்கிறார்.
அதுவே போலீசாருடன் அப்பாத்திரம் மல்லுக்கட்டுகிற காட்சிகளில், அதன் மீது நமது கரிசனம் குவியக் காரணமாகிறது.
வழக்கம்போல, லால் முரட்டுத்தனமான தோற்றத்துடன் இதிலும் வந்து போயிருக்கிறார்.
வாய் பேச இயலாத பெண்ணாக வரும் ரவீனா ரவிதான் இக்கதையின் மையமாக வருகிறார். அளவாக, அதேநேரத்தில் வலுவானதாக அமைந்திருக்கிறது அவரது இருப்பு.

மாலா பார்வதி, டி.ஜி.ரவி, சைஜு குரூப், ஆபிரம் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் சர்மா, கிலு ஜோசப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் உண்டு.
அவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுகிறது வாணி விஸ்வநாத்தின் இருப்பு. திரைக்கதையைப் பரபரப்பானதாக மாற்றுகிற ராணி பாத்திரத்தைத் திறம்படத் திரையில் பிரதிபலித்திருக்கிறது அவரது இத்தனை ஆண்டு கால அனுபவம்.
பலத்த காவலைக் கொண்ட சிறையில் இருந்து மட்டுமல்ல, அதிலிருந்து வெளியே அழைத்து வரப்படுகிற இடங்களில் இருந்தும் கூடக் கைதிகளால் தப்ப முடியாது.
அதற்கேற்ற பாதுகாப்பு உத்திகள் இருக்கும். அதனை மீறித் தப்பிப்பது முடியாத காரியம் என்ற ரசிகர்களின் எண்ணத்தைத் தனக்குச் சாதமாக்கி ‘ஆசாதி’யைத் தந்திருக்கிறது சாகர் & ஜோ ஜார்ஜ் கூட்டணி.
எத்தனை லாஜிக் மீறல்கள் மூளையில் வரிசைக் கட்டி நின்றாலும், ‘அடுத்து என்ன நடக்குதுன்னு பார்ப்போமே’ என்று திரையை உற்றுநோக்க வைத்த வகையில் கவர்கிறது இந்த ‘ஆசாதி’.
– உதயசங்கரன் பாடகலிங்கம்