எம்.ஜி.ஆர்., சிவாஜி சாம்ராஜ்யத்தில் வெள்ளித்திரையில் ஆதிக்கம் செலுத்திய இயக்குநர்கள் என ஏ.பி. நாகராஜன், பி.ஆர். பந்துலு, பீம்சிங், கே.எஸ். கோபால கிருஷ்ணன், கே. பாலசந்தர், பி. மாதவன், ஏ.சி. திருலோகசந்தர், ப. நீலகண்டன் உள்ளிட்ட ஒரு டஜன் பேரைச் சொல்லலாம்.
சர்வ சாதாரணமாக வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த இந்த ஜாம்பவான்கள், காமிராவுக்கு பின்னால் நின்று நடித்தார்களே தவிர, அரிதாரம் பூசிக்கொண்டு வெள்ளித்திரைக்குள் தங்கள் பிம்பங்களைக் காட்டத் துணிந்ததில்லை.
பிற்காலத்தில் இயக்குநர் – நடிகர் என்ற இரட்டை சவாரிப் பயணத்துக்கு தூண்டுகோலாக இருந்தவர் என்று பாரதிராஜாவை சொல்லலாம்.
‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தில் தன்னை தானே அவர் நாயகனாக அறிமுகம் செய்து கொண்டார்.
ஓர் இயக்குநர் – படம் முழுக்க வரும் நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டது தமிழில் இதுவே முதன் முறை.
அல்லி நகரத்தில் இருந்து மெட்ராஸ் வரும்போது ‘மற்றொரு சிவாஜி’யாக உருவெடுக்க வேண்டும் என்பதே பாரதிராஜாவின் இலக்காக இருந்தது.
இதற்கு முன் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெள்ளிவிழா கண்டு கோடம்பாக்கத்தை மிரட்சியுற செய்திருந்தன.
‘கல்லுக்குள் ஈரம்’ மூலம் நடிப்பு தாகம் தீர்த்துக் கொண்டாலும், அந்தப் படத்தின் தோல்வியால் – நடிகன் கனவை மண்ணுக்குள் ஆழ குழித் தோண்டி புதைத்து விட்டு பல ஆண்டுகள் இயக்குநராக தொடர்ந்தார்.
ஹீரோவாகவும், இயக்குநராகவும் வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகர் பாக்யராஜ்.
சாதாரண வெற்றி அல்ல. இமாலய வெற்றி என்று சொல்வது சாதாரண வார்த்தை. ரஜினி, கமல் படங்களின் வசூலை முறியடித்தது அவரது ‘முந்தானை முடிச்சு’.
பாக்யராஜின் சாதனைகளுக்கு நிகரானவர் டி.ராஜேந்தர். இருவரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்களே.
டி.ஆர். ஆரம்பக் காலத்தில் கதை – வசனம் – இயக்கம் என தன்னை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டாலும், கொஞ்ச நாட்களில் – நடிகர் என்ற பரந்த நிலப்பரப்பில் கால் பதித்து உச்சம் தொட்டவர்.
இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்தில், அவரது பாடல் கேசட் விற்பனையை, டி. ஆரின் பாடல் கேசட் விற்பனை மிஞ்சியது உண்டு.
தானே – கவி; தானே – இசை; தானே – ஹீரோ; தானே – எழுத்து – இயக்கம் என ஒரு மாமாங்கம் வேறு எந்த ஒரு ‘டெக்னீஷியனின்’ துணையின்றி தனி ஆவர்த்தனம் செய்து, ஜெயித்த முதல் நபர் டி.ஆர். மட்டுமே.
அஜீத்தை வைத்து வாலி, விஜயை வைத்து குஷி ஆகியப் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா.
‘நியூ’ படத்தில் ஹீரோவாக திணிக்கப்பட்டார். அந்தப் படத்தில் அஜீத் தான் நடிப்பதாக இருந்தது. அஜித் விலகி கொண்டார். எஸ்.ஜே.சூர்யா ஹீரோ ஆனார்.
நியூ வெற்றியால் அடுத்த படத்துக்கு ‘பி.எப்’ என்று பெயர் சூட்டும் அளவுக்கு துணிந்தவர், எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பணிந்து ‘அ..ஆ…’ என புது நாமகரணம் சூட்டினார். அதிலும் ஹீரோ ஆனார். ஆனால் படம் தோல்வி.
எனினும் சில படங்களில் நாயகனாகத் தொடர்ந்தார்.
எடுத்த எடுப்பிலேயே ஹீரோ – இயக்கம் என இரட்டைக் காளைகளில் பயணித்து, ‘புதியபாதை’ போட்டவர் – பார்த்திபன். பின்னர் ரெட்டை காளைகள் கை கொடுக்காத நிலையில் ஒற்றைக் காளையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
எண்பதுகளில் வெள்ளி விழாப்படங்களைக் கொடுத்த ஆர்.சுந்தரராஜன், ‘நூறாவது நாள்’ என பல ‘நூறு நாள்’ படங்கள் கொடுத்த மணிவண்ணன் ஆகியோர், ஒரு தேக்க நிலைக்குப் பின் முழு நேர நகைச்சுவை நடிகர்கள் ஆனார்கள்.
ஒன்றிரண்டு அல்லது நாலைந்து படங்களைத் தந்த மனோபாலா, சந்தான பாரதி, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் இயக்கத்தைக் கைவிட்டாலும் நடிப்பை கெட்டியாகப் பிடித்து கொண்டனர்.
‘என் ராசாவின் மனசிலே’ நாயகன் ராஜ்கிரண், அதற்கு முன்பு சினிமா விநியோஸ்தராக இருந்தவர். முதல் படம் சூப்பர் – டூப்பர் அடித்தது.
அடுத்து இயக்கம் – நடிப்பு என 2 வெள்ளிவிழாப் படங்களையும், பின்னர் நடிகராகச் சில வெளிறிப்போன படங்களையும் தந்து காணாமல் போனார். ‘ரீ-என்ட்ரீ’யில் பேர் வாங்கி கொண்டிருக்கிறார்.
இயக்குநர்களாக முதல் இரண்டு படத்திலேயே உச்சம் தொட்ட அமீரும், மிஷ்கினும் நாயகனாக ஒளிர முடியவில்லை.
-மு.கஜேந்திரன்.