Take a fresh look at your lifestyle.

பிரபலங்கள் மக்களுடன் நெருக்கமாவதற்கு என்ன காரணம்?

உதவி என்பது கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றைக் கொடுப்பதாகும். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை வந்துவிடுவதில்லை. இதைச் செய்வதற்கென ஒரு இளகிய மனம் வேண்டும்.

கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நடிகை, நடிகர்களை விட குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் பிரபலங்கள் பல உதவிகளை மக்களுக்கென்று செய்து கொண்டு வருகிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

கேப்டன் விஜயகாந்த்

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் தனித்து அடையாளம் காணப்பட்டவர்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி அவரது எளியும் உதவும் குணமும்தான் அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.  நடிப்பைத் தாண்டி மக்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார். சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பாரி வள்ளலை போல் வாரி வழங்கியவர் விஜயகாந்த்.

KPY பாலா

2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரையுலகினர் என பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர்.

அப்போது சென்னை மைக்ரோ என்ற டேக்கின் வழியாக மக்களின் சிரமங்களை அறிந்து நடிகர் சித்தார்த்தும், காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜியும் நேரில் சென்று உதவிக்கரம் நீட்டினர். இதையடுத்து இருவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.

அதே போல கடந்த மழை வெள்ள பாதிப்பின்போது சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்பட்ட நபர் ‘கலக்கப் போவது யார்’ பாலா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யார், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த பாலா, மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்.

மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு தனது வங்கி சேமிப்பில் இருந்து தலா ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

ஏறக்குறைய 200 குடும்பங்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் என இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அப்போது பேட்டியளித்த பாலா எனக்கு வாழ்க்கை கொடுத்த சென்னையின் மக்கள் சிரமம்படும் போது எப்படி என்னால் ஒதுங்கி நிற்க முடியும்? அதனால் தான் என்னுடைய சேமிப்புப் பணத்தை கொடுத்து உதவ முன்வந்ததாகத் தெரிவித்தார்.

இரண்டு லட்சம் ரூபாயோடு பாலா நிறுத்திவிடவில்லை. சில தினங்கள் பிறகு வேறொரு பகுதியில் 200 குடும்பங்களுக்குத் தலா ஆயிரம் ரூபாயும், நிவாரணப் பொருட்களும் வழங்கினார்.

அறந்தாங்கி நிஷா

சென்னை மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி செய்தனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகை அறந்தாங்கி நிஷா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவினார். இங்குள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக திருச்சியில் இருந்து நிவாரண பொருட்களுடன் சென்னை வந்தார் என்பது அப்போது பலரால் கவனிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல சமயங்களில் பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்து வருகிறார். இதை வெளியில் சொல்லிக் கொள்ளாதது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

பிளாக் பாண்டி

2006-ம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான பிளாக் பாண்டி, அதைத் தொடர்ந்து, வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ படத்தின் மூலம் பிரபலமானவர், நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி.

அதற்குமுன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரது திறமையை வெளிக்கொண்டு வந்தது ‘அங்காடித்தெரு’ திரைப்படம் தான்.

அதேசமயம், பிளாக் பாண்டிக்கு ரசிகர்கள் அறியாத இன்னொரு முகம் இருக்கிறது. அதுதான் மற்றவர்களுக்கு உதவும் முகம். ஆம்.., ‘உதவும் மனிதம்’ என்ற அமைப்பை உருவாக்கி கஷ்டப்படும் பலருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார் பிளாக் பாண்டி.

இவரது அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து கைகொடுத்து வருகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

பிளாக் பாண்டிக்குள் இப்படி ஒரு எண்ணம் எப்படி தோன்றியது? எப்போது தோன்றியது? இதுகுறித்து பேசிய நடிகர் பிளாக் பாண்டி, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று ஒரு அமைப்பை உருவாக்கி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் தோன்றிவிட்டது என்றார்.

இந்த அமைப்பின் மூலம் பலருக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, ரத்த தானம் ஆகியவற்றை செய்து வருகிறோம். இன்னும் குறிப்பாக ஈமக்கிரியை கூட செய்ய வசதி இல்லாதவர்களுக்கு அதற்கான பணியை நாங்களே முன்னின்று செய்து கொடுக்கிறோம் என்றுக் கூறியுள்ளார்.

மகாநதி சங்கர்

தமிழ்ப் படங்களில் துணை நடிகராகவும் எதிர்மறை வேடங்களிலும் தோன்றியவர் ‘மகாநதி’ சங்கர். வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் அறியப்படும் ‘மகாநதி’ சங்கருக்கு, மக்களுக்குத் தெரியாத இன்னொரு முகம் உள்ளது. அது தான் உதவி செய்யும் உள்ளம்.
திரைத்துறையைச் சேர்ந்த எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ள இவர், பொது இடங்களில் மக்களுக்கு அன்னதானமும் வழங்கியுள்ளார். வறுமையில் வாடும் பொதுமக்களைக் கண்டறிந்து நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.
படத்தில் வில்லன் நிஜத்தில் வாயில்லா ஜீவன்களின் ஹீரோ என்றழைக்கப்படும் இவர் தினமும் நாய்களுக்கும், காகங்களுக்கும் உணவளித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

மயில்சாமி

காணும் இடமெங்கும் தண்ணீர். வெள்ளநீரில் சென்னையும் புறநகர் பகுதியும் தத்தளிக்கிறது. 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து உதவிய நடிகர் மயில்சாமியை மக்கள் பலரும் நினைவு கூறுகின்றனர்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் முதல் ஆளாய் களத்தில் வந்து நின்றவர் நடிகர் மயில்சாமி. கொரோனா காலத்திலும் பலருக்கும் உதவி செய்துள்ளார்.

வடபழனி, சாலிகிராமம் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்தார். ஒரு நடிகராக இல்லாமல் சக மனிதராக உணவு உள்பட அனைத்து உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதியன்று வெள்ளம் சூழ்ந்தப் பகுதிகளில் படகில் போய் உணவு கொடுத்து உதவி செய்தார். அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் அவரது சேவையைப் பலரும் புகழ்ந்தனர்.

இதுபோல் தன்னலமில்லாமல் செய்யும் உதவியால்தான் திரைப்பிரபலங்கள் பலர் மக்கள் மனதில் நெருக்கமாக உணர வைக்கின்றனர். இதனால் தான் விஜயகாந்த், மயில்சாமி உள்ளிட்டோர் இப்பூவுலகில் இருந்து மறைந்தாலும் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

– மூ.நிவேதா, எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மாணவி.