ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, ஆர்யா – நயன்தாரா நடித்த ‘ராஜா ராணி’ படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்த அட்லீ இரண்டாவது படத்தில் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தார்.
2016 ஆம் ஆண்டு இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. அடுத்தடுத்து விஜய் நடித்த மெர்சல், பிகில் ஆகியப் படங்களை இயக்கினார். இரண்டும் வசூல் குவித்தன.
ஷாருக்கான் தயாரித்து நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்தியிலும் கால் பதித்தார், அட்லீ.
பான் இந்தியா படமாக உருவான ‘ஜவான்’ படம் ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
பாலிவுட்டில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள அட்லீ, மும்பையில் அலுவலகம் ஒன்றையும் திறந்துள்ளார்.
அந்தக் கட்டிடத்தின் மதிப்பு 40 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஜவான் வெற்றிக்கு பிறகு சில வாரங்கள் ஓய்வெடுத்த அட்லீ, விஜய் – ஷாரூக்கான் கூட்டணியில் புதிய படம் எடுக்க முயற்சி மேற்கொண்டார்.
அந்தப் படம் பேச்சு வார்த்தையிலேயே நிற்க, இப்போது அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார்.
‘புஷ்பா’ படம் மூலம் நாடு முமுவதும் கவனம் ஈர்த்த அல்லு அர்ஜுன், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
அதனை முடித்து விட்டு, அட்லீ டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தெரிகிறது.
கோலிவுட், பாலிவுட்டைத் தொடர்ந்து டோலிவுட்டிலும், கொடி நாட்டுங்க, அட்லீ.
– பாப்பாங்குளம் பாரதி.