சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து ‘யூடியூப்’ சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்தார். நடிகை த்ரிஷா குறித்தும் அவதூறாக சில கருத்துகளை சொல்லி இருந்தார்.
அவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் ஏ.வி.ராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லப்போகிறேன் என்று கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார்.
‘கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களைத் தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் திரிஷா ஆவேசமாக அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு ராஜு வீடியோ ஒன்றை வெளியிட்டார். தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரை மன்னிக்கும் மனநிலையில் திரிஷா இல்லை. ‘ஏவி.ராஜு, தனது அவதூறான கருத்துக்காக என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்தி திரிஷா அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், தன்னைப் பற்றிய கீழ்த்தரமான பேச்சுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் சேனல்களில் இந்த மன்னிப்பை வீடியோ மூலம் வெளியிட வேண்டும்.
தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அவதூறு வீடியோவை அனைத்து தளங்களிலிருந்தும் நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என நோட்டீசில் திரிஷா தெரிவித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.