Take a fresh look at your lifestyle.

மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்!

68

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் குமாருக்கு, சினிமாவைத் தாண்டி பைக் மற்றும் கார்கள் மீது அலாதியான அன்பு உண்டு.

கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபாடு கொண்ட அஜித், சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே பைக் ரேஸில் பங்கேற்று பரிசுகளைக் குவித்துள்ளார்.

2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை மிகுந்த ஈடுபாட்டுடன் கார் பந்தயத்தில் பங்கேற்று வந்த அஜித் குமார், F3 போன்ற கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு கார் பந்தயத்திலும் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

எனினும் அஜித், பைக்கில் அவ்வப்போது உலகப் பயணம் சென்று வருவார். பைக்கில் நண்பர்களுடன் சுற்றுப்பயணமும் மேற்கொள்வார். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், மீண்டும் கார் பந்தயத்தில் களம் இறங்க தீர்மானித்துள்ளார்.

2025-ம் ஆண்டு துபாயில் ‘ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங்’ போட்டி நடக்க உள்ளது. இதில் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக ‘The Federation of Motor Sports Clubs of India’ அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் தலைவர் அக்பர் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில், அஜித், மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த உள்ளார் – செய்யும் எந்த தொழிலிலும் திறனை வெளிப்படுத்தும் அஜித்துக்கு வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

அஜித், ‘ஜிடி4’ சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸ் போட்டியில் பங்கேற்க உள்ளதை அவரது நண்பரும், கார் பந்தய வீரருமான நரேன் கார்த்திகேயன் உறுதி படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘வரும் 2025ஆம் ஆண்டு என்னுடைய நண்பர் அஜித்குமார், மோட்டார் ஸ்போர்ட்ஸின் ஜிடி ரேஸிங் பிரிவில் கம்பேக் கொடுக்க கடுமையாக உழைத்து வருவதைத் தெரிந்து கொண்டேன்’ என கூறி உள்ளார்.

‘அஜித், உண்மையாகவே ஒரு ஆளுமைதான் – தனித்துவமான நடிகர் மட்டுமின்றி, விரைவான ஒரு ரேஸரும் கூட – 2010 ஆம் ஆண்டு ‘FIA F2′ பிரிவில் அவர் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது – அவரது திறமைகளுக்கு எல்லைகள் இல்லை – எல்லாவற்றுக்கும் மேல், அவர் ஒரு அற்புதமான மனிதர்.

வாழ்த்துகள் தல! என்னால் உங்களுக்கு பயிற்சி கொடுக்க முடிந்து, உங்களுக்கு மிகவும் பிடித்த ரேஸிங் போட்டிக்கு உங்களை மீண்டும் கொண்டு வர முடிந்தால் அது என்னுடைய பாக்கியம்’ என ‘நரேன் கார்த்திகேயன் சிலாகித்துள்ளார்.

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

‘குட் பேட் அக்லி’ படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. அதனை விரைவில் முடித்து விட்டு, அஜித் மோட்டார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்த உள்ளார்.

அஜித்தின், ‘விடாமுயற்சி’ நிச்சயம் பலன் தரும்.

– பாப்பாங்குளம் பாரதி.